நாட்டை விட்டு வெளியேறிய ஷேக் ஹசீனா – வங்கதேசத்தில் ராணுவ ஆட்சி!

Published On:

| By Kavi

வங்க தேசத்தில் மாணவர்களின் போராட்டத்தால் அசாதாரண சூழல் ஏற்பட்டிருக்கும் நிலையில், அந்நாட்டு பிரதமர் ஷேக் ஹசீனா நாட்டை விட்டே வெளியேறியிருக்கிறார்.

வங்கதேசத்தில் 1972 முதல் சுதந்திர போராட்ட தியாகிகளின் வாரிசுகளுக்கு அரசு பணிகளில் 30 சதவீத இடஒதுக்கீடு வழங்கப்பட்டு வந்தது. பிற்படுத்தப்பட்டவர்களுக்கு 10%, பெண்களுக்கு 10%, சிறுபான்மையினருக்கு 5% மற்றும் உடல் ஊனமுற்றோர்களுக்கு 1% இட ஒதுக்கீடு வழங்கப்படுகிறது. மீதமுள்ள 44 சதவிகிதம் பொதுப்பிரிவினருக்கு வழங்கப்படுகிறது.

2018ஆம் ஆண்டு இந்த 30 சதவீத இடஒதுக்கீட்டை பிரதமர் ஷேக் ஹசீனா ரத்து செய்தார்.  ஆனால் வங்கதேச உயர் நீதிமன்றம் 30 சதவீத இடஒதுக்கீடு செல்லும் என்று அறிவித்தது.

அப்போது இந்த தீர்ப்பை எதிர்த்து கடந்த ஜூலை மாதம் மாணவர்கள் போராட்டத்தில் குதித்தனர். போராட்டக்காரர்கள் மீது காவல்துறையினர் நடத்திய தாக்குதலில் 200க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர்.

இந்நிலையில் உயிரிழந்தவர்களுக்கு நீதி கேட்டு போராட்டம் நடத்தப்பட்டது.

நேற்று பல்லாயிரக்கணக்கான மாணவர்கள், வங்கதேச தலைநகர் டாக்காவின் மத்திய சதுக்கத்தில் குவியத் தொடங்கினர். மேலும், பல்வேறு நகரங்களிலும் போராட்டம் வெடித்தது. இந்த போராட்டம் வன்முறையாக மாறிய நிலையில் போலீசார், போராட்டக்காரர்கள் என 100க்கும் மேற்பட்டோர் உயிரிழந்ததாக அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

வங்கதேசத்தில் வன்முறை வெடித்திருக்கும் நிலையில், நேற்று முப்படை தளபதிகள், காவல் துறை தலைவர் உட்பட பல்வேறு பாதுகாப்பு அதிகாரிகளுடன் பிரதமர் ஷேக் ஹசீனா ஆலோசனை நடத்தினார்.

அப்போது, “போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் மாணவர்கள் அல்ல தீவிரவாதிகள். நாட்டை சீர்குலைக்கும் வகையில் இத்தகைய செயல்களில் ஈடுபடுகின்றனர். இதை இரும்புக்கரம் கொண்டு ஒடுக்க வேண்டும்” என்று ஷேக் ஹசினா கூறியிருக்கிறார்.

தொடர்ந்து ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்ட போதும் போராட்டம் தீவிரமடைந்தது.

கட்டிடங்கள், வாகனங்களுக்கு போராட்டக்காரர்கள் தீவைத்தனர். போராட்டத்தைக் கட்டுப்படுத்த காவல் துறையினர் கையெறி குண்டுகளை வீசினர். இதனால் அங்கு பதற்றமான சூழல் நிலவியது

எனினும் மாணவர்கள் போராட்டத்தை தீவிரப்படுத்தினர். போராட்டக்காரர்களுக்கும், போலீசாருக்கும் ஏற்பட்ட மோதலில் இன்று கூட 6 பேர் உயிரிழந்தனர்.

ஷேக் ஹசினா பதவி விலக வேண்டும் என்று தொடர் போராட்டத்தில் மாணவர்கள் ஈடுபட்டதால் அவர் மீண்டும் ராணுவத் தலைமைத் தளபதி மற்றும் அரசியல் தலைவர்களுடன் ஆலோசனை நடத்தினார்.

நிலைமை மோசமான நிலையில் பாதுகாப்பு கருதி தனது பதவியை ராஜினாமா செய்திருப்பதுடன் அவர் நாட்டில் இருந்து ஹெலிகாப்டர் மூலம் வெளியேறியிருக்கிறார். இதுதொடர்பான வீடியோ ஒன்றும் வெளியாகியுள்ளது. அவருடைய சகோதரி ஷேக் ரெஹானாவும் ஷேக் ஹசினாவுடன் சென்றிருப்பதாக தகவல்கள் வருகின்றன.

ஷேக் ஹசினா சென்ற அந்த ஹெலிகாப்டர் இந்தியாவின் வடகிழக்கு மாநிலங்களில் ஒன்றான திரிபுராவின் தலைநகர் அகர்தலாவை நோக்கிச் சென்றதாக கூறப்படுகிறது.

இந்நிலையில் வங்கதேச ராணுவ தளபதி வாகர் – உஸ்-ஹமான் ஷேக் ஹசினா நாட்டை விட்டு வெளியேறியிருப்பதை மட்டும் உறுதி செய்துள்ளார்.

வங்கதேச இடைக்கால அரசை அந்நாட்டு ராணுவம் கைப்பற்றியதாகவும் கூறியுள்ளார்.

எனினும் ஷேக் ஹசினா எங்கே சென்றார் எந்த தகவல் கிடைக்கவில்லை. அவர் வெளிநாடு தப்பி செல்ல திட்டமிட்டிருப்பதாக கூறப்படும் நிலையில், மறுபக்கம் இந்திய ராணுவமும் எல்லையில் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளது.

இதற்கிடையில் ஆயிரக்கணக்கான போராட்டக்காரர்கள் டாக்காவில் உள்ள பிரதமர் இல்லத்திற்குள் நுழைந்துள்ள வீடியோவும், புகைப்படங்களும்  இணையத்தில் வைரலாகி வருகின்றன.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸப் சேனலில் இணையுங்கள்…. 

பிரியா

நெல்லை புதிய மேயர் கிட்டு… போட்டி வேட்பாளர் பவுல்ராஜ்… யார் இவர்கள்? உடைந்தது வஹாப் அணி…  தொடரும் குழப்பம்!

தாய்ப்பால் விழிப்புணர்வு… புதிய தாய்மார்களுக்கு உதவி எண்!

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share