மாற்றுத்திறனாளிக்கு பாலியல் வன்கொடுமை… சிக்கிய எம்.எல்.ஏ உதவியாளர்… போராட்டத்தில் அதிமுக!

Published On:

| By vanangamudi

Sexual assault on a disabled person at krishnagiri

கிருஷ்ணகிரியில் மாற்றுத்திறனாளி இளைஞரை பாலியல் வன்கொடுமை செய்த திமுக எம்.எல்.ஏவும் மாவட்ட செயலாளருமான மதியழகனின் உதவியாளர் அதியமான் என்பவரை போலீஸார் கைது செய்துள்ளனர்.

கிருஷ்ணகிரி மாவட்டம் கால்வேஹள்ளி கிராமத்தைச் சேர்ந்தவர் ராஜ்குமார் (பெயர் மாற்றப்பட்டுள்ளது). 20 வயது மாற்றுத்திறனாளியான இவர் டிஎன்பிஎஸ்சி தேர்விற்காக கிருஷ்ணகிரி பஸ் நிலையம் அருகில் உள்ள நகராட்சி நூலகத்திற்கு தினமும் சென்று படித்து வருகிறார்.

ADVERTISEMENT

இந்த நிலையில் தன்னை இருவர் மிரட்டி பாலியல் வன்கொடுமை செய்ததுடன், வெளியே சொன்னால் கொலை செய்துவிடுவதாக கிருஷ்ணகிரி டிஎஸ்பி அலுவலகத்தில் புகார் அளித்துள்ளார்.

அதில், “கடந்த ஆகஸ்ட் 27ஆம் தேதி நூலகத்திற்கு சென்று விட்டு எனது வீட்டுக்கு திரும்ப பேருந்து நிலையம் வந்தபோது, அடையாளம் தெரியாத பெண் ஒருவர் என்னை நிறுத்தி பேசினார். பின்னர் ’ஒரு இடத்திற்கு போகலாம் வா’ என்று என்னை அழைத்தார். ஆனால் நான் மறுத்துவிட்டேன்.

ADVERTISEMENT

அப்போது அங்குள்ள பேன்சி ஸ்டோரின் உரிமையாளர் ஹசன் அலிகான் என்பவர், ’அந்த பெண்ணிடம் நீ பேசியதை நான் பார்த்தேன், நான் வீடியோ எடுத்து வைத்துள்ளேன். உன் போன் நம்பரை கொடுத்துவிட்டு போ. போலிசார் உன்னிடம் பேசுவார்கள்” என என்னை மிரட்டி எனது போன் நம்பரை வாங்கிவிட்டார்.

மறுநாள் காலை 11 மணியளவில் என்னைத் தொடர்புகொண்ட ஹசன் அலிகான், ”மாலை 4 மணிக்குள் புதிய பஸ் நிலையம் வந்துவிடு. இல்லையென்றால் இந்த வீடியோவை நான் பேஸ்புக், இன்ஸ்டாகிராமில் பதிவிட்டு விடுவேன்” என மிரட்டினார்.

ADVERTISEMENT

அதற்கு பயந்து நான் மாலை 4 மணியளவில் பஸ் நிலையம் சென்றபோது, ’போலீசாரை பார்த்துவிட்டு வரலாம்’ என்று சொல்லி அவரது பைக்கில் என்னை ஏற்றிக்கொண்டு சுங்கச்சாவடி அருகிலுள்ள தர்காவிற்கு பின்புறம் மலை அடிவாரத்திற்கு கூட்டி சென்றார் ஹசன் அலிகான்.

அங்கு புதர் நிறைந்த இடத்தில் நின்றிருந்த ஒருவரைக் கைகாட்டிய ஹசன், ’அவர் எஸ்.பி அலுவலகத்தில் வேலை செய்பவர், எஸ்.பி-க்கு கீழ் உள்ள அதிகாரி” எனத் தெரிவித்தார்.

பயத்தில் அங்கிருந்து செல்வதாக நான் கூறியும், என்னைக் கட்டாயப்படுத்தி இருவரும் பாலியல் வன்கொடுமை செய்தனர். பின்னர் என்னை மீண்டும் பஸ் நிலையம் அழைத்து வந்து விட்டுவிட்டு ”வெளியே சொன்னால் கொன்றுவிடுவோம். நீ ஒரு மாற்றுத் திறனாளி உன்னால் ஒன்றும் செய்யமுடியாது” என்று சொல்லி மிரட்டி சென்றனர்” என அதில் தெரிவித்துள்ளார்.

இந்த சம்பவத்தைத் தொடர்ந்து அன்று இரவு முழுவதும் மன உளைச்சலால் பாதிக்கப்பட்டு, தூங்க முடியாமல் தவித்த ராஜ்குமார் மறுநாள் ஆகஸ்ட் 29ஆம் தேதி காலை 10 மணிக்கு, கிருஷ்ணகிரி டி.எஸ்.பி அலுவலகம் சென்று எனக்கு இழைக்கப்பட்ட கொடுமை தொடர்பாக புகார் அளித்துள்ளார்.

