மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜியை காவலில் எடுத்து விசாரிப்பதற்காக அமலாக்கத்துறை தரப்பில் சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் இன்று (ஜூன் 14) மனுத்தாக்கல் செய்யப்பட்டது.
அமலாக்கத்துறை துணை இயக்குநர் கார்த்திக் தேசாரி தாக்கல் செய்துள்ள அந்த மனுவில்,
“கடந்த 2011 -15 காலகட்டத்தில் செந்தில் பாலாஜி போக்குவரத்து துறை அமைச்சராக இருந்தார். அப்போது 2014 – 15-ஆம் ஆண்டில் செந்தில் பாலாஜி தனது அதிகாரத்தை தவறாக பயன்படுத்தி போக்குவரத்து துறையில் ஓட்டுநர், நடத்துநர், ஜூனியர் ட்ரேட்ஸ் மேன், ஜூனியர் அசிஸ்டண்ட் உள்ளிட்ட பணியிடங்களுக்கு வேலை வாங்கி தருவதாக பணம் பெற்றுள்ளார்.
அப்படி பணம் கொடுத்தவர்களுக்கு வேலை வாங்கி கொடுக்காததால் மூன்று பேர் தொடர்ந்த மனு சென்னையில் உள்ள எம்.பி., எம்.எல்.ஏக்கள் மீதான வழக்கை விசாரிக்கும் நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது.
இந்த வழக்கில் நடைபெற்ற சட்டவிரோத பணப்பரிவர்த்தனை தொடர்பாக கடந்த 2021-ஆம் ஆண்டு அமலாக்கத்துறை வழக்குப்பதிவு செய்து விசாரணையை துவங்கியது.
இந்த வழக்கு தொடர்பாக செந்தில் பாலாஜி, அவரது சகோதரர் அசோக் குமார், செந்தில் பாலாஜி உதவியாளர் சண்முகம் ஆகியோருக்கு கடந்த 2022-ஆம் ஆண்டு அமலாக்கத்துறை பலமுறை சம்மன் அனுப்பியும் அவர்கள் விசாரணைக்கு ஆஜராகவில்லை.
இதனை தொடர்ந்து ஜூன் 13-ஆம் தேதி செந்தில் பாலாஜி தொடர்புடைய இல்லங்களில் சோதனை நடைபெற்றது.
செந்தில் பாலாஜியின் வங்கி பணப்பரிவர்த்தனைகள், விசாரணையின் போது சேகரிக்கப்பட்ட பொருட்கள் மற்றும் பாதிக்கப்பட்டவர்கள் அளித்த வாக்குமூலங்களின் அடிப்படையில் செந்தில் பாலாஜி முறைகேடாக வங்கி பணப்பரிவர்த்தனையில் ஈடுபட்டது தெரியவந்துள்ளது. தன்னிடம் இருக்கும் பணம் எங்கிருந்து பெறப்பட்டது என்பதற்கு போதுமான ஆதாரங்கள் அவரிடம் இல்லை.
செந்தில் பாலாஜி வங்கி கணக்கில் ரூ.1.34 கோடியும் அவரது மனைவி வங்கி கணக்கில் ரூ.29.55 லட்சம் ரூபாயும் வருமான வரித்தாக்கலில் இடம் பெறாத பணம் இருந்தது.
ஜூன் 14-ஆம் தேதி செந்தில் பாலாஜிக்கு சம்மன் வழங்கப்பட்டது. ஆனால் அவர் அதனை வாங்க மறுத்தார். மிரட்டும் விதத்தில் நடந்துகொண்ட அவர், ‘நான் மாநிலத்தின் சிட்டிங் மந்திரி’ என அதிகாரிகளிடம் கத்தினார். இரண்டு சாட்சிகள் முன்னிலையில் செந்தில் பாலாஜியிடம் வாக்குமூலம் பெற முயன்றபோது அவர் எந்த கேள்விகளுக்கும் பதிலளிக்கவில்லை. எனவே சம்மன் நடவடிக்கையில் அவர் முற்றிலும் ஒத்துழைப்பு வழங்கவில்லை.
பணமோசடி வழக்கில் குற்றம் சாட்டப்பட்டவர் சாட்சியங்களை அழிக்க கூடும். இதனால் பணமோசடி தடுப்பு சட்டம் 2002 பிரிவு 19 ( 1 ) விதி 6-ன் கீழ் செந்தில் பாலாஜி ஜூன் 14-ஆம் தேதி அதிகாலை 1.39 மணிக்கு கைது செய்யப்பட்டார். அவர் கைது செய்யப்பட்டதற்கான காரணங்கள் குறித்து அவருக்கு தெரிவிக்கப்பட்டது. இருப்பினும் அவர் ஒப்புக்கொள்ள மறுத்து கையெழுத்திட மறுத்துவிட்டார். எனவே இரண்டு சுயேச்சை சாட்சிகள் முன்னிலையில் கைது உத்தரவு மற்றும் மெமோ நிறைவேற்றப்பட்டது. செந்தில் பாலாஜியை கைது செய்தபோது உச்சநீதிமன்ற வழிகாட்டுதல் நடைமுறைகள் பின்பற்றப்பட்டது.
குற்றம்சாட்டப்பட்ட செந்தில் பாலாஜி பண மோசடி வழக்கில் முக்கியமாக நபராவார். அமலாக்கத்துறை சோதனைக்கு அவர் ஒத்துழைப்பு வழங்கவில்லை.
அவரை கைது செய்யவில்லை என்றால் தற்போது விசாரணைக்கு தேவையான ஆதாரங்களை அவர் அழிக்க வாய்ப்புள்ளது. விசாரணைக்கு அவர் ஒத்துழைக்காததால் அமலாக்கத்துறை செந்தில் பாலாஜியை காவலில் எடுத்து விசாரிக்க வேண்டும். இந்த வழக்கில் தொடர்புடைய மற்ற நபர்களை கண்டறிவதற்கு விரிவான விசாரணை தேவைப்படுகிறது. செந்தில் பாலாஜி செல்வாக்கு மிக்க நபர் என்பதால் காவல் விசாரணைக்கு அவர் அனுப்பப்படாவிட்டால் விசாரணைக்கு இடையூறாக இருக்கும். அவரிடம் விசாரணை நடத்த வேண்டியது மிகவும் அவசியமான தேவையாக உள்ளது.
அமலாக்கத்துறை விசாரணையில் செந்தில் பாலாஜி மனிதாபிமானத்துடன் நடத்தப்படுவார். அவருக்கு தேவையான உணவுகள் மற்றும் மருத்துவ வசதிகள் அளிக்கப்படும். எனவே செந்தில் பாலாஜியை 15 நாட்கள் காவலில் எடுத்து விசாரிக்க அனுமதிக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்” என அமலாக்கத்துறையின் மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த மனு தொடர்பாக நாளை (ஜூன் 15) சென்னை முதன்மை அமர்வு நீதிபதி அல்லி உத்தரவளிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
செல்வம்
டிஜிட்டல் திண்ணை: செந்தில்பாலாஜியின் துறைகள் யாருக்கு? கேபினட் ரேஸ் ஸ்டார்ட்!
செந்தில் பாலாஜி கைது: சிபிஐக்கு ஸ்டாலின் வைத்த செக்!

