வங்கி, எண்ணெய் மற்றும் வாகனத்துறை பங்குகளை வாங்க சில்லறை முதலீட்டாளர்கள் மத்தியில் ஏற்பட்ட ஆர்வம் மற்றும் ரிசர்வ் வங்கி மத்திய அரசாங்கத்திற்கு மிகப்பெரிய ஈவுத்தொகையை அறிவித்ததைத் தொடர்ந்து… நேற்று (மே 23) வியாழக்கிழமை வர்த்தகத்தில் இந்திய பெஞ்ச்மார்க் குறியீடுகளான சென்செக்ஸ் மற்றும் நிஃப்டி புதிய உச்சத்தை அடைந்தன.
தேசிய பங்குச்சந்தை நிஃப்டி 369.85 புள்ளிகள் உயர்ந்து 22,967.65 புள்ளியில் முடிவடைந்தது. கடந்த ஜனவரி 29ம் தேதி அன்று சென்செக்ஸ் 75 ஆயிரம் புள்ளியைத் தொட்டது. அதற்குப் பிறகான காலத்தில் வீழ்ச்சியை சந்தித்து வந்த சென்செக்ஸ் நேற்று 1,196.98 புள்ளிகள் உயர்ந்து வர்த்தக முடிவில் 75,418.04 புள்ளியை தொட்டது.
கோ டிஜிட் பொதுக் காப்பீட்டு நிறுவன பங்குகள் வியாழக்கிழமை பங்குச் சந்தையில் பட்டியலிடப்பட்டது. கடந்த மே 15- மே 17 நடைபெற்ற ஐபிஓ மூலமாக பொதுமக்கள், புரமோட்டர்களிடம் நிதி திரட்டப்பட்டது குறிப்பிடத்தக்கது.
நாடாளுமன்ற தேர்தல் 2024 முடிவுகளுக்கு முன்னதாக சந்தைகளில் ஏற்பட்டுள்ள மந்தமான இந்த சூழலில், பட்டியலிடப்பட்ட இந்த பங்குகள் எதிர்பார்த்த அளவு லாபம் கொடுக்கவில்லை. ஐபிஓவில் 272 ரூபாய்க்கு ஒதுக்கீடு செய்யப்பட்ட இதன் பங்குகள் வியாழக்கிழமை வர்த்தகத்தில் 276 ரூபாய்க்கு பட்டியலிடப்பட்டது. பங்கிற்கு வெறும் 4 ரூபாய் மட்டுமே லாபம் கொடுத்துள்ளதால், இந்நிறுவனத்தில் முதலீடு செய்துள்ள 4.27% சில்லறை முதலீட்டாளர்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.
நேற்று வியாழக்கிழமை வர்த்தகத்தில் வெளிநாட்டு நிறுவன முதலீட்டாளர்கள் (FII) 686.04 கோடி நிகர மதிப்புள்ள பங்குகளை விற்றுள்ளனர்.
மஹிந்திரா & மஹிந்திரா, லார்சன் & டூப்ரோ, ஆக்சிஸ் வங்கி, மாருதி சுஸுகி இந்தியா, அல்ட்ராடெக் சிமென்ட், அதானி எண்டர்பிரைசஸ், அதானி போர்ட்ஸ் & SEZ, ஐஷர் மோட்டார்ஸ் ஆகிய நிறுவனங்களின் பங்குகள் வியாழக்கிழமை வர்த்தகத்தில் அதிக லாபத்தை ஈட்டின.
வங்கி மற்றும் ஆட்டோமொபைல் துறை 2% அளவுக்கும். வங்கி அல்லாத நிதிச் சேவைகள், தகவல் தொழில்நுட்பம், ரியாலிட்டி, நுகர்வோர் பொருள்கள் மற்றும் எண்ணெய் மற்றும் எரிவாயு துறைகளின் குறியீடுகள் 1% அளவுக்கும் உயர்ந்தன.
TVS ஹோல்டிங்ஸ், சீமென்ஸ் மற்றும் இன்ஃபோ எட்ஜ் ஆகிய பங்குகள் புதிய 52 வார உச்சத்தை எட்டின.
இண்டிகோ நிறுவனம் வியாழன் அன்று 2023-24 ஆம் ஆண்டின் நான்காவது காலாண்டில் 1,894.5 கோடி ரூபாய் ஒருங்கிணைந்த நிகர லாபத்தைப் பதிவு செய்துள்ளது.
