ADVERTISEMENT

அடுத்த 2 படங்களில் ஷங்கரின் வருமுன் காப்போம் திட்டம் !

Published On:

| By Balaji

ரஜினி நடிப்பில் 2.O படத்தைக் கடந்த 2018ல் கொடுத்தார் தமிழின் பிரம்மாண்ட இயக்குநரான ஷங்கர். கடைசிப் படம் வெளியாகியே மூன்றாண்டுகள் ஓடிவிட்டது. ஆனாலும் இந்தியன் 2 முடியவில்லை. இந்தியன் 2 துவங்கியதிலிருந்து இப்போது வரை சிக்கல் மேல் சிக்கலென்பதால் இனிமேலும் இந்தப் படத்தை வைத்துக் கொண்டு இருக்கமுடியாதென முடிவெடுத்தவர் கையில் இப்போது புதிதாக இரண்டு படங்கள் வந்துசேர்ந்திருக்கிறது.

தெலுங்கு தயாரிப்பாளர் தில் ராஜூ இயக்கத்தில் ராம் சரண் நடிக்க ஷங்கர் இயக்கும் படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு ஏற்கெனவே வெளியாகிவிட்டது. தற்பொழுது, ராஜமெளலி இயக்கத்தில் ஆர் ஆர் ஆர் படத்தின் இறுதிக் கட்டப் பணிகளில் இருக்கிறார் ராம்சரண். அதை முடித்ததும் , ஷங்கரின் படம் துவங்க இருக்கிறது.

ADVERTISEMENT

இந்தப் படத்தை முடித்தகையோடு, இந்தியில் ஒரு படத்தை இயக்குகிறார் ஷங்கர். விக்ரம் நடித்து 2005-ல் வெளியான அந்நியன் படத்தின் இந்தி ரீமேக் தான் அது. இன்றைய காலக்கட்ட பிரச்னைகளை மையமாகக் கொண்டு புதிய கதையை உருவாக்கிவருகிறதாம் ஷங்கர் & கோ டீம். விக்ரம் ரோலில் இந்தியில் ரன்வீர் சிங் நடிக்க இருப்பதாகவும் சொல்லப்படுகிறது. அடுத்த வருடம் இந்தப் படம் உருவாகிவிடுமாம். இந்தியன் 2 படம் ரிலீஸாகுமா இல்லையா என்பது தெரியாது. ஆனால், அதன்பிறகு உருவாகும் இவ்விரு படங்களும் அடுத்த வருடம் நிச்சயம் வெளியாகிவிடும்.

இந்நிலையில், இந்த இரண்டு படங்களுக்கும் ஏ.ஆர்.ரஹ்மான் தான் இசையமைக்க இருக்கிறார் என்று சொல்லப்படுகிறது. பொதுவாக, ஷங்கர் படங்களுக்கு ஹாரிஸ் ஜெயராஜூம், ஏ.ஆர்.ரஹ்மானும் தான் இசையமைத்திருக்கிறார்கள். இருவரையும் விட்டுவிட்டு, கமலின் இந்தியன் 2வுக்கு அனிருத் ஒப்பந்தம் செய்யப்பட்டார். இந்தியன் 2வுக்காக அனிருத்திடம் பாடலை வாங்குவதற்குள் பெரும் பாடுபட்டுவிட்டாராம் ஷங்கர். அதோடு, இருவருக்குமான ஒர்க் கெமிஸ்ட்ரி ஒர்க் அவுட் ஆகவில்லை என்றே தெரிகிறது.

ADVERTISEMENT

வேலை விஷயத்தில் கொஞ்சம் ஃபாஸ்டாக இருப்பார் ஷங்கர். ஆனால், அனிருத்தை கையில் பிடிப்பதே பெரிய வேலையாக இருக்காம். அதன்பிறகு, எப்படி அவரிடம் வேலைவாங்குவது என நொந்துகொள்ளும் சம்பவங்களும் நடந்ததாகச் சொல்கிறார்கள். இனி, ரிஸ்க் எடுக்க வேண்டாமென ஏ.ஆர்.ரஹ்மானை டிக் செய்திருக்கிறார் ஷங்கர்.

தற்பொழுது, சிவகார்த்திகேயனின் அயலான், விக்ரமின் கோப்ரா, சிம்புவுக்கு பத்துதல , மணிரத்னத்தின் பொன்னியின் செல்வன் , தனுஷூக்கு அட்ராங்கி ரே உள்ளிட்ட படங்களின் இசைக் கோர்ப்புப் பணிகளில் இருக்கிறார் ஆஸ்கர் நாயகன் ஏ.ஆர்.ரஹ்மான்.

ADVERTISEMENT

**- தீரன்**

.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share