சென்னை உட்பட 10 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பிருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.
வங்கக் கடலில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வு பகுதி தீவிர புயலாக வலுவடைந்து வரும் அக்டோபர் 28ஆம் தேதி ஆந்திராவில் கரையை கடக்கும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது.
இந்தநிலையில் தமிழகத்தில் எங்கெங்கு மழை பெய்யும் என்ற அறிவிப்பை சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ளது.
அதில், ‘நேற்று (24-10-2025) காலை தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவிய காற்றழுத்த தாழ்வு பகுதி, வலுப்பெற்று மாலை 17.30 மணி அளவில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக அதே பகுதிகளில் நிலவியது. இது, இன்று (25-10-2025) காலை 05.30 மணி அளவில், மேற்கு திசையில் நகர்ந்து, காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்று, 08.30 மணி அளவில் அதே பகுதிகளில், போர்ட் ப்ளேயரிலிருந்து (அந்தமான் தீவுகள்) மேற்கு-தென்மேற்கே சுமார் 440 கிலோ மீட்டர் தொலைவிலும், விசாகபட்டினத்திலிருந்து தென்கிழக்கே 970 கிலோ மீட்டர் தொலைவிலும், சென்னையிலிருந்து கிழக்கு-தென்கிழக்கே 970 கிலோ மீட்டர் தொலைவிலும், காக்கிநாடாவிலிருந்து தென்கிழக்கே 990 கிலோ மீட்டர் தொலைவிலும் நிலை கொண்டுள்ளது.
இது, மேற்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து, வருகின்ற 26-ஆம் தேதி ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாகவும், வருகின்ற 27-ஆம் தேதி காலை, தென்மேற்கு மற்றும் அதனை ஒட்டிய மத்தியமேற்கு வங்கக்கடல் பகுதிகளில் புயலாகவும் வலுவடைந்து, வடக்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து, 28-ஆம் தேதி வாக்கில் தீவிரப்புயலாக வலுப்பெறக்கூடும். மேலும், வடக்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து, ஆந்திர கடலோரப்பகுதிகளில், மசூலிப்பட்டினம் கலிங்கப்பட்டினத்திற்கு இடையே காக்கிநாடாவிற்கு அருகில் தீவிரப்புயலாக 28-ஆம் தேதி மாலை இரவு நேரத்தில் கடக்கக்கூடும். அச்சமயத்தில் காற்றின் வேகம் மணிக்கு 90 முதல் 100 கிலோ மீட்டர் வேகத்திலும், இடையிடையே 110 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்.
இதன்காரணமாக,
25-10-2025: தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
திருநெல்வேலி, தென்காசி, கோயம்புத்தூர் மாவட்டங்களின் மலைப்பகுதிகள், திருவள்ளூர்,
சென்னை, செங்கல்பட்டு, விழுப்புரம், கடலூர், கன்னியாகுமரி, தேனி, திண்டுக்கல் மற்றும்
நீலகிரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும், புதுவையிலும் கனமழை பெய்ய
வாய்ப்புள்ளது.
26-10-2025: தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
திருவள்ளூர், சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், விழுப்புரம், இராணிப்பேட்டை மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும், புதுவையிலும் கனமழை பெய்யவாய்ப்புள்ளது.
27-10-2025: தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
இராணிப்பேட்டை, திருவள்ளூர் மற்றும் சென்னை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கன முதல் மிக கனமழையும், விழுப்புரம், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், வேலூர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும், புதுவையிலும் கனமழை பெய்யவாய்ப்புள்ளது.
28-10-2025: தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
இராணிப்பேட்டை மற்றும் திருவள்ளூர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யவாய்ப்புள்ளது.
29-10-2025 முதல் 31-10-2025 வரை: தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
