சிறையில் இருந்து செந்தில்பாலாஜி ஸ்கெட்ச்… ராகுல் வரை சென்று கரூரை மீட்ட ஜோதிமணி.. தேர்தல் களத்தில் என்ன நடக்கும்?

Published On:

| By Aara

திமுக கூட்டணியில் காங்கிரஸ் கட்சிக்கு பத்து தொகுதிகள் ஏற்கனவே ஒதுக்கப்பட்ட நிலையில், அந்த தொகுதிகள் என்னென்னவென்று இன்று மார்ச் 18 ஆம் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.

அதில் திருவள்ளூர், கடலூர், மயிலாடுதுறை, சிவகங்கை, கிருஷ்ணகிரி, திருநெல்வேலி, கரூர், விருதுநகர், கன்னியாகுமரி மற்றும் புதுச்சேரி ஆகிய தொகுதிகள் காங்கிரஸ் கட்சிக்கு ஒதுக்கப்பட்டுள்ளன.

இதில் மிக முக்கியமான அம்சம் என்னவென்றால், தன்னிடம் இருந்து கைநழுவி போக இருந்த கரூர் தொகுதியை பலத்த போராட்டம் நடத்தி மீண்டும் காங்கிரசுக்கு ஒதுக்க வைத்திருக்கிறார் இப்போதைய கரூர் எம்பி ஜோதிமணி.

ஆம். தற்போது சிறையில் இருக்கும் கரூர் திமுக மாசெவான முன்னாள் அமைச்சர் செந்தில்பாலாஜி, ‘இந்த முறை கரூர் தொகுதியில் திமுகவே போட்டியிட வேண்டும்’ என்று தலைமைக்கு சிறையில் இருந்தபடியே தெரிவித்திருந்தார். இந்நிலையில்தான் டெல்லி வரை போராட்டம் நடத்தி கரூரில் போட்டியிடும் வாய்ப்பை மீண்டும் பெற்றிருக்கிறார் ஜோதிமணி.

2019 மக்களவைத் தேர்தலில் கரூர் தொகுதி காங்கிரஸ் வேட்பாளராக களம் இறக்கப்பட்டார் ஜோதிமணி. அப்போது கரூர் மாவட்ட திமுக செயலாளராக செந்தில் பாலாஜி இருந்தார். ஆளும் கட்சியாக அதிமுக இருந்ததால் வேட்பு மனு தாக்கல் செய்வதிலிருந்து இறுதி கட்டப் பிரச்சாரம் வரை, ஜோதிமணிக்கு ஆளுங்கட்சியான அதிமுக தரப்பில் இருந்து கடுமையான கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன.

தேர்தல் நடத்தும் அலுவலரான கரூர் மாவட்ட கலெக்டரை எதிர்த்து ஜோதிமணி போராட்டங்களை நடத்தினார். அப்போது, ஜோதிமணியிடம், ’இப்படி எல்லாம் இருந்தால் எலக்க்ஷனையே நிறுத்திடுவேன்’ என்று கரூர் தொகுதி தேர்தல் அலுவலரும், கலெக்டருமான அன்பழகன் எச்சரிக்கும் ஆடியோ வெளியாகி பதட்டத்தை அதிகப்படுத்தியது,

ஜோதிமணி இயல்பிலேயே போராட்ட குணம் கொண்டவராக இருந்தாலும், அப்போதைய மாநில அரசு, அதிமுக- மத்திய அரசு பாஜக கூட்டணியை எதிர்த்து கரூரில் களம் காண்பதற்கு அப்போதைய திமுகவின் கரூர் மாவட்ட செயலாளரான செந்தில் பாலாஜியின் உழைப்பும், பணம் உள்ளிட்ட பணிகளும் மிகப்பெரியது.

தொகுதி முழுவதும் ஜோதிமணியை அழைத்துச் சென்று முதல் கட்ட தேர்தல் பணியில் இருந்து வெற்றிச் சான்றிதழ் பெறும் வரை உடன் இருந்தார் செந்தில்பாலாஜி. தொகுதி முழுவதும் செந்தில்பாலாஜியின் வியூகப்படி தேர்தல் பணிகள் ஜரூராக நடந்தன.

வாக்கு எண்ணிகையில் கரூர் தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளர் ஜோதிமணி 6 லட்சத்து 95 ஆயிரத்து 697 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். அவரை எதிர்த்து போட்டியிட்ட ஆளுங்கட்சிகளின் கூட்டணி வேட்பாளரான தம்பிதுரை வெறும் 2 லட்சத்து 75 ஆயிரத்து 151 வாக்குகள் மட்டுமே பெற்றார். ஜோதிமணியின் இந்த இமாலய வெற்றிக்கு செந்தில்பாலாஜியின் பங்கு மிகப்பெரியது என்பதை ஜோதிமணியே அப்போது கூறினார்.

