வைஃபை ஆன் செய்ததும் அமலாக்க துறையால் கடந்த ஒன்றரை ஆண்டுகளுக்கு மேலாக தேடப்பட்டு வந்த அமைச்சர் செந்தில் பாலாஜியின் சகோதரரான அசோக்குமார் சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் ஆஜரான வீடியோ காட்சிகள் இன்பாக்ஸில் வந்து விழுந்தன.
அவற்றைப் பார்த்துவிட்டு வாட்ஸ்அப் தனது மெசேஜ் டைப் செய்ய தொடங்கியது.
“கடந்த 2023 ஜூன் 14ஆம் தேதி அப்போதைய அமைச்சர் செந்தில் பாலாஜியை விசாரணை செய்வதற்காக அவரது வீட்டுக்கு சென்றது அமலாக்கத்துறை.
இரவு முழுவதும் விசாரித்து நள்ளிரவு கடந்து செந்தில் பாலாஜியை அமலாக்க துறையினர் கைது செய்தார்கள். அப்போது செந்தில் பாலாஜிக்கு இதய பிரச்சினை ஏற்பட்டு அவர் உடனடியாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். Senthil Balaji’s brother appear ED case in court
செந்தில் பாலாஜியை விசாரிப்பதற்கு அழைத்தபோதே, அவரது தம்பி அசோக்குமாரையும் விசாரணைக்காக அமலாக்கத் துறையினர் சம்மன் கொடுத்து அழைத்திருந்தார்கள்.
ஆனால் அசோக்குமார் அப்போது அமலாக்கத்துறை விசாரணைக்கு ஆஜராகவில்லை. செந்தில் பாலாஜி கைது செய்யப்பட்டு அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று அதன் பிறகு சுமார் ஒன்றரை ஆண்டுகள் சிறையில் இருந்தபோதும் அவரது தம்பி அசோக்குமார் அமலாக்கத்துறை சம்மனுக்கு ஆஜராகவில்லை.
இந்த நிலையில் சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் செந்தில் பாலாஜி, அசோக்குமார் உள்ளிட்டோர் மீதான மூல வழக்கு நடைபெற்று வந்தது. இதில் ஏற்கனவே செந்தில் பாலாஜி மீது அமலாக்கத்துறை குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்தது.
கடந்த ஜனவரி மாதம் கூடுதல் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்டது. அதில் அசோக்குமார் உள்ளிட்ட 12 பேர் இடம்பெற்றிருந்தனர்.

இந்த குற்றப்பத்திரிகையை ஆராய்ந்த சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் கடந்த மார்ச் 26 ஆம் தேதி, ‘கூடுதல் குற்றப் பத்திரிகையில் இடம்பெற்றிருக்கும் அனைவரும் வரும் ஏப்ரல் 9 ஆம் தேதி நீதிமன்றத்தில் ஆஜராக வேண்டும்‘ என உத்தரவிட்டது.
இந்த வழக்கு சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் நடந்து கொண்டிருந்த இதே நேரம்… செந்தில் பாலாஜியின் ஜாமினை ரத்து செய்யக்கோரி உச்ச நீதிமன்றத்தில் தொடுக்கப்பட்ட வழக்கு விசாரணையும் தொடர்ந்து நடந்து வந்தது.
கடந்த மார்ச் 24ஆம் தேதி அந்த வழக்கு விசாரணைக்கு வந்த போது, இன்னும் பத்து நாட்களுக்குள் செந்தில் பாலாஜி, தான் அமைச்சராக இருப்பது சரியா என்ற கேள்விக்கு சட்டரீதியான பதிலை அபிடவிட்டாக தாக்கல் செய்ய வேண்டும் என உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது. அந்த உத்தரவை இட்ட பிறகு வழக்கை ஏப்ரல் ஒன்பதாம் தேதிக்கு உச்ச நீதிமன்றம் ஒத்தி வைத்தது.
சென்னை செசன்ஸ் நீதிமன்றம் செந்தில் பாலாஜியின் தம்பி அசோக்குமார் உள்ளிட்டோரை ஆஜராவதற்கும் அதே ஒன்பதாம் தேதியை தான் குறித்தது என்பது இங்கே குறிப்பிடத் தக்கது.
உச்சநீதிமன்றத்தில் இன்று (ஏப்ரல் 9) செந்தில் பாலாஜியின் ஜாமீனுக்கு எதிரான மனுவின் விசாரணை நடைபெறவில்லை. ஏனென்றால் இந்த விசாரணையை மேற்கொள்ளும் சிறப்பு அமர்வில் இருக்கும் நீதிபதிகள் தங்களுடைய வழக்கமான அமர்வில் பிஸியாக இருந்ததால் இன்று வழக்கை விசாரிக்க முடியவில்லை.

