சிறுமிகளை பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் குற்றவாளிகளுக்கு தலா 20 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டது.
விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் உட்கோட்டம் பிரமதேசம் காவல் நிலையம் எல்லைக்குட்பட்ட தென் நெற்குணம் கிராமத்தைச் சேர்ந்தவர் மாரி (அம்மா மற்றும் இரண்டு மகள்கள் பெயர் மாற்றப்பட்டுள்ளது).
இவர், புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி தொகுதியான கதிர்காமம் பகுதியைச் சேர்ந்த ஒருவரை திருமணம் செய்துகொண்டார். 16 வயதிலேயே திருமணம் செய்து கொடுக்கப்பட்டு இரண்டு பெண் குழந்தைகளுக்கு தாயானார்.
பின்னர், கணவருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக அவரை பிரிந்து இரண்டு பிள்ளைகளுடன் தாய் வீடான தென் நெற்குணம் வந்துவிட்டார்.
9 வயதுள்ள கண்ணம்மா மற்றும் 7 வயதுள்ள முத்தமா இருவரையும் தனது தாய் பழனியம்மாவிடம் (பாட்டி) விட்டு வளர்த்து வந்தார். பின்னர் மறுமணம் செய்து கொண்டு துணைவனுடன் சென்று விட்டார்.
பாட்டி வளர்ப்பில் இருந்த கண்ணம்மா மற்றும் முத்தமா இருவரும் அருகில் உள்ள அரசு பள்ளியில் படித்து வந்தனர்.
விடுமுறை நாட்களில் குழந்தைகள் இருவரும் வீட்டுக்கு வெளியே விளையாடுவது வழக்கம்.
அப்பா, அம்மா பாசம் கிடைக்காத குழந்தைகளிடம் மாமா உறவு முறையில் இருந்த பிரசாந்தும், பாசம் காட்டுவது போல் நடித்திருக்கிறார்.
மூத்த பிள்ளை கண்ணம்மாவிடம் காசு கொடுத்து மிட்டாய், பிஸ்கெட் வாங்கிக்க சொல்லி குழந்தையை அவர் பக்கம் ஈர்த்திருக்கிறார். விவரமறியாத அக்குழந்தையும் பிரசாந்த்திடன் அன்பாக இருந்திருக்கிறது.
இந்தநிலையில் 2016ஆம் ஆண்டு முதல் கண்ணம்மாவுக்கு பாலியல் தொல்லை கொடுக்க ஆரம்பித்திருக்கிறான் பிரஷாந்த். அக்கா கண்ணம்மா மூலம் தங்கை முத்தம்மாவையும் வரவழைத்து அந்த பிஞ்சிடமும் தவறாக நடந்திருக்கிறான்.
நாளாக நாளாக இந்த விஷயம் மற்ற உறவுக்காரர்களுக்கு தெரிய வர, ஒருவருக்கு ஒருவர் தெரியாமல் தீனதயாளன், அஜித்குமார், பிரபாகரன், ரவிக்குமார், தமிழரசன், மகேஷ், ரமேஷ், துரை, மோகன், செல்வம், கமலக்கண்ணன், முருகன், துரைசாமி, செல்வ சேகர் என 14 பேர் குழந்தைகளை பாலியல் வன்கொடுமை செய்து வந்துள்ளனர்.
பிரசாந்த் உட்பட 15 பேரிடம் சிக்கி முத்தம்மாவும், கண்ணம்மாவும் உடல் ரீதியாகவும், மன ரீதியாகவும் பாதிக்கப்பட்டனர்.
இதில் துரையும் அவரது மகன் மோகன், அதாவது அப்பாவும் மகனும் பாலியல் தொல்லை கொடுத்திருக்கின்றனர்.
