சிறையில் இருந்த போது ஒவ்வொரு நாளும் முதல்வர் ஸ்டாலினையே நினைத்துக் கொண்டிருந்ததாக முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி தெரிவித்துள்ளார்.
செந்தில் பாலாஜி அமலாக்கத் துறையால் கடந்த ஆண்டு ஜூன் மாதம் கைது செய்யப்பட்டார். ஒரு வருடத்துக்கும் மேலாக சட்டப் போராட்டம் நடத்தி உச்ச நீதிமன்றத்தால் நிபந்தனை ஜாமீன் பெற்று சிறையில் இருந்து நேற்று முன்தினம் மாலை வெளியே வந்தார்.
சென்னை மாரிஸ் ஹோட்டலில் தங்கியுள்ள செந்தில் பாலாஜியை நேற்று திமுக அமைச்சர்கள் கே.என் நேரு, தங்கம் தென்னரசு, கே.கே.எஸ்.எஸ்.ஆர் ராமச்சந்திரன், மா.சுப்பிரமணியன், காங்கிரஸ் எம்பி ஜோதிமணி உள்ளிட்ட பலர் நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்தனர்.
இந்த நிலையில் நேற்று (செப்டம்பர் 27) மாலை அமைச்சர் உதயநிதியை நேரில் சென்று சந்தித்தார் செந்தில் பாலாஜி.
அதைத்தொடர்ந்து டெல்லி சென்று விட்டு நேற்று இரவு சென்னை திரும்பிய முதல்வர் ஸ்டாலினை விமான நிலையம் சென்று வரவேற்றார். முதல்வர் காலில் விழுந்து செந்தில் பாலாஜி ஆசி பெற்றார்.
இந்த சூழலில் முதல்வரை சந்தித்த புகைப்படத்தை பகிர்ந்துள்ள செந்தில் பாலாஜி, “471 நாட்கள் தனிமையின் இருள் நீங்கி சூரியனின் காலடியில்.
ஒவ்வொரு நாளும், நிமிடமும், நொடியும் உங்களையே நினைத்திருந்தேன் தலைவரே.! தாயுமானவராய் தாங்கினீர்கள்.. என் உயிர் உங்கள் காலடியில் சமர்ப்பணம். உங்கள் நம்பிக்கைக்கும் அன்பிற்கும் வாழ்நாள் முழுக்க நன்றிக் கடன்பட்டிருக்கிறேன்!” என்று குறிப்பிட்டுள்ளார்.
உதயநிதியை சந்தித்த புகைப்படத்தை பகிர்ந்துள்ள அவர், “காலமெல்லாம் நிலைத்திருக்கும் கருப்பு சிவப்பின் எதிர்காலம்..
தமிழ் கூறு நல்லுலகின் நம்பிக்கை.. தமிழர்களின் நம்பிக்கை…
என்னை தோளோடு தோளாக அணைத்துக் கொண்ட இளஞ்சூரியனுக்கு வாழ்நாளுக்கும் கடமைப்பட்டிருக்கிறேன்” என்று உருக்கமாக பதிவிட்டுள்ளார்.
கடந்த 2023 ஜூன் 13ஆம் தேதி செந்தில் பாலாஜி வீட்டில் அமலாக்கத்துறை சோதனை நடத்துவதற்கு முந்தைய நாளான ஜூன் 12ஆம் தேதி கடைசியாக செந்தில் பாலாஜி தனது ட்விட்டர் பக்கத்தை பயன்படுத்திய நிலையில் மீண்டும் நேற்று செப்டம்பர் 27 முதல் பயன்படுத்த தொடங்கியுள்ளார்.
ஏற்கனவே சிறையில் இருந்து வெளியே வந்த போது, முதல்வர் ஸ்டாலினுக்கு வாழ்நாள் நன்றி தெரிவிப்பதாக செந்தில் பாலாஜி பேட்டியளித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
பிரியா
சமைக்காத இயற்கை உணவின் அற்புதம்!
டாப் 10 செய்திகள் : திமுக பவள விழா முதல் 19 மாவட்டங்களில் மழை வரை!
பிரியா