அமலாக்கத் துறை வழக்கில் கைது செய்யப்பட்ட அமைச்சர் செந்தில் பாலாஜியின் ஜாமீன் மனு மீது சென்னை உயர் நீதிமன்றம் நாளை (அக்டோபர் 18) தீர்ப்பு வழங்குகிறது.
சட்டவிரோத பணமோசடி தடுப்புச் சட்டத்தின் கீழ் அமைச்சர் செந்தில் பாலாஜியை அமலாக்கத் துறை கடந்த ஜூன் 14ஆம் தேதி கைது செய்தது. ஜூன் 21ஆம் தேதி காவிரி மருத்துவமனையில் அவருக்கு பைபாஸ் சர்ஜரி செய்யப்பட்டது. அதன்பின் ஜூலை 17ஆம் தேதி சென்னை புழல் சிறைக்கு மாற்றப்பட்டார்.
சிறை மருத்துவமனையிலேயே சிகிச்சை பெற்று வந்த செந்தில் பாலாஜி உடல்நலக் குறைவால் கடந்த அக்டோபர் 9 ஆம் தேதி சென்னை ஸ்டான்லி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று மீண்டும் சிறையில் அடைக்கப்பட்டார்.
இதனிடையே செந்தில் பாலாஜியின் ஜாமீன் மனுவைச் சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் இருமுறை தள்ளுபடி செய்த நிலையில், சென்னை உயர் நீதிமன்றத்தில் செந்தில் பாலாஜிக்கு ஜாமீன் வழங்கக் கேட்டு அவரது தரப்பில் மூத்த வழக்கறிஞர் என்.ஆர்.இளங்கோ முறையிட்டார். அமலாக்கத்துறை தரப்பில் அடிஷனல் சொலிசிட்டர் ஜெனரல் ஏ.ஆர்.எல். சுந்தரேசன், என்.ரமேஷ் ஆகியோர் வாதாடினர்.
இந்த மனு கடந்த அக்டோபர் 11ஆம் தேதி நீதிபதி ஜெயச்சந்திரன் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது செந்தில் பாலாஜி தரப்பில், அவரது உடல் நிலையைக் கருத்தில் கொண்டு ஜாமீன் வழங்க வேண்டும் என்று வாதிடப்பட்டது.
இதையடுத்து அமலாக்கத் துறை பதிலளிக்க உத்தரவிட்டு வழக்கை அக்டோபர் 16ஆம் தேதி நீதிபதி ஜெயச்சந்திரன் ஒத்திவைத்தார்.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ்ஆப் சேனலில் இணையுங்கள்…
அக்டோபர் 16ஆம் தேதி இந்த வழக்கு விசாரணைக்கு வந்த போது, அமலாக்கத் துறை தரப்பில், செந்தில் பாலாஜி நலமாகவும் உறுதியாகவும் இருக்கிறார். ஜாமீன் பெறுவதற்காக உடல்நிலை சரியில்லை என தந்திரம் செய்கிறார். மேலும், “செந்தில் பாலாஜியிடம் இருந்து கைப்பற்றிய ஆவணங்களின்படி ரூ.67 கோடி சட்டவிரோத பணம் இருப்பதாக தெரிகிறது. ஸ்டான்லி மருத்துவமனையின் அறிக்கைபடி செந்தில்பாலாஜி வெளிமருத்துவமனையில் சிகிச்சைபெற தேவையில்லை.
மேலும் செந்தில்பாலாஜியால் அரைமணி நேரம் கூட நிற்க முடியவில்லை என்று வாதிடுகிறார்கள். அரைமணி நேரம் நிற்க முடியவில்லை என்றால் உட்கார்ந்துகொள்ளலாம். அரைமணி நேரம் தொடர்ந்து உட்கார முடியவில்லை என்றால் நின்று கொள்ளலாம். இரண்டும் முடியவில்லை என்றால் படுத்துக் கொள்ளலாம்” என்று அமலாக்கத்துறை வழக்கறிஞர் சொன்னதும் செந்தில்பாலாஜி தரப்பில் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.
இதன் பின் நீதிபதி, “செந்தில் பாலாஜிக்கு சிறை மருத்துவமனையிலேயே சிகிச்சை அளிக்க முடியாதா? செந்தில்பாலாஜிக்கு ஜாமீன் அளித்தால் சாட்சியை கலைப்பார் என்று அமலாக்கத்துறை கூறுகிறதே?” என்று கேள்வி எழுப்பினார்.
இதற்கு செந்தில் பாலாஜி தரப்பில், “செந்தில்பாலாஜியின் உடல் நிலை குறித்து நீதிமன்றமே மருத்துவர்களை நியமித்து ஆராய்ந்து கொள்ளட்டும். இந்த வழக்கு தொடர்பான ஆவணங்கள் அமலாக்கத்துறையிடம் உள்ளபோது சாட்சிகளை எப்படி செந்தில்பாலாஜியால் கலைக்க முடியும்? அவரது உடல் நிலை கருதி மட்டுமே ஜாமீன் கேட்கிறோம்” என்று பதிலளித்தார்.
இரு தரப்பு வாதங்களும் முடிவடைந்த நிலையில் நீதிபதி ஜெயச்சந்திரன் தேதி குறிப்பிடாமல் ஒத்தி வைத்தார்.
இந்நிலையில் சென்னை உயர் நீதிமன்றம் நாளை காலை 10.30 க்கு செந்தில் பாலாஜி ஜாமீன் கோரிய வழக்கில் தீர்ப்பு வழங்கவுள்ளது.
செந்தில் பாலாஜி கைதாகி 4 மாதங்களுக்கும் மேலாகியிருக்கும் நிலையில், அவருக்கு ஜாமீன் கிடைக்குமா அல்லது அமலாக்கத் துறையின் கோரிக்கையை ஏற்று மனு தள்ளுபடி செய்யப்படுமா என்பது நாளை காலை 10.30 மணிக்குத் தெரியவரும்.
பிரியா
கார்த்தியின் “ஜப்பான்” டீசர் வெளியானது!