இப்படி பாதிக்கப்பட்ட இரண்டு பிள்ளைகளும் பள்ளிக்கு சென்று தூங்குவது சோர்வாக இருப்பதுமாக இருந்துள்ளனர். இதை கண்ட ஆசிரியர் ஒருவர் மூலமாக இந்த விஷயம் வெளியில் தெரியவந்தது.
இந்த தகவல் சிறுமிகளின் தாயார் மாரியின் காதில் விழ, அவர் பிள்ளைகளிடம் விசாரித்தார். அப்போதுதான் சிறுமிகள் ஒவ்வொருவராக கை காட்டியுள்ளனர்.
சின்ன தாத்தா, அவரது மகன், மாமா, அண்ணன் என ஒரு பட்டியலைப் படித்துள்ளார். உடனே தாயார் மாரி, பிரமதேசம் காவல் நிலையத்தில் 2019 ஜூலை 18 ஆம் தேதி பெண் இன்ஸ்பெக்டர் விஜியிடம் புகார் கொடுத்தார்.
இந்தப் புகாரை பெற்றுக்கொண்ட இன்ஸ்பெக்டர், ஜிப்மர் மருத்துவமனைக்கு பாதிக்கப்பட்ட இரண்டு மாணவிகளை அனுப்பி வைத்தார். அங்கு மருத்துவ பரிசோதனை செய்ததில் இருவரும் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாகியிருப்பது உறுதி செய்யப்பட்டது.
இதையடுத்து தீவிரமாக விசாரித்து அனைவரையும் கைது செய்து குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தார்.
இந்த வழக்கு பதிவு செய்து நாளை ஜூலை 18 ஆம் தேதியுடன் ஐந்து வருடங்கள் முடிவடையும் நிலையில் நேற்று (ஜூலை 16) அதிரடி தீர்ப்பு அளித்துள்ளார் விழுப்புரம் போக்சோ நீதிமன்ற நீதிபதி வினோதா.
15 பேருக்கும் இரண்டு பிரிவுகளில் தலா 20 ஆண்டுகள் என 40 ஆண்டுகள் சிறை தண்டனையும், தலா ரூ.32 ஆயிரம் அபராதமும் விதித்து தீர்ப்பளித்தார். சிறை தண்டனையை ஏககாலத்தில் அனுபவிக்கவும் உத்தரவிட்டார்.
இதற்கிடையே இளைய பிள்ளை முத்தம்மா, புகார் கொடுத்த 5 மாதத்தில் அதாவது 2019 டிசம்பர் மாதம் இறந்துவிட்டார். கண்ணம்மா மட்டும் சென்னையில் படித்து வருகிறார்.
தீர்ப்பு குறித்து வழக்கை கவனித்து வந்த சமூக ஆர்வலர் லூயிஸ் நம்மிடம் கூறுகையில்,
“பாதிக்கப்பட்ட பிள்ளை நீதிமன்றத்தில் சாட்சி சொல்ல வரும்போது நடந்ததை சொல்ல அப்படி பயப்படுவாள், அழுவாள்… என்னைத் திரும்ப திரும்ப கேக்காதீங்க பயமா இருக்கு… என்னை அசிங்கமாக பாக்குறாங்க என்பாள்…
இந்த நாட்டில் பாதிக்கப்பட்டவர்களுக்கும் சாட்சி சொல்பவர்களுக்கும் பாதுகாப்பு இல்லை. இப்போது பாதிக்கப்பட்ட பெண்ணையும் அவரது தாயாரையும் பத்திரமாக பாதுகாப்பான இடத்தில் வைத்துள்ளோம்.
குற்றவாளிகளுக்கு வாதாடிய வழக்கறிஞர் ஜெயப்பிரகாஷ், சிவக்குமார் (பாமக) குணா, தமிழ்ச்செல்வன் ஆகியோர் வழக்கைத் திசை திருப்ப, அம்மா கேரக்டர் சாரியில்லை என்று தவறாக சொன்னார்கள். சம்பவம் நடந்த தேதி சரியாக குறிப்பிடவில்லை என்று வாதாடினார்கள்.
