“சென்னைக்குப் பல திட்டங்களைக் கொண்டுவர வேண்டும் என்பதால் மோடி எனக்கு தென் சென்னை தொகுதியை ஒதுக்கினார்” என்று தமிழிசை செளந்தரராஜன் இன்று (மார்ச் 23) தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் நாடாளுமன்றத் தேர்தல் ஏப்ரல் 19ஆம் தேதி ஒரே கட்டமாக நடைபெற உள்ளது. பாஜக சார்பில் போட்டியிடும் வேட்பாளர்கள் பட்டியல் கடந்த மார்ச் 21-ஆம் தேதி வெளியாகியுள்ளது. அதன்படி, தென்சென்னை நாடாளுமன்றத் தொகுதியில் தமிழிசை செளந்தரராஜன் போட்டியிடவுள்ளார். முன்னதாக, தெலுங்கானா ஆளுநர் மற்றும் புதுச்சேரி துணைநிலை ஆளுநர் பதவியை தமிழிசை செளந்தரராஜன் மார்ச் 18ஆம் தேதி ராஜினாமா செய்தார்.
இதனைத் தொடர்ந்து, மார்ச் 20ஆம் தேதி அவர் மீண்டும் பாஜகவில் இணைந்தார். இந்நிலையில், தேர்தலில் போட்டியிட அவருக்கு தென்சென்னை நாடாளுமன்றத் தொகுதி ஒதுக்கப்பட்டது. தென்சென்னை தொகுதியில் திமுக சார்பில் தமிழச்சி தங்கபாண்டியனும், அதிமுக சார்பில் ஜெயவர்த்தனும் போட்டியிடுகின்றனர்.
இந்நிலையில், தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசனை சென்னையில் இன்று (மார்ச் 23) சந்தித்து தமிழிசை செளந்தரராஜன் வாழ்த்து பெற்றார்.
பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த அவர், “தமிழகத்தில் பாஜக தலைமையில் ஒரு நல்ல கூட்டணி அமைந்திருக்கிறது. இத்தகைய கூட்டணி அமைவதற்குப் பல வகையில் பக்கபலமாக இருந்தவர் ஜி.கே.வாசன்.
நான் சிறுவயதில் இருந்தே மூப்பனார், காமராஜர் ஆகியோரை பார்த்து வளர்ந்தவள். தென்சென்னை தொகுதியில் போட்டியிடும் வாய்ப்பை பாரதிய ஜனதா கட்சி எனக்குக் கொடுத்து இருக்கிறது.
நேரடியாக மக்களுக்கு நான் சேவை செய்ய வேண்டும் என்பதற்காகத் தான் மீண்டும் அரசியலுக்கு வந்தேன். பிரதமர் எனக்கு தென்சென்னை தொகுதியை ஒதுக்கியபோது, ‘நேரடியாக நாம் சென்னைக்குப் பல திட்டங்களைக் கொண்டுவர வேண்டும். இன்னும் மக்களுக்கு உதவி செய்ய வேண்டும். மேலும், உங்களைப் போன்ற நல்ல பாராளுமன்ற உறுப்பினர் தென்சென்னைக்கு கிடைக்க வேண்டும். அப்போதுதான், மத்திய அரசு மக்களை அணுகுவது மிக எளிதாக இருக்கும்’ எனக் கூறினார்.
அதனால், என்னைப் பொறுத்தமட்டில் நிச்சயமாக எனது கடுமையான உழைப்பின் மூலம் நான் தென்சென்னை தொகுதியில் வெற்றி பெறுவேன்.
எனது உழைப்பு மட்டுமல்ல, கட்சியின் உழைப்பு, தொண்டர்களின் உழைப்பு ஆகியவற்றால் நாங்கள் நிச்சயமாக வெற்றி பெறுவோம். இந்த வெற்றி தாமரையை பிரதமரிடம் நாங்கள் சமர்ப்பிப்போம். தென்சென்னையின் வளர்ச்சியில் நாங்கள் முக்கிய பங்கு வகிப்போம்.
இப்பொழுதே என்னென்ன பிரச்சனைகள் இருக்கிறது என தெரிந்துகொள்ள ஆரம்பித்துவிட்டோம். தென்சென்னைக்கு எனத் தனியாக ஒரு தேர்தல் அறிக்கையைத் தயாரித்து இருக்கிறோம். அதனை மிக விரைவில் வெளியிட இருக்கிறோம்.
அதன்மூலம், தொகுதியை நாங்கள் எந்த அளவுக்கு விரும்பி ஏற்றுள்ளோம் எனவும், இங்கு எவ்வளவு பிரச்சனைகள் இருக்கிறது எனவும் மக்களுக்குத் தெரியும். மத்திய அரசின் துணையோடு, மக்களுக்காக நான் உழைப்பேன்” என தமிழிசை செளந்தரராஜன் தெரிவித்துள்ளார்.
இந்து
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
அன்று பூஜ்ஜியம்… இன்று பாஜகவுடன் கூட்டணியா? – ராமதாஸை விமர்சித்த எடப்பாடி
IPL 2024: 454 நாட்களுக்கு பிறகு ‘கேப்டனாக’ களமிறங்கும் ரிஷப் பண்ட்…சறுக்குவாரா? சாதிப்பாரா?
Comments are closed.