சினிமா, நாம் கண்ட உலகை மட்டுமல்ல, காண தவறிய, கற்பனைக்கும் எட்டாத உலகத்தையும் நம் கண் முன் காட்டி ஆச்சரியத்தில் ஆட்கொண்டுவிடும்.
அப்படிப்பட்ட பிரம்மாண்டமான திரைப்படங்களை எடுப்பதில் சொல்லி அடிக்கும் கில்லியாக சிம்மாசனத்தில் இருப்பவர் தமிழ் திரையுலக இயக்குநர் ஷங்கர். அவர் இன்று தனது 59வது பிறந்தநாளை கொண்டாடுகிறார்.
நடிகராக ஆசைப்பட்ட ஷங்கர்!
ஒரு நடிகராக, ஒரு இயக்குனராக, ஒரு இசையமைப்பாளராக என்று சினிமாத்துறையில் சாதிக்க வேண்டும் என்ற ஆசையோடு சென்னையை நோக்கி வருபவர்கள் ஏராளம்.
அப்படி நாடகங்களில் பணியாற்றிய ஷங்கருக்கு நடிகராகும் ஆசை தான் முதலில் இருந்திருக்கிறது.
இதற்கிடையே ஒருமுறை ஷங்கரும் அவரது குழுவினரும் நடத்திய நாடகத்தை தற்செயலாக கண்ட இயக்குனர் எஸ்.ஏ. சந்திரசேகர் தன்னிடம் உதவி இயக்குநராக பணியாற்றும்படி தமிழ் திரையுலகத்திற்கு அழைத்து வந்துள்ளார்.
அப்போதும் நடிகர் ஆவதற்கான வாய்ப்புகளை தேடியுள்ளார் ஷங்கர்.

பிரம்மாண்ட இயக்குனர் தான் இருந்தாலும்…
ஆனால் அவர் இயக்கில் முதல் படமான ‘ஜென்டில் மேன்’ அவரை சிறந்த இயக்குநராக தமிழ் திரையுலகில் அடையாளம் காட்டியது.
அதனை தொடந்து காதலன் இந்தியன், ஜீன்ஸ், முதல்வன், பாய்ஸ், சிவாஜி, நண்பன், எந்திரன் மற்றும் 2.0 என தான் இயக்கிய படங்களால் இந்தியாவின் பிரம்மாண்டமான வெற்றி இயக்குநராகவே வலம் வருகிறார் ஷங்கர்.
இருந்தாலும் தனது படத்தில் இடம்பெறும் கதாபாத்திரத்தினை நடித்து காட்டி தான் படமெடுப்பாராம்.
இதுகுறித்து ரஜினியே தனது பேட்டி ஒன்றில், ஷங்கர் நடித்து காண்பிக்கும் போது வியப்பாக இருக்கும். அவர் நடிப்பில் பாதியைக் கூட என்னால் கொண்டுவர முடியாது. அவர் ஒரு சிறந்த நடிகர் என்று புகழ்ந்து கூறி இருக்கிறார்.
கதாநாயகியாக அதிதி ஷங்கர்!
இதற்கிடையே நடிக்க வந்த ஷங்கர் தமிழ் சினிமாவின் தவிர்க்க முடியாத இயக்குனராகிவிட்ட நிலையில், தற்போது அவரது மகள் அதிதி கதாநாயகியாக நடிக்க வந்துவிட்டார்.
புலிக்கு பிறந்தது பூனையாகாது என்பதற்கேற்ப விருமன் திரைப்படத்தில் அழகாக நடித்திருக்கும் அதிதி, அடுத்து சிவகார்த்திகேயனின் மாவீரன் படத்திலும் நடித்து வருகிறார்.

இயக்குநர் டூ நடிகர்!
இருந்தாலும் நடிக்க ஆசைப்பட்டு திரையுலகில் காலடி எடுத்து வைத்த ஷங்கர், விரைவில், கெளதம் வாசுதேவ் மேனன், மகேந்திரன், பாரதிராஜா போன்றோர் வரிசையில், இயக்குநர் டூ நடிகராக வலம் வருவார் என்று எதிர்பார்க்கலாம்.
தற்போது முதன் முறையாக தெலுங்கில் ராம் சரணுடன் ஒரு படம், இந்தியில் ரன்வீர் சிங்குடன் அந்நியன் ரீமேக் என வேற்றுமொழிகளில் கவனம் செலுத்த ஆரம்பித்திருக்கிறார்.
அடுத்து பாதியில் நின்ற கமலின் ‘இந்தியன் 2’ படப்பிடிப்பும் விரைவில் துவங்க உள்ளது.
கிறிஸ்டோபர் ஜெமா