அதைவிட கொடுமை சொந்த பாட்டி பழனியம்மாள், தாத்தா ராஜேந்திரன், தாய் மாமா கஜேந்திரன் மூவரும் பிறழ் சாட்சியாக மாறினார்கள்.
இருந்தாலும் எங்கள் சீனியர் வழக்கறிஞர் ஜோஸ், ‘சிறு வயது பிள்ளைகளுக்கு நாள் தேதி சொல்ல ஞாபகம் இருக்காது. மெடிக்கல் ரிப்போர்ட் வலுவாக உள்ளது, இரண்டு வருடங்களாக பலவிதமான இடங்களில் சம்பவம் நடந்துள்ளது.
பிள்ளைகளின் பிரைவேட் பார்ட்டில் எரிச்சலாக உள்ளது. வயிறு வலிக்கிறது என்று சொல்லும்போது பாட்டி வயிற்றில் எண்ணெய்யும் தேய்த்து விட்டிருக்கிறார். அவர்களிடம் தேதி நேரம் கேட்டால் எப்படி, சொல்வார்கள். அம்மா கேரக்டர் பற்றி தவறாக பேசலாமா?’ என வாதிட்டார். விசாரணை அதிகாரியும் சாட்சி சொன்னார். கூடுதலாக மெடிக்கல் ரிப்போர்ட் வலுவாக இருந்தது. அதனால் தான் நல்ல தீர்ப்பு வந்தது” என்றார்.
அவரிடம், இதில் பாமகவுக்கு என்ன ரோல் உள்ளது என கேட்டோம்…
பாமக பிரமுகர்கள் முயற்சியால் பாதிக்கப்பட்ட பிள்ளைகளின் தாயாரை நீதிமன்றத்திற்கு அழைத்து வந்து பேசவைத்து குற்றவாளிகளை பெயிலில் எடுத்தனர். சமாதானம் செய்ய முயற்சி செய்தனர்.
அதன் பிறகு இளைய மகள் இறந்த போது ஊரிலிருந்து ஒருவர் கூட வரவில்லை. அதனால்தான் அந்த அம்மா என் மகள் உசுரே போயிடுச்சு, இனி ஏன் சமாதானமா போக வேண்டுமென நினைத்து எங்களிடம் ஆதரவு கேட்டார்.
இந்நிலையில் தான் நம்பிக்கையோடு போராடி, நல்ல தீர்ப்பு பெற்று கொடுத்துள்ளோம். மேலும் அரசு கொடுக்கும் நிவாரணம் போதுமானதாக இல்லை. அதனால் மேல் முறையீடுக்கு செல்ல இருக்கிறோம்” என்றார் லூயிஸ்.
விசாரணை அதிகாரிகளிடம் பேசினோம்….
அவர்கள், “ஒரே ஊர், ஒரே சமூகம், அனைவரும் உறவினர். அதில் ஒருவர் சொந்த சின்ன தாத்தா. இந்த சம்பவம் 2019 ஜூலையில் நடந்தது. 2019 ஆகஸ்ட் 5 ஆம் தேதி பாலியல் வழக்குகளில் 20 வருடங்கள் தண்டனை கொடுக்கலாம் என சட்டம் அமலுக்கு வந்தது. அதன்படி குற்றவாளிகளுக்கு தண்டனை வழங்கப்பட்டுள்ளது” என்றனர்.
நேற்று தீர்ப்பு வந்து குற்றவாளிகளை சிறைக்கு அழைத்து செல்லும் போது குற்றவாளிகளின் உறவினர்கள் வழி விடாமல் சத்தம் போட்டு கதறி அழுதனர்.
அதன் பிறகு இரண்டு இரண்டு குற்றவாளிகளாக போலீஸ் வேனுக்கு அழைத்து சென்று கடலூர் மத்திய சிறையில் அடைத்தனர்.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
வணங்காமுடி