அதனை ஏற்றுக்கொண்ட டிஎஸ்பி, கிருஷ்ணகிரி நகர காவல் நிலைய ஆய்வாளரை அழைத்து, புகார் குறித்து விசாரணை செய்து நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டார்.

அதன்படி பேன்சி ஸ்டோர் உரிமையாளர் ஹசன் அலி கானை பிடித்து போலீசார் விசாரித்தபோது, ராஜ்குமாருக்கு பாலியல் வன்கொடுமை செய்த மற்றொரு நபர் அதியமான் என தெரியவந்தது. இவர் கிருஷ்ணகிரி திமுக எம்.எல்.ஏவும் மாவட்ட செயலாளருமான மதியழகனின் உதவியாளர் ஆவார். மேலும் போலீஸ் ஊர்க்காவல் படையிலும் பணியாற்றி வருவது தெரியவந்தது.

அதன்பின்னர் இந்த விவகாரத்தில் போலீசாரின் நடவடிக்கையில் சுணக்கம் ஏற்பட்டதை அறிந்த கிருஷ்ணகிரி அதிமுக எம்.எல்.ஏ அசோக் குமார், நேற்று நள்ளிரவு 2 மணி வரை தனது கட்சியினருடன் சென்று காவல் நிலையத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினார்.

இந்த வழக்கில் அதியமான் மற்றும் ஹசன் அலிகான் மட்டும் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், கட்டப் பஞ்சாயத்து செய்த கிருஷ்ணகிரி திமுக நகர செயலாளர் அஸ்லாமை கைது செய்யாமல் இருப்பது ஏன் என கேள்வி எழுப்பினார்.

இதுதொடர்பாக அசோக் குமார் நமக்கு அளித்த பேட்டியில், “மாற்றுத்திறனாளியான இளைஞரை வெறிபிடித்த நாய்கள் இருவர் வன்கொடுமை செய்துள்ளனர். அதனால் தூக்கமில்லாமல் தவித்த அந்த இளைஞர் தற்கொலைக்கு முயன்றுள்ளார். அவர் மறுநாள் புகார் கொடுத்தும் நடவடிக்கை எடுக்கவில்லை. அதோடு திமுக நகர செயலாளர் அஸ்லாம் போலீஸ் ஸ்டேசனுக்கு எதிரே உள்ள தாபாவிற்கு அழைத்து போய் பத்தாயிரம் பணம் கொடுத்து வழக்கை வாபஸ் வாங்கி விடு என அப்பாவி இளைஞரை மிரட்டியுள்ளார். எனவே அவரையும் கைது செய்ய வேண்டும்” எனத் தெரிவித்தார்.

இதற்கிடையே கடந்த 30ஆம் தேதியே ஹசன் அலி (31) மற்றும் அதியமான் (41) ஆகியோர் மீது பிஎன்எஸ் 296(b), 115(2) மற்றும் 351(2) ஆகிய 3 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும் கிருஷ்ணகிரி நகர காவல்நிலைய போலீசார் தெரிவித்துள்ளனர்.

மேலும் சம்பந்தப்பட்ட அனைவரும் மீதும் கட்டாயம் நடவடிக்கை எடுக்கப்படும் என போலீசார் உறுதியளித்ததை தொடர்ந்து போராட்டம் கைவிடப்பட்டது.

ஆனால் நகர செயலாளர் அஸ்லாம், இந்த வழக்கு குறித்து போனில் பேசிய பத்திரிகையாளரிடம் ஆபாசமாக அளித்த பதில் சமூக வலைதளங்களில் வெளியாகி பலரையும் கொதிப்படைய செய்துள்ளது.

அதில் அவர், “ஆமாம் நான் தான் கிருஷ்ணகிரியில் எல்லாம் பண்ணுகிறேன். இங்க ஆம்பள நான் மட்டும் தானே. என்னை பிடித்து உள்ளே போட்டாலும் சி.எம். கிட்ட என் பெயர் தான் வளரும். இந்த ஆடியோ ரிலீஸ் ஆனாலும் பரவாயில்லை” என கொச்சையாகவும் அநாகரீகமாகவும் பதில் அளித்துள்ளார்.

முதல்வர் மு.க.ஸ்டாலின் வரும் 11ம் தேதி இரண்டு நாள் பயணமாக கிருஷ்ணகிரி, தருமபுரி செல்ல உள்ளார். இந்த நிலையில் மாற்றுத் திறனாளிக்கு இழைக்கப்பட்ட இந்த கொடுமையை முன்வைத்து ஸ்டாலினுக்கு எதிராக போராட்டம் நடத்த கிருஷ்ணகிரி மாவட்ட அதிமுகவினர் திட்டமிட்டு வருகின்றனர்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share