மெரினா : மாற்றுத்திறனாளிகளுக்கு தனிப்பாதை திறப்பு!

By Balaji

|

Published on 28 Dec 2021, 12:00 AM

சென்னை மெரினா கடல் அழகை மாற்றுத்திறனாளிகளும் கண்டு ரசிக்கும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்ட தற்காலிக பாதை இன்று திறந்து வைக்கப்பட்டது.

இயந்திர வாழ்க்கையில் ஓடி கொண்டிருக்கும் மனிதர்களுக்கு மெரினா கடற்கரை உள்ளிட்ட சுற்றுலா தலங்கள் வரப்பிரசாதம். தினந்தோறும் மெரினா கடற்கரைக்கு மக்கள் சென்று கொண்டிருந்தாலும், வார இறுதிநாட்கள் மற்றும் பண்டிகை நாட்களில் மக்கள் கூட்டம் அலைமோதும். தமிழ்நாட்டின் பல்வேறு மாவட்டங்களிலிருந்தும் மக்கள் மெரினா கடற்கரைக்கு வருவது வழக்கம். இப்படி புகழ்பெற்ற மெரினா கடலின் அழகை அருகில் சென்று ரசிக்கவும், தண்ணீரில் கால் நனைக்கவும் முடியாமல், கடற்கரை சாலையோடு திரும்பி செல்கின்றனர் மாற்றுத்திறனாளிகள்.

ADVERTISEMENT

அதனால், மாற்றுத்திறனாளிகளும் சிரமமின்றி கடல் வரை சென்று திரும்ப வசதியாக தனி நடைபாதை வசதி செய்யப்பட வேண்டும் என்ற கோரிக்கை வலுத்து வந்தது.

இந்த கோரிக்கை ஏற்கப்பட்டு, சென்னை மெரினா கடற்கரை முதல் கோவளம் கடற்கரை வரை மாற்றுத்திறனாளிகள் கடல் அழகை காணும் வகையில் தனிப்பாதை ஏற்பாடு செய்யும் நடவடிக்கையில் சென்னை மாநகராட்சி மற்றும் தமிழ்நாடு சுற்றுலாத்துறை ஈடுபட்டு வந்தது.

ADVERTISEMENT

மரப்பலகைகளை கொண்டு தனிப்பாதை அமைக்கும் பணிகள் நிறைவடைந்தது. இதையடுத்து இன்று(டிசம்பர் 28) சென்னை மெரினா கடற்கரையில் ராணி மேரி கல்லூரிக்கு எதிரே மாற்றுத்திறனாளிகளுக்காக அமைக்கப்பட்டுள்ள தற்காலிக மரப்பாலத்தை சேப்பாக்கம் – திருவல்லிக்கேணி எம்.எல்.ஏ உதயநிதி ஸ்டாலின் திறந்து வைத்தார். இந்நிகழ்வில் நகர்புற வளர்ச்சித்துறை அமைச்சர் நேரு, இந்து அறநிலையத் துறை அமைச்சர் சேகர்பாபு, சென்னை மாநகராட்சி ஆணையர் ககன் தீப் சிங் பேடி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

இதன்மூலம் மாற்றுத்திறனாளிகளின் பலநாள் கனவு இன்று நனவாகியுள்ளது. இந்த பாதையில் தங்களது சொந்த வீல் சேர்களிலும் மாற்றுத்திறனாளிகள் செல்லலாம். வீல் சேர் இல்லாதவர்கள் மாநகராட்சி சார்பில் வைக்கப்பட்டிருக்கும் வீல் சேர்களை பயன்படுத்திக் கொள்ளலாம். கிட்டத்தட்ட ஒரு மாத காலத்திற்கு இந்த நடைபாதை அங்கு இருக்கும். டிசம்பர் 31ம் தேதி மற்றும் 1ஆம் தேதி புத்தாண்டு கொண்டாட்டம் காரணமாக கடற்கரைக்கு செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளதன் காரணமாக அன்றைய தினம் அனுமதி கிடையாது.

ADVERTISEMENT

**-வினிதா**

உண்மையின் மூச்சு உங்கள் விரலில்

மின்னம்பலம் மக்களுக்கான தனது சமரசமற்ற செய்திப் பணியைத் தொடர்ந்திட துணை நில்லுங்கள்.

Balaji

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!

Join Our Channel