உறையூரில் பலியான உயிர்கள்! உண்மை என்ன? – சட்டமன்றத்தில் அமைச்சர் நேரு விளக்கம்!

Published On:

| By Aara

திருச்சி உறையூர் பகுதியில் குடிநீரில் கழிவு நீர் கலந்ததால் குழந்தை உட்பட 3 பேர் மரணம் அடைந்தார்கள் என்று ஊடகங்களில் வந்த செய்தி, தமிழ்நாட்டையே உலுக்கியிருக்கிறது. இந்த
விவகாரம் இன்று (ஏப்ரல் 21) சட்டமன்றத்தில் எதிரொலித்தது.

இந்த பிரச்சினை தொடர்பாக இன்று சட்டமன்றத்தில் எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி மற்றும் வேல்முருகன், பாலாஜி, நாகை மாலி, ஜி.கே.மணி, பிரின்ஸ் ஆகியோர் சிறப்பு கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வந்தனர். இதற்கு பதிலளித்து நகராட்சி நிர்வாகத் துறை அமைச்சர் கே.என்.நேரு பேசினார்.

ADVERTISEMENT

அப்போது அவர், “ திருச்சி மாநகராட்சியிலே குடிநீரில் கழிவுநீர் கலந்து பாதிக்கப்பட்டு இருப்பதாக சொன்னார்கள். அதனை பற்றி நான் முழுமையாக விளக்கமாக எடுத்துரைக்க கடமைப்பட்டிருக்கின்றேன். sewage contaminated-water trichy Uraiyoor Edapadi Vs K.N.Nehru

திருச்சி மாநகராட்சி உறையூர் பகுதியில் வார்டு எண் 10 மின்னப்பன் தெரு, வார்டு எண் 8, பணிக்கன் தெரு பகுதிகளில் ஏப்ரல் 18 ம் தேதி மாலையில் வாந்தி மற்றும் வயிற்றுப்போக்கில் 7 நபர்கள் பாதிக்கப்பட்டனர்.

ADVERTISEMENT

இதை தொடர்ந்து மாநகராட்சி சுகாதாரத்துறை மூலம் உடனடியாக நோய் தடுப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. திருச்சி மாநகராட்சி சுகாதாரத் துறையின் மருத்துவ அலுவலர்கள், செவிலியர்கள், சுகாதார ஆய்வாளர்கள் உட்பட 286 பணியாளர்கள் கொண்ட குழு உடனடியாக அமைக்கப்பட்டு அப்பகுதியில் 1,492 வீடுகளில் வசிக்கும் சுமார் 6,416 பொதுமக்களுக்கு முன்னெச்சரிக்கை நடவடிக்கை தொற்றுநோய் தடுப்பு மற்றும் மருத்துவ சிகிச்சை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

இப்பகுதி சார்ந்த 42 நபர்கள் (ஆண்கள் 15, பெண்கள் 23, குழந்தைகள் 4) திருச்சி அரசு மருத்துவமனையிலும் 11 பேர் தனியார் மருத்துவமனையிலும் மொத்தம் 53 நபர்கள் உள்நோயாளிகளாக சிகிச்சை பெற்று வருகின்றனர்.

ADVERTISEMENT

வாந்தி மற்றும் வயிற்றுப்போக்கு பாதிப்பு ஏற்பட்ட வார்டு எண் 10 மின்னப்பன் தெரு மற்றும் பணிக்கன் தெரு பகுதிகளில் ஒன்பது சிறப்பு மருத்துவ முகாம்கள் அமைக்கப்பட்டு சிறப்பு மருத்துவர்கள் மூலம் 28 நபர்கள் வெளி நோயாளிகளாக சிகிச்சை பெற்றுள்ளனர். அவர்களில் ஐந்து நபர்கள் மேல் சிகிச்சைக்காக திருச்சி அரசு மருத்துவமனையில் பரிந்துரை செய்யப்பட்டு சிகிச்சை பெற்று குணமடைந்துள்ளனர், sewage contaminated-water trichy Uraiyoor Edapadi Vs K.N.Nehru

மாநகராட்சி சுகாதாரப் பணியாளர்கள் மூலம் 11,875 நபர்களுக்கு முன்னெச்சரிக்கை தடுப்பு மருந்துகள், டாக்டர்களின் மாத்திரைகள் மற்றும் ஓஆர்எஸ் பாக்கெட்டுகள் வழங்கப்பட்டுள்ளன.