அப்படிப்பட்ட செந்தில் பாலாஜி இப்போது அமலாக்கத்துறை வழக்கில் சென்னை புழல் சிறையில் இருக்கும் நிலையில், மீண்டும் கரூர் தொகுதியை காங்கிரசுக்கு ஒதுக்கக் கூடாது என்றும் குறிப்பாக ஜோதி மணிக்கு ஒதுக்கவே கூடாது என்றும் திமுக தலைமையிடம் அழுத்தம் திருத்தமாக கோரிக்கை வைத்திருந்தார்.

செந்தில் பாலாஜியை, ‘செந்தீ…’ என்றுதான் அழைப்பார் ஜோதிமணி. அதேபோல ஜோதிமணியை ஜோதி என்றுதான் அழைப்பார் செந்தில்பாலாஜி. இப்படி இருவரும் அண்ணன் தங்கையாக தேர்தல் களத்தில் உழைத்ததை கரூரே பார்த்தது.

இப்படி இருந்த செந்தில்பாலாஜி, ஏன் மீண்டும் ஜோதிமணிக்கு சீட் கொடுக்கக் கூடாது என்று எதிர்ப்பு தெரிவித்தார்?

“இருவருக்கும் பர்சனல் பிரச்சினைகள் எதுவுமே இல்லை. 2019 இல் ஜோதிமணி எம்பியாக ஜெயித்துவிட்டார். அதன் பின் 2021 சட்டமன்றத் தேர்தலில் வெற்றி பெற்று திமுக ஆட்சி அமைத்ததும் செந்தில்பாலாஜி அமைச்சராகிவிட்டார். இயல்பாகவே அரசு விழாக்களில் அமைச்சர் செந்தில்பாலாஜிக்கான மரியாதை அதிகரித்தது. அதனால் இரு வருடங்களாக தனக்கு இருந்த முக்கியத்துவம் குறைந்ததாக கருதினார் எம்பி ஜோதிமணி. அதுமட்டுமல்ல… அரசின் திட்டங்களை குறிப்பிட்டு இது காங்கிரஸ் கட்சி கொண்டு வந்த திட்டம்’ என அரசு விழாக்களிலேயே அழுத்தம் திருத்தமாக கூறினார் ஜோதிமணி. இதை திமுகவினர் ரசிக்கவில்லை.

உள்ளாட்சித் தேர்தலின் போது தனக்கு திமுகவினர் உரிய மரியாதை தரவில்லை என்று வெளிப்படையாக சீறினார் ஜோதிமணி. காங்கிரஸுக்கு வெற்றி வாய்ப்புள்ள இடங்களை மாசெ செந்தில்பாலாஜி பறித்துக் கொண்டார் என்பதும் ஜோதிமணியின் புகார்.

இப்படியாக அமைச்சர் செந்தில்பாலாஜி, எம்.பி.ஜோதிமணி என இரு அதிகார நிலைகளுக்கு இடையே இடைவெளி உண்டானது. பற்றாக்குறைக்கு காங்கிரசிலேயே சிலர் அமைச்சராக இருந்த செந்தில்பாலாஜிக்கு எல்லா வகையிலும் உதவி ஜோதிமணியை எதிர்க்கத் தொடங்கினார்கள். செந்தில்பாலாஜி அமலாக்கத்துறை வழக்கில் சிறை சென்ற நிலையில்… ஜோதிமணியோடு கரூர் திமுகவின் மற்ற நிர்வாகிகளும் கொஞ்சம் தள்ளியே இருந்தனர்.

இந்த பின்னணியில்தான் கரூர் தொகுதியை மீண்டும் காங்கிரஸுக்கு ஒதுக்கக் கூடாது என்று சிறையில் இருந்தபடியே தலைமைக்கு கடிதம் மூலமும், தன்னைச் சந்தித்த சிலர் மூலமாகவும் தெரிவித்தார் செந்தில்பாலாஜி.

தொகுதிப் பங்கீட்டின் போதும், வேட்பாளர் தேர்வின் போதும் மாவட்டச் செயலாளரின் பரிந்துரை திமுகவில் முக்கியத்துவம் வாய்ந்தது. இந்த வகையில் கரூர் மாசெவான செந்தில்பாலாஜி கரூரில் திமுகவே போட்டியிட வேண்டும் என்று கருத்து தெரிவித்தார். மாவட்ட செயலாளரின் கருத்துக்கும் மதிப்பளித்து கரூர் தொகுதியை காங்கிரசுக்கு தர முடியாது என காங்கிரஸிடம் தெரிவித்தது திமுக தலைமை.

