மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜியின் ஜாமீனை ரத்து செய்யக்கோரிய வழக்கின் விசாரணையை உச்சநீதிமன்றம் இன்று (ஏப்ரல் 9) கடைசி நேரத்தில் ஒத்திவைத்துள்ளது. senthilbalaji cash for job
கடந்த 2024 செப்டம்பர் 26-ஆம் தேதி சட்டவிரோத பணப் பரிமாற்ற வழக்கில் அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு ஜாமீன் வழங்கி உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது.
இதனையடுத்து செந்தில் பாலாஜி அமைச்சராகி விட்டதால் அவருக்கு எதிரான வழக்கில் தைரியமாக சாட்சி சொல்வதற்கு சாட்சிகள் தயங்குகிறார்கள். எனவே, செந்தில் பாலாஜியின் ஜாமீனை ரத்து செய்ய வேண்டும் என வித்யா குமார் என்பவர் உச்ச நீதிமன்றத்தில் ஒரு மனுவை தாக்கல் செய்தார்.

இந்த வழக்கை உச்சநீதிமன்ற நீதிபதிகள் அபய் ஓகா, அகஸ்டின் ஜார்ஜ் ஆகியோர் அடங்கிய அமர்வு விசாரித்து வந்தது.
இந்த வழக்கின் விசாரணை கடந்த மார்ச் 24-ஆம் தேதி உச்சநீதிமன்றத்தில் வந்தபோது, செந்தில் பாலாஜி தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் முகுல் ரோகத்கி, “எழுத்து ரீதியாக பதில் சொல்வதற்கு எங்களுக்கு இன்னும் கால அவகாசம் வேண்டும்” என்று வாதிட்டார்.
இந்த வாதத்தை கேட்டதும் கோபமான உச்சநீதிமன்ற நீதிபதி அபய் எஸ்.ஓகா, “இது போன்ற டெக்னிக்கல் விஷயங்களை வைத்துக்கொண்டு நீதிமன்றத்தோடு விளையாடலாம் என நினைக்காதீர்கள். உங்களுடைய இந்த வாதம் எங்களுக்கு அதிர்ச்சி அளிக்கிறது.
இந்த வழக்கு விசாரணைக்காகவே எங்களுடைய வழக்கமான அமர்வின் முன்பாக வந்துள்ள வழக்குகளை ஒத்தி வைத்துவிட்டு இந்த வழக்கை விசாரித்துக் கொண்டிருக்கிறோம். நீதிமன்ற நேரத்தை வீணடிக்காதீர்கள்.
இதுதான் உங்களுக்கு இறுதி வாய்ப்பு. இன்னும் பத்து நாட்களுக்குள் செந்தில் பாலாஜி அமைச்சராக நீடிக்க விரும்புகிறாரா இல்லையா? என்று பிராமாண பத்திரம் தாக்கல் செய்ய வேண்டும்” என்று உத்தரவிட்டனர்.
இந்தநிலையில், செந்தில் பாலாஜி நேற்று (ஏப்ரல் 8) தாக்கல் செய்த பிராமண பத்திரத்தில்,”உச்ச நீதிமன்றத்தின் ஜாமீன் உத்தரவில் அமைச்சராக பதவி வகிக்க தடை விதிக்கப்படவில்லை. ஜாமீன் நிபந்தனைகளை மீறவில்லை. மேலும், நான் அமைச்சரானது எந்த சட்டத்திற்கும் முரணானது அல்ல. இந்த மனுக்களை ஆரம்பக்கட்டத்திலேயே நிராகரிக்க வேண்டும்” என்று தெரிவித்திருந்தார்.
இந்தநிலையில், நேரமின்மை காரணமாக செந்தில் பாலாஜியின் வழக்கு விசாரணையை ஒத்திவைப்பதாக உச்சநீதிமன்ற நீதிபதிகள் இன்று தெரிவித்துள்ளனர்.

இந்தசூழலில், கடந்த ஒன்றரை வருடத்திற்கும் மேலாக தலைமறைவாக இருந்த அமைச்சர் செந்தில் பாலாஜியின் சகோதரர் அசோக் குமார் சென்னை சிறப்பு நீதிமன்றத்தில் இன்று ஆஜரானார். இதனையடுத்து, ஏப்ரல் 24-ஆம் தேதிக்குள் ஜாமீன் உத்தரவாத தொகையாக ரூ.2 லட்சம் செலுத்த வேண்டும் என்று நீதிபதி கார்த்திகேயன் உத்தரவிட்டார். senthilbalaji cash for job