அதே நேரம் ஜூன் 9ஆம் தேதி பகல் பொழுதில் சென்னை செஷன்ஸ் நீதிமன்றத்தில் சுமார் ஒன்றரை ஆண்டுகளுக்கு மேலாக சட்டத்துக்கு வெளியே இருக்கிறார் என்று கருதப்பட்ட அசோக்குமார் ஆஜர் ஆனார். அவருக்கு குற்றப்பத்திரிக்கை நகல் வழங்கப்பட்டது. இவர்கள் அனைவரும் ஜாமீனில் செல்லலாம் என நிபந்தனை விதித்து நீதிபதி உத்தரவிட்டார்.
இத்தனை ஆண்டு காலமாக அமலாக்கத்துறை பாஷையில் தலைமறைவாக இருந்த அசோக்குமார் இன்று நீதிமன்றத்தில் ஆஜரானது ஏன்? Senthil Balaji’s brother appear ED case in court
செந்தில் பாலாஜி வட்டாரங்களிலும் அமலாக்கத்துறை வட்டாரங்களிலும் விசாரித்த போது…
‘உச்சநீதிமன்றத்தில் செந்தில் பாலாஜிக்கு வழங்கப்பட்ட ஜாமீனுக்கு எதிரான வழக்கு விசாரணை நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. இதில் அமலாக்கத்துறை செந்தில் பாலாஜி அமைச்சராக இருக்கும் காரணத்தால் தான் அவரது தம்பி அசோக்குமார் நீதிமன்றங்களையும் அமலாக்க துறையையும் சட்டத்தையும் மதிக்காமல் தொடர்ந்து தலைமறைவாக இருக்கிறார். அவர் மீது குற்றப் பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்டும் அவர் விசாரணைக்கு ஒத்துழைப்பதில்லை. காரணம் அவருடைய அண்ணன் செந்தில் பாலாஜி அமைச்சராக இருப்பது தான் என்ற வாதத்தையும் முதன்மைப்படுத்த திட்டமிட்டு இருந்தது.
இந்த நிலையில்தான் அசோக்குமார் இனியும் சட்டத்துக்கு வெளியே இருப்பது… உச்ச நீதிமன்றத்தில் நடைபெற்றுவரும் வழக்கை பாதிக்கக்கூடும் என்று கருதி செந்தில் பாலாஜியின் வழக்கறிஞர்கள் ஆலோசனை நடத்தினார்கள். அதன் அடிப்படையில் தான் அசோக்குமார் இன்று நீதிமன்றத்தில் ஆஜர் ஆனார்.
தன்னால் அண்ணன் செந்தில் பாலாஜியின் அமைச்சர் பதவிக்கோ அல்லது அவரது ஜாமீனுக்கோ சட்ட ரீதியாக எந்த குறைந்தபட்ச நெருடலும் ஏற்பட்டு விடக்கூடாது என்பதற்காகவே அசோக் குமார் வழக்கறிஞர்கள் அறிவுறுத்தல்படி இன்று ஆஜராகி இருக்கிறார் என்கிறார்கள்.
செந்தில் பாலாஜி ஜாமினில் வெளியே வந்த பிறகு உடனடியாக அமைச்சர் ஆனார். அப்போது அவரை பல்வேறு பிரமுகர்கள் சந்தித்துப் பேசினார்கள். அந்த சந்தர்ப்பங்களில் தம்பி எப்படி இருக்காரு என்று கேட்டபோது அவருக்கு என்ன நல்லா இருக்காரு என்றுதான் செந்தில் பாலாஜி பதில் சொல்லியிருக்கிறார்.
அமலாக்கத்துறை தலைமறைவு என்று சொன்னாலும் அசோக் குமார் சென்னை, தூத்துக்குடி, கரூர் உள்ளிட்ட தமிழகத்தின் பல்வேறு பகுதிகளுக்கு ஒரு மாருதி ஸ்விப்ட் வண்டியில் சர்வ சாதாரணமாக சென்று கொண்டிருந்தார்.
செந்தில் பாலாஜிக்கு உச்சநீதிமன்றம் பெயில் அளித்த போது அந்த உத்தரவுகளை சென்னை செஷன்ஸ் நீதிமன்றத்தில் ஒப்படைக்க அவரது வழக்கறிஞர்கள் சென்றபோது கூட காரில் அசோக் குமாரும் இருந்தார். Senthil Balaji’s brother appear ED case in court
இப்படிப்பட்ட நிலையில்தான் உச்சநீதிமன்ற வழக்கில் தன்னால் ஒரு நெருடல் ஏற்பட்டு விடக்கூடாது என்பதற்காக நீதிமன்றம் முன் ஆஜராகி ஜாமீனும் பெற்றிருக்கிறார்’ என்ற மெசேஜ்க்கு சென்ட் கொடுத்து ஆஃப்லைன் போனது வாட்ஸ் அப்.
