கடந்த ஆகஸ்டு மாதம் டென்னிஸ் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக தெரிவித்திருந்த டென்னிஸ் வீராங்கனை செரினா வில்லியம்ஸ், இப்போது அந்த முடிவை மாற்றிக் கொண்டிருக்கிறார்.
செரினா வில்லியம்ஸ் கடந்த ஆகஸ்டு மாதம் புகழ் பெற்ற வோக் இதழில், விளையாட்டில் இருந்து ஓய்வுபெற உள்ளதாகவும் குடும்பத்தில் கவனம் செலுத்த இருப்பதாகவும் தெரிவித்திருந்தார். இதையடுத்து செரினா வில்லியம்ஸின் ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்து இந்த முடிவை மறுபரிசீலனை செய்யுமாறு கோரிக்கை வைத்தார்கள்.
இந்த நிலையில் நேற்றிரவு (அக்டோபர் 24) அமெரிக்காவின் சான்பிரான்சிஸ்கோவில் தனது முதலீட்டு நிறுவனமான செரினா வென்ச்சர்ஸ் நிறுவனத்தை விளம்பரப்படுத்தும் நோக்கில் செய்தியாளர்களை சந்தித்தார் செரினா வில்லியம்ஸ்.

நான் இன்னும் ஓய்வுபெறவில்லை!
அப்போது அவர், “நான் இன்னும் ஓய்வு பற்றி யோசிக்கவில்லை. என் வாழ்க்கையில் முதல் முறையாக நான் டென்னிஸ் கோர்ட்டுக்கு காலையில் சென்று, போட்டிக்காக விளையாடாமல் சாதாரணமாக விளையாடியதை உணர்ந்தேன்.
அது மிகவும் வித்தியாசமாக இருந்தது. என் மிச்சமிருக்கும் வாழ்நாளின் முதல் நாளை போல அதை நான் அனுபவித்தேன். ஆனால் நான் இன்னும் அந்த சமநிலையைக் கண்டுபிடிக்க முயற்சிக்கிறேன்” என்று கூறியுள்ளார்.
தொடர்ந்து பேசிய அவர், “அதேநேரம் நான் இன்னும் டென்னிஸில் இருந்து ஓய்வுபெறவில்லை. மீண்டும் திரும்புவதற்கான வாய்ப்புகள் நிறைய இருக்கின்றன” என்றும் குறிப்பிட்டுள்ளார் செரினா வில்லியம்ஸ்.
இதுவரை 23 கிராண்ட்ஸ்லாம் பட்டங்களை குவித்திருக்கும் செரினா வில்லியம்ஸ், சுமார் ஆறு வருடங்கள் நம்பர் ஒன் அந்தஸ்தை தன் வசம் வைத்திருந்தவர். 2017 ஆம் ஆண்டு செரினா வில்லியம்ஸுக்கு திருமணம் ஆனது. குழந்தை பிறந்த பிறகு பழைய மாதிரி தொடர் வெற்றிகளைப் பெறமுடியவில்லை.
கடந்த மாதம் நடந்த அமெரிக்க ஓப்பன் டென்னிஸ் போட்டியில், செரினா மூன்றாவது சுற்றிலேயே தோல்வி அடைந்து வெளியேறினார். 27 ஆண்டு காலமாக டென்னிஸ் விளையாடி வரும் செரினா இந்த தோல்விக்குப் பிறகு ஓய்வு பெறுவது தொடர்பாக சூசகமாக போக் கட்டுரையில் தெரிவித்திருந்தார்.
ஆனால் இரண்டே மாதங்களில் தனது முடிவை மாற்றிக் கொண்டு மீண்டும் தொழில் முறை டென்னிஸ் விளையாடப் போவதாக தெரிவித்துள்ளார்.
–வேந்தன்
