அமைச்சர் செந்தில் பாலாஜியின் சகோதரர் அசோக் குமார் ஏப்ரல் 24-ஆம் தேதிக்குள் ஜாமீன் உத்தரவாத தொகையாக தலா ரூ.2 லட்சம் செலுத்த வேண்டும் என்று சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் இன்று (ஏப்ரல் 9) உத்தரவிட்டுள்ளது.
போக்குவரத்து துறையில் வேலை வாங்கி தருவதாக பண மோசடி செய்த வழக்கில் சட்டவிரோத பணப்பரிவர்த்தனை நடந்திருப்பதாக அமைச்சர் செந்தில் பாலாஜி மீது அமலாக்கத்துறை தாக்கல் செய்த வழக்கானது, சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் விசாரணை நடைபெற்று வருகிறது.
இந்த வழக்கில் செந்தில் பாலாஜிக்கு எதிராக கடந்த ஆண்டு குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது. Sessions court order Senthil Balaji
இந்தநிலையில், இந்த வழக்கில் அமலாக்கத்துறை தரப்பில் கடந்த ஜனவரி மாதம் கூடுதல் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது. அந்த கூடுதல் குற்றப்பத்திரிகையில் செந்தில் பாலாஜியின் சகோதரர் அசோக் குமார், முன்னாள் உதவியாளர் சண்முகம் உள்ளிட்ட 13 பேரின் பெயர்கள் இடம்பெற்றிருந்தது.
கடந்த மார்ச் 26-ஆம் தேதி சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் இந்த வழக்கில் கூடுதல் குற்றப்பத்திரிகையில் இடம்பெற்றுள்ள 13 பேரும் ஏப்ரல் 9-ஆம் தேதி நீதிமன்றத்தில் ஆஜராக வேண்டும் என்று சம்மன் அனுப்பி உத்தரவிட்டது.
இந்தநிலையில், தலைமறைவாக இருந்த செந்தில் பாலாஜியின் சகோதரர் அசோக் குமார் சென்னை உயர்நீதிமன்ற வளாகத்தில் உள்ள முதன்மை அமர்வு நீதிமன்றத்திற்கு இன்று வந்திருந்தார். மேலும், இந்த வழக்கில் தொடர்புடைய சண்முகம், கார்த்திகேயன், கணேசன், வெற்றி செல்வம் உள்ளிட்ட 11 பேர் நீதிபதி கார்த்திகேயன் முன்பாக ஆஜராகியிருந்தனர்.
அப்போது நீதிபதி, “இந்த வழக்கில் ஒவ்வொருவரும் எவ்வளவு தொகை முறைகேடு செய்துள்ளனர்?” என்று அமலாக்கத்துறை வழக்கறிஞரிடம் கேள்வி எழுப்பினார். அமலாக்கத்துறை தரப்பில் பதிலளிக்க கால அவகாசம் கேட்கப்பட்டது.
இதை ஏற்றுக்கொண்ட நீதிபதி, குற்றப்பத்திரிகை நகலை இன்று ஆஜரான அனைவருக்கும் வழங்க வேண்டும், ஏப்ரல் 24-ஆம் தேதிக்குள் ஜாமீன் உத்தரவாத தொகையாக தலா ரூ.2 லட்சம் செலுத்த வேண்டும் என்று உத்தரவிட்டு வழக்கு விசாரணையை மீண்டும் ஏப்ரல் 25-ஆம் தேதிக்கு ஒத்திவைத்தார். Sessions court order Senthil Balaji