வீடியோ கால் அழைப்பின் மூலம் ஆபாச படங்களை ஒளிபரப்பி மத்திய அமைச்சரை மிரட்டிய இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கடந்த சில நாட்களாக செக்ஸ் கால் மூலம் மிரட்டி பணம் பறிக்கும் புதிய தொழிலை சைபர் கிரைம் குற்றவாளிகள் ஆரம்பித்துள்ளனர். இதில் சிக்கி சிலர் பல லட்சம் ரூபாய் நஷ்டம் அடையும் செய்திகள் தொடர்ந்து வெளியாகி வருகிறது.
தற்போது, அதுபோன்ற செக்ஸ் காலில் ஒரு மத்திய அமைச்சர் சிக்கியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மத்திய ஜல் சக்தி மற்றும் உணவு பதப்படுத்துதல் துறை இணை அமைச்சராக உள்ளவர் பிரஹலாத் சிங் படேல்.
இவர் இந்த மாத தொடக்கத்தில் மத்தியபிரதேசத்தில் உள்ள தனது சொந்த ஊருக்கு சென்றபோது இவரது மொபைலுக்கு தெரியாத எண்ணில் இருந்து வீடியோ கால் அழைப்பு வந்தது.
அந்த அழைப்பைப் பெற்றவுடன், அவர் முன் ஆபாச படங்கள் ஒளிப்பரப்பாகின. அதனைத்தொடர்ந்து உடனடியாக அழைப்பை அமைச்சர் துண்டித்த நிலையில் அவரை தொடர்பு கொண்ட குற்றவாளிகள், வீடியோ கால் கிளிப்பை சமூக ஊடகங்களில் வெளியிடுவதாக கூறி பணம் கேட்டு மிரட்டியுள்ளனர்.
இதுகுறித்து அமைச்சர் பிரஹலாத் சிங் படேலின் தனிச் செயலாளர் அலோக் மோகன் புகார் செய்த நிலையில், டெல்லி போலீசார் உடனடியாக விசாரணை நடத்தினர்.
அமைச்சருக்கு வீடியோ கால் அழைப்பு வந்த செல்போன் எண்ணைக் கண்டுபிடித்தனர்.
அதன்படி இந்த வழக்கில் முகமது வக்கீல் மற்றும் முகமது சாஹிப் என்ற இரண்டு குற்றவாளிகளை ராஜஸ்தானின் பரத்பூரில் கைது செய்தனர்.
மேலும் தலைமறைவாக உள்ள மற்றொரு குற்றவாளியான முகமது சபீர் என்பவரையும் கைது செய்வதற்கான முயற்சியில் டெல்லி போலீசார் இறங்கியுள்ளனர்.
காவல்துறையின் கூற்றுப்படி, ‘பாலியல் அழைப்புகள்’ என்பது மோசடியின் ஒரு பகுதியாகும். பொதுவாக ‘செக்ஸ்டோர்ஷன் கால்’களில், பாலியல் வீடியோக்களை வைரலாக்குவேன் என்று மிரட்டி பணம் பறிக்கும் சம்பவம் நடைபெறுவதாக போலீசார் தெரிவித்தனர்.
இது வீடியோ கால் அழைப்புகள் மூலம் பதிவு செய்யப்பட்டு எதிரே இருப்பவரை மிரட்டி பணம் பறிக்கப்படுகிறது.
கிறிஸ்டோபர் ஜெமா

Comments are closed.