நெல்லையில் ஓய்வுபெற்ற உதவி ஆய்வாளர் ஜாகிர் உசேன் கொல்லப்பட்டதன் எதிரொலியாக நேற்று டிரான்ஸ்பர் செய்யப்பட்ட செந்தில்குமார் இன்று (மார்ச் 20) சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார். senthilkumar suspend due to jakhir hussain death
நெல்லை டவுனைச் சேர்ந்த ஓய்வுபெற்ற காவல் அதிகாரியான ஜாகீர் உசேன் பிஜிலி(வயது 60) நிலத் தகராறு காரணமாக கடந்த 18ஆம் தேதி அதிகாலையில் ரம்ஜான் தொழுகைக்கு சென்றுவிட்டு திரும்பியபோது படுகொலை செய்யப்பட்டார்.
இந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில், போலீசார் நடத்திய விசாரணையில் ஜாகீர் உசேனுடன் நிலத்தகராறில் ஈடுபட்டு வந்த கிருஷ்ணமூர்த்தி என்ற தெளபிக் மற்றும் அவரது உறவினர்கள் தான் கொலை செய்தது உறுதியானது.
இந்த நிலையில் கொலை நடந்த அன்றே தெளபிக்கின் தம்பி கார்த்திக், தெளபிக் மனைவியான நூர்ஜகானின் தம்பி அக்பர் ஷா இருவரும் நெல்லை நீதிமன்றத்தில் சரண் அடைந்தனர்.
தொடர்ந்து தலைமறைவாக இருந்த தெளபிக்கை நேற்று போலீசார் ரெட்டியார்பட்டி பகுதியில் வைத்து சுட்டுப்பிடித்தனர். நூர்ஜகானை பிடிக்க தனிப்படை திருவனந்தபுரம் விரைந்துள்ளது.
இதற்கிடையே ஜாகிர் உசேன் கொலை வழக்கில் நடவடிக்கை எடுக்க தவறியதாக நேற்று ஆய்வாளர் கோபால கிருஷ்ணன் சஸ்பெண்ட் செய்யப்பட்டார். நெல்லை டவுன் சரக காவல் உதவி ஆணையர் செந்தில் குமார், கோவை மாநகர சிறப்பு நுண்ணறிவுப் பிரிவு உதவி ஆணையராக இடமாற்றம் செய்யப்பட்டார்.
இந்த நிலையில் டிரான்ஸ்பர் செய்யப்பட்ட செந்தில்குமாரை சஸ்பெண்ட் செய்ய டிஜிபி பரிந்துரை செய்த நிலையில் அவரை சஸ்பெண்ட் செய்து உள்துறை செயலாளர் தீரஜ் குமார் இன்று உத்தரவு பிறப்பித்துள்ளார்.