தாஜ் GVK ஹோட்டல் & ரிசார்ட்ஸ் Q4 நிகர லாபம் 25.85 கோடியை ஈட்டியதாக தெரிவித்துள்ளது.
FMCGயில் மிகப்பெரிய நிறுவனமாக உள்ள ITCன் Q4 நிகர லாபம் 5,020.2 கோடியை ஈட்டியதாகவும். கடந்த ஆண்டு இதே காலகட்டத்தில் இந்நிறுவனம் ஈட்டிய 5,572.07 கோடியை ஒப்பிடுகையில் இது 1.4% குறைவு என்று தெரிவித்துள்ளது.
பிசிபிஎல் முந்தைய காலாண்டின் நிகர லாபம் 102.28 கோடியுடன் ஒப்பிடுகையில் இந்த ஆண்டின் நான்காவது காலாண்டில் 110.95 கோடியை ஈட்டியதாக தெரிவித்துள்ளது.
ஜுபிலண்ட் ஃபுட்வொர்க்ஸ் Q4 FY 24ல் 208.25 கோடி ஒருங்கிணைந்த நிகர லாபத்தை ஈட்டியதாக பதிவு செய்துள்ளது.
பொதுத்துறை நிறுவனமான பவர் கிரிட் நிறுவனம் தனது முதலீட்டாளர்களுக்கு ஒவ்வொரு பங்கின் மீதும் 2.75 ரூபாய் ஈவுத்தொகை (டிவிடெண்ட் ) வழங்குவதாக அறிவித்துள்ளது.
பாரத் டைனமிக்ஸ் (BDL) பங்கு வெள்ளிக்கிழமை இன்று 1:2 பங்கு என்கிற கணக்கில் பகிர உள்ள நிலையில். வியாழக்கிழமை இதன் பங்குகள் இன்ட்ரா-டே வர்த்தகத்தில் 6 சதவீதம் லாபத்தை கொடுத்து 2,813.75 ரூபாய் வரை உயர்ந்து புதிய உச்சத்தை எட்டியது. கடந்த 8 நாட்களில் இந்த பங்கு 58% லாபத்தை கொடுத்துள்ளது.
இந்தியாவின் முன்னணி பாதுகாப்பு பொதுத்துறை நிறுவனங்களில் ஒன்றான இந்த நிறுவனம். மேற்பரப்பு வான்வழி ஏவுகணைகள் (SAMs), டேங்க் எதிர்ப்பு வழிகாட்டும் ஏவுகணைகள் (ATGMகள்), வான்வழி ஏவுகணைகள் (AAMs), நீருக்கடியில் ஆயுத ஏவுகணை எதிர் நடவடிக்கைகள் உபகரணங்கள் தயாரிப்பில் ஈடுபட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
ஹிண்டால்கோ இண்டஸ்ட்ரீஸ் லிமிடெட் நான்காவது காலாண்டு முடிவுகளை வெள்ளிக்கிழமை வெளியிட உள்ளது
கார்டன் ரீச் ஷிப் பில்டர்ஸ், கொச்சின் ஷிப்யார்ட், ஆர்.வி.என்.எல் நிறுவன பங்குகள் மீது வெள்ளிக்கிழமை வர்த்தகத்தில் கவனம் செலுத்தப்படும் என்று பங்குச்சந்தை தரகர்கள் கணிக்கின்றனர்.
இன்றைக்கு என்ன பங்குகள் வாங்கலாம்?
வார கடைசி வர்த்தக நாளாக வெள்ளிக்கிழமை இன்று ஈக்விட்டி பெஞ்ச்மார்க்குகளான பிஎஸ்இ சென்செக்ஸ் மற்றும் என்எஸ்இ நிஃப்டி சரிவுடன் தொடங்கியது.
இன்றைய வர்த்தகத்தில், Honasa Consumer, ITC, IndiGo, Vodafone Idea, ZEE போன்ற பங்குகள் கவனம் ஈர்க்கின்றன.
என்டிபிசி, ஹிண்டால்கோ, யுனைடெட் ஸ்பிரிட்ஸ் மற்றும் அசோக் லேலண்ட் ஆகிய நிறுவனங்கள் இன்று நான்காவது காலாண்டு முடிவுகளை இன்று அறிவிக்க உள்ளன.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
–மணியன் கலியமூர்த்தி
22 அரசு பேருந்துகளுக்கு அபராதம் : பழிவாங்கும் நடவடிக்கையா?
கோல்டன் விசா… ரஜினியை கௌரவித்த ஐக்கிய அரபு அமீரகம் – இதுவரை பெற்றவர்கள் யார் யார்?