சிறுமிகள் உட்பட 9 பெண்களிடம் பாலியல் அத்துமீறல்… சிக்கலில் ஆஸ்கார் விருது நடிகர்!

Published On:

| By christopher

sexual misconduct complaints against jared leto

சிறுமிகள் உட்பட 9 பெண்களிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டதாக ஆஸ்கார் விருது வென்ற நடிகர் ஜாரெட் லெட்டோ மீது புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது. sexual misconduct complaints against jared leto

அமெரிக்க நடிகரும், பாடகருமான ஜாரெட் லெட்டோ ‘டல்லாஸ் பையர்ஸ் கிளப்’ படத்தில் ஒரு திருநங்கை வேடத்தில் நடித்ததற்காக கடந்த 2014ஆம் ஆண்டு சிறந்த துணை நடிகருக்கான ஆஸ்கார் மற்றும் கோல்டன் குளோப் விருதை வென்றார். தற்போது அவர் நடித்து வரும் ‘டிரான் ஏரஸ்’ திரைப்படம் இந்தாண்டு அக்டோபர் 10 அன்று வெளியாகிறது.

இந்த நிலையில் 53 வயதான நடிகர் லெட்டோ பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டார் என 14 வயது சிறுமி உட்பட 9 பேர் ஏர் மெயிலுக்கு அளித்த நேர்காணலில் குற்றஞ்சாட்டியுள்ளனர்.

அதில், 2008 ஆம் ஆண்டு 16 வயது மாடலான ஒரு பெண், லெட்டோவை அவரது ஸ்டுடியோவுக்குச் செல்வதற்கு முன்பு ஒரு விலங்கு உரிமை நிகழ்வில் சந்தித்ததாக விவரித்தார். அங்கு, அவர் தன்னுடன் ஊர்சுற்றி நிர்வாணமாகத் தோன்றியதாகக் கூறினார்.

மற்றொரு பெண், லாஸ் ஏஞ்சல்ஸ் ஓட்டலில் லெட்டோ தன்னை அணுகியபோது தனக்கு 16 வயது என்றும், பின்னர் இரவில் பார்ட்டிக்கு வருமாறு வாரக்கணக்கில் அழைத்ததாகவும் அவர் கூறினார்.

மூன்றாவது பெண், தான் சிறுமியாக இருந்தபோது லெட்டோ தன்னிடம் பாலியல் தொடர்பான கேள்விகளைக் கேட்டதாகவும், தன் கண்களுக்கு முன்பாக சுயஇன்பம் செய்ததாகவும் குற்றஞ்சாட்டியுள்ளார்.

இது தவிர 16 வயது சிறுமியிடம் பாலியல் கேள்விகளைக் கேட்டதாகவும், 17 வயது சிறுமியிடம் தன்னை ஆபாசமாக வெளிப்படுத்திக் கொண்டதாகவும், 18 வயது சிறுமியுடன் தகாத செயல்களில் ஈடுபட்டதாகவும் புகார்கள் நீள்கின்றன.

கடந்த மாதம் ஒரு டிஜே தனது இன்ஸ்டாகிராமில் 2012 ஆம் ஆண்டு பேஸ்புக் ஸ்டேட்டஸை மீண்டும் வெளியிட்டிருந்தார்.

அதில், தனது 17 வயதில் பொருத்தமற்ற விதத்தில் லெட்டோ தன்னுடன் நடந்து கொண்டதாகவும், அதை தன்னால் இன்று வரை ஏற்றுக்கொள்ள முடியவில்லை என்றும் குற்றஞ்சாட்டியிருந்தார்.

அதனைத் தொடர்ந்து தான் தங்களிடமும் அவர் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டதாக கூறி 9 பெண்கள் அளித்த புகார் வெளிச்சத்திற்கு வந்துள்ளன.

புகார் மறுப்பு!

எனினும் இந்த குற்றச்சாட்டுகள் அனைத்தையும் நடிகர் லெட்டோவின் தரப்பு மறுப்பு தெரிவித்துள்ளது.

”இந்த குற்றச்சாட்டுகள் அனைத்தும் ஆதாரப்பூர்வமற்றவை. பொய்யானது. சில மாடல்கள் அவரிடம் தனிப்பட்ட உதவியாளராக சேர விண்ணப்பித்தனர். அதற்கு அவர் மறுத்த நிலையில், தற்போது லெட்டோ மீது அபாண்டமாக குற்றஞ்சாட்டியுள்ளனர். அவர் 35 ஆண்டுகளுக்கும் மேலாக போதைப்பொருள் மற்றும் மது அருந்துவதைத் தவிர்த்து வருகிறார். பிறகு எப்படி பார்ட்டிக்கு அழைப்பார்? இந்த புகார்கள் அனைத்து பொய்” என லெட்டோவின் தரப்பு மறுப்பு தெரிவித்துள்ளது.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share