சுகாதாரத்துறை மூலம் ஆறு இடங்களில் குடிநீர் மாதிரிகள் சேகரிக்கப்பட்டு, திருச்சி மண்டல நீர் பகுப்பாய்வகத்துக்கு ஆய்வு செய்ய அனுப்பப்பட்டுள்ளது. மேலும், 10 கண்காணிப்பு குழுக்கள் அமைக்கப்பட்டு அனைத்து வீடுகளுக்கும் நேரடியாக சென்று தீவிர தொற்று நோய் தடுப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு தொடர் கண்காணிப்பில் உள்ளது.

மின்னப்பன் தெருவைச் சேர்ந்த பிரியங்கா என்ற நான்கு வயது குழந்தை 19- 4 -2025 இறந்ததை தொடர்ந்து, அவர் உடல் பரிசோதனை செய்யப்பட்டது. முதல் கட்ட பிரேத பரிசோதனை அறிக்கை மூலம் இவர் வயிற்றுப்போக்கு காரணமாக உயிரிழந்தார் என்பதற்கு எவ்வித ஆதாரமும் கண்டறியப்படவில்லை. மேலும், பத்திரிகையில் வெளிவந்த மூன்று நபர்கள் பலி என்ற செய்தி முற்றிலும் பொய்யானது.

பாண்டமங்கலம் அக்ரஹாரம் பகுதியைச் சேர்ந்த 90 வயது மூதாட்டி லட்சுமி 10 நாட்களாக உடல் நலம் குன்றி 19- 4 -2025 அன்று இயற்கை எய்தினார். மேலும், மின்னப்பன் தெருவில் வசிக்கும் லதா நெஞ்சுவலி காரணமாக 18 ஆம் தேதி நள்ளிரவு வீட்டிலே உயிர் பிரிந்தது. எனவே 3 பேர் பலி என்பது ஆதாரமற்ற பொய் செய்தி என்று சமர்ப்பித்துக் கொள்கிறேன்.

இப்பகுதிகளில் நடந்த சித்திரை தேர் திருவிழாவில் உணவு, மோர், குளிர்பானங்கள் விநியோகிக்கப்பட்டது. அதன் மூலமாக வயிற்றுப்போக்கு ஏற்பட்டிருக்கக்கூடும்.

குடிநீர் குழாய்கள் மாநகராட்சி பகுதிகளும் கிராமப் பகுதிகளும் வெவ்வேறாக உள்ளதால் குடிநீர் காரணமாக இருக்க வாய்ப்பு இல்லை. இருப்பினும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக குழாய் மூலம் குடிநீர் முழுவதும் நிறுத்தப்பட்டு லாரி் மூலமாக வழங்கப்பட்டு வருகிறது. குடிநீர் மாதிரிகள் ஆய்வு செய்யப்பட்டு குடிக்க தகுதியான குடிநீர் தான் என்று அறிக்கை வரப்பட்டுள்ளது.

மேலும், 19-4-2025 அன்று 39 நபர்கள் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, நல்ல நிலையில் உள்ளனர். 20- 4 -2025 அன்று 14 நபர்கள் முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கப்பட்டு நல்ல நிலையில் உள்ளனர். இதன் மூலம் நோய் கட்டுப்படுத்தப்பட்டுள்ளது தெளிவாகிறது.

அப்பகுதியில் வெக்காளியம்மன் கோவில் திருவிழாவில் பொதுமக்கள் மோர், குளிர்பானம் தந்துகொண்டிருக்கிறார்கள். அதன் மாதிரிகள் சேகரிக்கப்பட்டு நடவடிக்கை எடுக்கச் சொல்லியிருக்கிறோம்.

சம்பவம் நடந்த பகுதிகள் எனது திருச்சி மேற்கு தொகுதியைச் சேர்ந்தவை. சமீபத்தில்தான் இப்பகுதிகளில் 40 கோடி ரூபாய் செலவில் புதிய குழாய்கள் பதிக்கப்பட்டு குடிநீர் சிறப்பாக சென்று கொண்டிருக்கிறது. இது எனது தொகுதி. எனது துறையும் கூட. எனவே, குடிநீரில் கழிவு நீர் அந்த பகுதியில் நிச்சயமாக கலக்கவில்லை என்பதை நான் உறுதியாக தெரிவித்துக் கொள்கிறேன்.

தினமும் ஐந்தரை கோடி மக்களுக்கு சிறப்பாக குடிநீர் வழங்கிக் கொண்டிருக்கிறோம். இந்நிலையில், எங்கோ ஓர் இடத்தில் சிறு தவறு நடந்திருந்தால் உடனடியாக அதை சரி செய்து வருகிறோம். இந்த சம்பவம் பொறுத்தவரை கழிவு நீர் கலக்கவில்லை. குளிர் பானம்,மோரால்தான் ஏற்பட்டிருக்கிறது என்பதை தெரிவித்துக் கொள்கிறேன்” என்று சட்டமன்றத்தில் தெரிவித்திருக்கிறார் அமைச்சர் நேரு.

