மலையாள நடிகர் ஷான் நிகமிற்கும் தயாரிப்பாளர் கவுன்சிலுக்கும் இடையே நிலவி வந்த போர் முடிவுக்கு வந்தது.
மலையாள நடிகர் ஷான் நிகம், பிரபல மிமிக்ரி நடிகர் கலாபவன் அபியின் மகன். சிறு வயதில் ரியாலிட்டி ஷோக்களில் தோன்றியவர், சில மலையாள படங்களில் குழந்தை நட்சத்திரமாகவும் நடித்து வந்தார். 2016-ஆம் ஆண்டு வெளியான கிஸ்மத் திரைப்படத்தின் மூலமாக கதாநாயகனாக அறிமுகமான இவர் தொடர்ந்து ஈடா, பறவா, கும்பளங்கி நைட்ஸ், இஷ்க் போன்ற படங்களில் நடித்து முன்னணி கதாநாயகனாக மலையாளத் திரையுலகில் வலம் வரத் துவங்கினார்.
இந்நிலையில் வெயில் என்னும் மலையாள படத்தின் படப்பிடிப்பில், இயக்குநர் ஷரதுக்கும், ஷானுக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டது. இதனால் படப்பிடிப்புக்கு சரியாக வராமல் அலைக்கழித்து வந்தார் அத்துடன் ஒப்பந்தத்தை மீறி முடியை வெட்டி படத்திற்காக பராமரித்து வந்த கெட்-அப்பையும் மாற்றிக்கொண்டார். இதே நிலை அவர் நடித்து வந்த குருபானி மற்றும் உல்லாசம் திரைப்படங்களின் படப்பிடிப்பிலும் நிகழ, மூன்று படத் தயாரிப்பாளர்களும் சங்கத்தில் முறையிட்டனர். தொடர்ந்து கேரளா தயாரிப்பாளர்கள் சங்கம் அவர் மீது வாழ்நாள் தடை விதித்து தீர்மானம் நிறைவேற்றியது. இது மலையாள திரையுலகில் மிகப்பெரிய சர்ச்சையை கிளப்பியது.
பின்னர் கேரளா நடிகர்கள் சங்கம் இப்பிரச்சனையில் தலையிட்டு பல கட்ட பேச்சுவார்த்தைகள் நடத்தியது. இப்பொழுது முன்னணி நடிகரும் சங்க தலைவருமான மோகன்லால் பிரச்னையை பேசி ஒரு முடிவுக்கு கொண்டுவந்துள்ளார். அதன்படி டப்பிங் முடியாமல் நிற்கும் உல்லாசம் திரைப்படத்தை முதலில் முடித்து கொடுத்து விட்டு, மற்ற இரண்டு படங்களையும் அடுத்தடுத்து முடித்து கொடுக்க பரிந்துரைத்துள்ளார். இதற்கு ஷான் மற்றும் தயாரிப்பாளர் சங்கமும் ஒப்புக் கொண்டு பிரச்சனையை முடிவுக்கு கொண்டு வந்தனர்.
ஆனால் மீண்டும் புதுப் பிரச்சனையாக, சொல்லிய தேதியில் டப்பிங்குக்கு வராமல் தட்டிக் கழித்து இருக்கிறார் ஷான், இதற்கு தயாரிப்பு தரப்பில் இருந்து வரவேண்டிய சம்பள பாக்கியான சுமார் 40 லட்சத்தைக் காரணம் கூறி இருக்கிறது ஷான் தரப்பு. இப்பிரச்னைகள் நடுவில், கடந்த மாதம் ஷான் நடித்த வல்லியபெருநாள் படம் வெளியாகி ரசிகர்களின் பாராட்டை பெற்றது. விரைவில் சுமூகமான தீர்வுக்கு இருதரப்பும் வருவார்கள் என்று ரசிகர்கள் எதிர்ப்பார்கின்றனர்.
