கோடைக்காலத்தில் ’கரண்ட் கட்’ ஆகாது : செந்தில்பாலாஜி உறுதி!

Published On:

| By christopher

senthil balaji on summer power cut

கோடைக் காலத்தில் ஏப்ரல், மே மாதத்திற்கு 6,000 மெகா வாட் அளவுக்கு கூடுதலாக தேவைப்படும் என கணக்கிட்டு அதற்கான டெண்டர் கோரப்பட்டுள்ளதாக அமைச்சர் செந்தில்பாலாஜி தெரிவித்தார். senthil balaji on summer power cut

கடந்த பிப்ரவரியில் இருந்து ஒவ்வொரு நாளும் தமிழகத்தில் வெயில் அதிகரித்துக் கொண்டே வருகிறது. இதனால் ஏசி, ஏர் கூலர், மின் விசிறி, குளிர்சாதனப் பெட்டி ஆகியவற்றின் பயன்பாடும் அதிகரித்துள்ளது. இதனால் வெயில் வாட்டி வதைக்கும் கோடைக்காலத்தில் குறிப்பாக ஏப்ரல், மே மாதங்களில் மாநிலத்தில் மின் நுகர்வு அதிகமாக இருக்கும்.

இந்த நிலையில் கோடைகாலத்தில் மாநிலம் முழுவதும் சீரான மின் விநியோகத்தை அளிப்பது தொடர்பாக, அனைத்து மண்டல தலைமைப் பொறியாளர்கள், மேற்பார்வைப் பொறியாளர்களுடன் சென்னை மின்சார வாரிய தலைமை அலுவலகத்தில் இன்று (மார்ச் 26) மாலை ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.

6,000 மெகா வாட் டெண்டர்! senthil balaji on summer power cut

அதன்பின்னர் செய்தியாளர்களிடம் மின்சாரத் துறை அமைச்சர் செந்தில் பாலாஜி பேசுகையில், “கோடைக் காலத்தை பொறுத்த வரை எந்த வித தடையும் இல்லாமல் சீரான மின் விநியோகம் நடைபெற வேண்டும் என மின் வாரிய அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

தமிழகத்தில் ஒரு வருடத்திற்கான மின் பயன்பாடு 1 லட்சத்து 13 ஆயிரம் மில்லியன் யூனிட் என்ற அளவில் உள்ளது. கோடைக் காலத்தில் அதிகபட்சமாக 22,000 மெகாவாட் மின்சாரம் தேவைப்படலாம். ஏப்ரல், மே மாதத்திற்கு 6,000 மெகா வாட் அளவுக்கு கூடுதலாக தேவைப்படும் என கணக்கிட்டு அதற்கான ஒப்பந்தம் கோரப்பட்டுள்ளது. ஒரு யூனிட் 8 அல்லது 9 ரூபாய்க்குள் வாங்க பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. சில நேரங்களில் யூனிட் 12 முதல் 15 ரூபாய்க்கு வாங்கப்படுவதாக உண்மைக்கு மாறாக தகவல்கள் வரும். ஆகவே, இந்த விளக்கத்தை தெரிவிக்கிறேன்.

காலி பணியிடங்கள் விரைவில் நிரப்பப்படும்!

தமிழகத்தில் கடந்த 4 ஆண்டுகளில் 78 ஆயிரம் புதிய மின் மாற்றிகள் அமைக்கப்பட்டு உள்ளன. 393 துணை மின் நிலையங்கள் அறிவிக்கப்பட்டு, அவற்றில் 250க்கு நிர்வாக அனுமதி வழங்கப்பட்டு திட்ட மதிப்பீடுகள் தயார் செய்யப்பட்டு தற்போது பணிகள் நடைபெற்று வருகின்றன. மீதமுள்ள இடங்களில் நிலங்கள் கேட்கப்பட்டுள்ளது, அதற்கான பணிகளும் விரைவுபடுத்தப்படும்.

வரக்கூடிய ஆண்டுகளில் தேவைப்படும் மின் உற்பத்தியை தமிழகமே சொந்தமாக உற்பத்தி செய்யக்கூடிய அளவில் புதிய திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டுள்ளன. 2030க்குள் மின் உற்பத்தியை அதிகரிக்கும் வகையில் திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வருகிறது. மின்சாரத் துறையில் காலியாக உள்ள அவசியமான பணியிடங்கள் விரைவில் நிரப்பப்படும்.

முதல்வர் தலைமையில் அரசு நிர்வாகம் மிகவும் வெளிப்படைத் தன்மையோடு சிறப்பாக நடைபெற்று வருகிறது. கோடைக் காலத்தை சமாளிப்பதற்கு மின்சார வாரியம் தயாராக உள்ளது” என்றும் செந்தில் பாலாஜி தெரிவித்துள்ளார்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share