இந்நிலையில் அதிமுகவின் திருச்சி மாநகர் மாவட்டச் செயலாளர் சீனிவாசன் இந்த விவகாரம் குறித்து மின்னம்பலத்திடம் பேசினார்.

“காவேரி கூட்டுக் குடிநீர் திட்டம் பைப் லைன்கள் இப்பகுதியில் செல்கின்றன. அவற்றுக்கு அருகிலேயே பாதாள சாக்கடைத் திட்ட குழாய்களும் செல்கின்றன. பாதாள சாக்கடைத் திட்டத்துக்கான குழாய்கள் பதிக்கப்பட்டபோது டேமேஜ் ஏற்பட்டுள்ளது. குடிநீர் குழாய்களிலும், பாதாள சாக்கடை குழாய்களிலும் ஆங்காங்கே டேமேஜ் ஏற்பட்டு இரு குழாய்களிலுமே கசிவு ஏற்பட்டுள்ளது. இந்த வகையில்தான் குடிநீரோடு கழிவு நீர் கலந்திருக்கிறது.

இந்த பிரச்சினை இப்போதுதான் நடந்ததை போல மேயர் பேசுகிறார். ஆனால், இந்த பகுதியில் குடிநீரும் சாக்கடை நீரும் கலக்கும் பிரச்சினைக்காக அதிமுக சார்பில் 2024 ஆகஸ்டு 20 ஆம் தேதியே உறையூர் பகுதியில் மரக்கடை எம்.ஜி.ஆர். சிலை அருகே அதிமுக சார்பாக மிகப்பெரிய ஆர்பாட்டம் நடத்தினோம்.

மாநகராட்சி ஆணையரிடமும் புகார் அளித்தோம். ஆனால், இந்த பிரச்சினை பற்றி மெத்தனமாக இருந்துவிட்டு இப்போது 3 உயிர்களை பலி கொடுக்கும் அவலத்துக்கு மாநகராட்சி நிர்வாகம் தான் முழு காரணம். நானும் பாதிக்கப்பட்ட மக்களை சந்தித்தேன். எங்களுடைய பொதுச் செயலாளர் முன்னாள் முதல்வர் எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடியாரிடமும் இதுபற்றி விளக்கியிருக்கிறோம்” என்றார் சீனிவாசன்.

இன்று சட்டமன்ற வளாகத்தில் இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய எதிர்க்கட்சித் தலைவர் எட்பபாடி பழனிசாமி,

“அமைச்சர் நேரு, குடிநீரில் கழிவு நீர் கலக்கவில்லை என்று மறுப்பு தெரிவித்தார். இப்பகுதியில் 15 நாட்களாக மக்கள் இந்த குடிநீரைத்தான் பருகி வருகிறார்கள். மாநகராட்சி அதிகாரிகளிடமும் கோரிக்கை வைத்திருக்கிறார்கள் மக்கள். ஆனால், மக்களின் புகாரை அதிகாரிகள் கண்டுகொள்ளாத காரணத்தினால், 3 பேர் உயிரி்ழந்துவிட்டனர். 5 பேர் அவசர சிகிச்சைப் பிரிவில் இருக்கிறார்கள்.

அமைச்சர் சொன்ன பதிலில், அப்பகுதியில் உள்ள கோவில் சித்திரை திருவிழாவில் வழங்கப்பட்ட பிரசாதம், மோர் ஆகியவற்றின் மூலமாக ஒவ்வாமை ஏற்பட்டு மக்கள் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள் என்று கூறுகிறார்.

நாங்கள் கேட்பதெல்லாம், அந்த சித்திரை திருவிழாவுக்கு இந்த பகுதி மக்கள் மட்டும்தான் போனார்களா? பல்வேறு ஊர்களில் இருந்து அந்த திருவிழாவில் கலந்துகொண்டனர்.

அவர்களுக்கெல்லாம் ஒன்றும் ஆகவில்லை. இந்த 4 தெருவில் இருக்கும் மக்கள்தான் பாதிக்கப்பட்டுள்ளார்கள். காரணம் குடிநீரில் கழிவுநீர் கலந்துதான். ஆனால், இந்த அரசு உண்மையை மறைக்கிறது. இது கண்டிக்கத்தக்கது. ஏற்கனவே, சென்னை பல்லாவரத்திலும் இதேபோல் நடைபெற்றபோது, அப்போதும் அந்த பகுதி அமைச்சர் இப்படித்தான் சொன்னார். அரசு உண்மைகளை மறைக்கிறது” என்றார் எடப்பாடி பழனிசாமி. sewage contaminated-water trichy Uraiyoor Edapadi Vs K.N.Nehru

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share