கரூர் தொகுதியில் மீண்டும் காங்கிரசுக்கு கொடுத்தால் ஜோதிமணிக்கு தான் சீட்டு வழங்குவார்கள். அப்படி வழங்கினால் கரூர் மாவட்ட திமுகவினர் 2019 தேர்தல் களத்தில் ஒத்துழைத்தது போல முழுமையான ஒத்துழைப்பு அளிப்பார்களா என்பது சந்தேகம்தான். எனவே, கரூரை திமுகவிடம் கொடுத்துவிட்டு ஈரோடு அல்லது பொள்ளாச்சியை எடுத்துக் கொள்ளுங்கள் என்று காங்கிரஸ் தரப்பிடம் திமுக தரப்பில் இருந்து சொல்லப்பட்டது.

இந்த தகவல் காங்கிரஸ் கட்சிக்குள் முக்கியமாக பேசப்பட்டது. டெல்லி புள்ளிகள் மற்றும் தமிழ்நாடு காங்கிரஸ் கட்சி தலைவர் செல்வப் பெருந்தகை இப்போதைய எம்பிக்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்ட ஜூம் மீட்டிங்கில் கரூரை மீண்டும் காங்கிரசுக்கு தர முடியாது என திமுக கூறுகிறது என்பது பற்றி விவாதிக்கப்பட்டது.

அப்போது ஜோதிமணி, ‘நான் கரூர் மாவட்டத்தைச் சேர்ந்தவர். உள்ளாட்சி அமைப்பின் பிரதிநிதியானதில் இருந்து எம்பி வரை கரூரில்தான் செயல்பட்டு வருகிறேன் கரூர் மக்களுக்காக தான் அரசியல் செய்து வருகிறேன். சீட்டுக்காக எங்கோ இருக்கும் இன்னொரு தொகுதிக்கு செல்லும் சராசரி அரசியல்வாதி நான் அல்ல. எனவே என்னுடைய எம்பி செயல்பாடுகளின் அடிப்படையில் எனக்கு மீண்டும் கரூரை கொடுக்க வேண்டும்’ என்று வாதாடி இருக்கிறார்.

மேலும், இதுபற்றி தன் மேல் மதிப்பு வைத்துள்ள ராகுல் காந்திக்கும் தெரியப்படுத்தியிருக்கிறார் ஜோதிமணி. ’எனக்கு எதிராக தமிழ்நாட்டில் சதிவலை பின்னப்படுகிறது. காங்கிரஸ் சுமார் 4 லட்சம் ஓட்டு வித்தியாசத்தில் ஜெயித்த கரூர் தொகுதியை நம்மிடமிருந்து தட்டிப் பறிக்க காங்கிரஸுக்குள்ளேயே சிலர் துணை போகிறார்கள். எனவே, நான் மீண்டும் கரூரில் போட்டியிட நீங்கள்தான் உதவ வேண்டும்’ என்று ராகுல் காந்திக்கு தெரிவித்திருக்கிறார் ஜோதிமணி.

நேற்று மார்ச் 17ஆம் தேதி ராகுல் காந்தியின் நியாய யாத்ரா நிறைவு விழாவிற்காக மும்பை சென்றார் தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின். அங்கே ஸ்டாலினை கட்டித் தழுவி திமுக காங்கிரஸின் கூட்டணி நெருக்கத்தை வெளிப்படுத்தினார் ராகுல் காந்தி.

மேலும் காங்கிரசிடம் இருந்து திமுக கேட்ட கரூர், கிருஷ்ணகிரி, திருவள்ளூர் ஆகிய தொகுதிகளை மீண்டும் காங்கிரசுக்கு அளிக்குமாறு மும்பையில் ஸ்டாலினிடம் ராகுல் காந்தி வலியுறுத்தியதாக தெரிகிறது.

இந்த நிலையில் தான் இன்று மார்ச் 18 ஆம் தேதி காங்கிரஸ் கட்சி போட்டியிடும் அதிகாரப்பூர்வ தொகுதிகள் பற்றிய அறிவிப்பு வெளியானது அதில் கரூரில் மீண்டும் போட்டியிடுகிறார் ஜோதிமணி.
செந்தில்பாலாஜியின் எதிர்ப்பை மீறித்தான் ராகுல் காந்தியின் பரிந்துரையின் பேரில் இந்த தொகுதியை கரூருக்கும் ஜோதிமணிக்கும் கொடுத்திருக்கிறார் ஸ்டாலின். எனவே, ஜோதிமணிக்கு இனிமேல்தான் முக்கியமான சவால் காத்திருக்கிறது!

செந்தில்பாலாஜி என்ன செய்யப் போகிறார் என்பதும் எதிர்பார்ப்புக்கு உரிய கேள்வியாக  இருக்கிறது!

வேந்தன்

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

இந்திய கம்யூனிஸ்ட் நாகை, திருப்பூர் வேட்பாளர்கள் அறிவிப்பு!

அன்புமணிக்கு திடீர் ஆஃபர்: பாஜகவின் இறுதி முயற்சி!

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share