கோடை காலத்தில் பயணிகளின் வசதிக்காக ஆம்னி ஸ்லீப்பர் பேருந்துகளை வாடகைக்கு எடுத்து இயக்க தமிழ்நாடு போக்குவரத்துக் கழகம் திட்டமிட்டுள்ளது. setc run omni sleeper buses
தமிழகத்தில் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் மக்கள் பலரும் வெளியூர் பயணத்தை விரும்புகின்றனர்.
இதனால் கிளாம்பாக்கம், கோயம்பேடு ஆகிய வெளியூர் பேருந்து நிலையங்களில் மக்கள் கூட்டம் அதிகமாக இருக்கிறது .
வார இறுதி நாட்களில் கூட்டம் அலைமோதுவதையும் காண முடிகிறது.
இந்தநிலையில் பயணிகளின் வசதியை கருத்தில் கொண்டு தனியார் சார்பில் இயக்கப்படும் ஆம்னி பேருந்துகளை வாடகைக்கு எடுத்து இயக்க அரசு திட்டமிட்டுள்ளது.
“தனியாரிடம் இருந்து ஏசி அல்லாத 20 ஸ்லீப்பர் பேருந்துகளை ஓட்டுநரோடு வாடகைக்கு எடுத்து, கிமீ தூரத்துக்கு இவ்வளவு வாடகை என ஒப்பந்தம் போடப்படவுள்ளது” என்று எஸ்.இ.டி.சி வட்டாரங்கள் கூறுகின்றன.
மே மாதம் முதல் வாரத்தில் இருந்து இந்த பேருந்துகள் இயக்கப்படும் என்றும், பொதுமக்களின் வரவேற்புக்கு ஏற்ப பேருந்துகளின் எண்ணிக்கை அதிகரிக்கப்படும் எனவும் போக்குவரத்து துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஏற்கனவே பண்டிகை நாட்களில் தனியாரிடம் இருந்து வாடகை பேருந்துகள் எடுத்து இயக்கப்பட்டு வருகின்றன. இதனால் போக்குவரத்து துறை தனியார் மயமாக்கப்படுகிறதா என்ற அச்சமும் எழுந்துள்ளது. ஆனால் போக்குவரத்து துறை பொதுத்துறையாகவே இருக்கும் என்று துறை அமைச்சர் சிவசங்கர் கூறியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. setc run omni sleeper buses