புழல் சிறையில் இருந்து இன்று (செப்டம்பர் 26) வெளியே வந்த முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி அண்ணா, கலைஞர் நினைவிடத்திற்கு சென்று மரியாதை செலுத்தியுள்ளார்.
அமலாக்கத் துறையால் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்ட முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு உச்ச நீதிமன்றம் இன்று ஜாமீன் வழங்கியது. தொடர்ந்து சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றமும் அவரை ஜாமீனில் விடுவித்து உத்தரவிட்டது.
இதனையடுத்து 471 நாட்களுக்கு பின்னர் சிறையில் இருந்து வெளியே வந்த செந்தில் பாலாஜியை திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி மாலை அணிவித்து வரவேற்றார். பின்னர் நூற்றுக்கணக்கான தொண்டர்கள் செந்தில் பாலாஜியை சூழ்ந்துகொண்டு மலர் தூவியும், வாழ்த்தி கோஷமிட்டும் உற்சாகமாக வரவேற்றனர்.
தொடர்ந்து அங்கிருந்து காரில் புறப்பட்ட செந்தில் பாலாஜி சென்னை மெரினா கடற்கரையில் உள்ள அண்ணா, கலைஞர் நினைவிடத்திற்கு சென்று மலர் தூவி மரியாதை செலுத்தினார்.
அவருடன் அமைச்சர் பொன்முடி மற்றும் கட்சியின் மூத்த நிர்வாகிகள் மரியாதை செலுத்தினார்.
முன்னதாக புழல் சிறையில் இருந்து வெளியே வந்த செந்தில்பாலாஜி செய்தியாளர்களை முதன்முறையாக சந்தித்து அளித்த பேட்டியில், ”என்மீது அன்பும் பாசமும் கொண்ட தமிழ்நாடு முதல்வர் ஸ்டாலினுக்கு வாழ்நாள் நன்றியை சமர்ப்பிக்கிறேன். அமைச்சர் உதயநிதி ஸ்டாலினுக்கும் நன்றி. அரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமாக என் மீது வழக்கு போட்டார்கள். அதை நீதிமன்றத்தில் எதிர்கொண்டு மீண்டு வருவேன்” என்று கூறியது குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
பிரியா
471 நாட்களுக்கு பிறகு… ஜாமீனில் வெளியே வந்தார் செந்தில் பாலாஜி
செந்தில் பாலாஜியை வரவேற்க காத்திருக்கும் திமுகவினர்… போக்குவரத்து ஸ்தம்பித்தது!
Comments are closed.