பாலிவுட் நட்சத்திரம் ஷாருக்கானுக்கு கொலை மிரட்டல் விடுத்த வழக்கறிஞரை போலீசார் கைது செய்தனர்.
கடந்த நவம்பர் 7 ஆம் தேதி மும்பை பாந்திரா காவல் நிலையத்துக்கு வந்த போனை போலீசார் அட்டென்ட் செய்த போது, ‘பாந்திரா பேன்ட்ஸ்டான்ட் பகுதியில் வசிக்கும் ஷாருக்கான் 50 லட்சம் ரூபாய் தர வேண்டும். இல்லையென்றால் கொன்றுவிடுவோம்’ என்று ஒருவர் கூறியுள்ளார். நீ யார் என்று போலீசார் கேட்டதற்கு, அது உங்களுக்கு தேவையில்லை ஹிந்துஸ்தானி என்று கூறி போனை வைத்து விட்டார்.
இதையடுத்து, போன் எண்ணை வைத்து போலீசார் மிரட்டல் விடுத்தவரை தேடினர்.
இதில் போன் செய்தவர், சத்தீஸ்கர் மாநிலத் தலைநகர் ராய்ப்பூரை சேர்ந்த முகம்மது ஃபைஸன் கான் என்ற வழக்கறிஞர் என்பது தெரியவந்தது. இதையடுத்து அவரது வீட்டில் வைத்து இன்று (நவம்பர் 12 ) அவர் கைதுசெய்யப்பட்டார்.
விசாரணையில், மிரட்டல் விடுக்கப் பயன்படுத்தப்பட்ட தனது செல்போன் முன்னரே தொலைந்துபோய்விட்டதாக நவம்பர் 2ஆம் தேதியே தான் காவல்துறையில் புகாரளித்ததாகவும் அவர் கூறியுள்ளார். பைஸன் பெயரில் பதிவுசெய்யப்பட்டுள்ள தொலைபேசி எண்ணிலிருந்து மிரட்டல் விடுக்கப்பட்டதால், அவர்மீது காவல்துறை கொலை மிரட்டல் வழக்கு பதிந்துள்ளது.
கொலை மிரட்டலை அடுத்து ஷாருக்கானுக்கு மும்பைக் காவல்துறை ‘ஒய்+’ பாதுகாப்பு அளித்து வருகிறது. ஆயுதமேந்திய 6 பேர் 24 மணி நேரமும் அவருக்குப் பாதுகாப்பு அளித்து வருகின்றனர்.
மற்றொரு பாலிவுட் நட்சத்திரம் சல்மான்கானுக்குத் தொடர்ச்சியாகக் லாரன்ஸ் பிஷ்னோய் கும்பலிடமிருந்து மிரட்டல் வந்து கொண்டிருக்கிறது.
அரியவகை ‘பிளாக் டீர்’ மானைக் கொன்றதற்காக தங்கள் குலதெய்வ கோவிலுக்குச் வந்து சல்மான் மன்னிப்பு கேட்க வேண்டும் அல்லது ரூ.5 கோடி தரவேண்டும் என்று சிறையில் அடைக்கப்பட்டுள்ள லாரன்ஸ் பிஷ்னோய் தரப்பு கூறி வருகிறது. இந்த வகை மானை பிஷ்னோய் இனத்தவர் புனிதமாகக் கருதுகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸப் சேனலில் இணையுங்கள்….
–எம்.குமரேசன்
சிறப்புக் கட்டுரை: வறுமையை எப்படி அளக்கக் கூடாதென்றால்…
3 மாவட்டங்களில் மிக கனமழைக்கு வாய்ப்பு…. வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை!