மலையாளத் திரையுலகின் பெண் இயக்குனர்களில் ஒருவர் ஷாலின் ஜோயா. அவர் இயக்கிய ‘தி ஃபேமிலி ஆக்ட்’ மலையாளத் திரைப்படம் பெருமளவில் கவனத்தை ஈர்த்தது . அதற்கு முன்பே ஏழு குறும்படங்கள் ஓர் ஆவணப்படம் இவற்றை இயக்கியவர் இவர் .
இது தவிர பல மலையாளப் படங்களில் நடித்ததோடு … அதோடு கண்ணகி , ராஜா மந்திரி போன்ற தமிழ்ப் படங்களிலும் நடித்திருக்கிறார் .’குக் வித் கோமாளி’ நிகழ்ச்சியிலும் பங்கேற்றவர்
மலையாளத்தில் நடிச்சாச்சு ; இயக்கியாச்சு . தமிழில் நடித்து விட்டு இயக்குனர் என்ற குக் வேலையைப் பார்க்காமல் இருந்தால் எப்படி?
இதோ ரெடி .
நக்கலைட்ஸ் புகழ் அருண் – பிரிகிடா ஜோடியாக நடிக்க, எம். எஸ். பாஸ்கர், அருள்தாஸ், இளவரசு, தேவதர்ஷினி, அஷ்வின் காக்குமனு, ஜாவா சுந்தரேசன், ஜென்சன் திவாகர் நடிக்கும் தமிழ்ப் படம் ஒன்றை இயக்குகிறார் ஷாலின் ஜோயா .
படத்துக்கு சோறு வைத்து விட்டார்கள் . ஆனால் இன்னும் பேர் வைக்கல.
கலியுகம படத்தை இயக்கிய ஆர் கே இன்டர்நேஷனல் தயாரிக்கிறது
“இதுவரை நாங்கள் தயாரித்த 17 படங்களும் தரத்தில் எந்த சமரசமும் இல்லாமல் உருவாக்கப்பட்டவை, திறமையான கலைஞர்களை ஊக்குவித்தவை . அந்த வரிசையில் ஷாலின் ஜோயா இயக்கும் இந்தப் படமும் இருக்கும் அனைத்து வயதினரும் ரசிக்கக் கூடிய வகையில் இந்த திரைப்படம் உருவாகும்,” என்கிறார் தயாரிப்பாளர் கே எஸ்.ராமகிருஷ்ணா
“90களின் இறுதியிலும் 2000களின் தொடக்கத்திலும் நடைபெறும் இக் கதையின் படி ஒரு கிராமத்தில் ஒரு சம்பவம் நடக்கிறது. அது அங்குள்ளோரின் வாழ்க்கையை எப்படி மாற்றி அமைக்கிறது என்பதை நகைச்சுவை மற்றும் ஃபேண்டஸி கலந்து சொல்ல உள்ளோம்” என்கிறார் ஷாலின் ஜோயா. இந்தப் படத்தில் அவர் நடிக்கவில்லை . அது அவர் முடிவு . தப்பில்லை.
ஆனால் ஒரு வேண்டுகோள் . பல தமிழ்ப் படங்களில் மதுரைக்காரராகவும் திருநெல்வேலிக்காரராகவும் நடிக்கும் வல்லிய மலையாள சேட்டன் நடிகர்கள், அடம் பிடித்து சொந்தக் குரலிலும் பேசுவார்கள் . ஆனால் அது மலையாளமாகவே இருக்கும் .
நடிக்கட்டும். ஆனா ஒரு கேரக்டருக்கு மொழி முக்கியம் இல்லையா?
தமிழ் டைரக்டர்கள் பலர் செய்யும் இந்தத் தவறை நீங்களும் செய்யாதீங்க ப்ளீஸ் .
மற்றபடி சோயா மில்க் மாதிரி ஒரு சுவையான படம் கொடுக்க வாழ்த்துகள் ஜோயா !
ராஜ திருமகன்
