செந்தில் பாலாஜி நீக்கம் ஏன்? – முதல்வருக்கு ஆளுநர் கடிதம்!

Published On:

| By Selvam

அமைச்சரவையிலிருந்து செந்தில் பாலாஜியை நீக்கியதற்கான காரணம் குறித்து 5 பக்கங்கள் கொண்ட கடிதத்தை முதல்வர் ஸ்டாலினுக்கு ஆளுநர் ஆர்.என்.ரவி அனுப்பியுள்ளார்.

ஆளுநர் ரவி எழுதிய கடிதத்தில், “செந்தில் பாலாஜி மீதான பண மோசடி வழக்கில் 2 மாதத்திற்குள் வழக்கை விசாரித்து முடிக்க வேண்டும் என்று உச்சநீதிமன்றம் கெடு விதித்துள்ளது.

ADVERTISEMENT

அமைச்சர் பதவியில் இருப்பதால் அவர் மீது அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க தயக்கம் காட்டுகிறார்கள். அமைச்சர் பதவி என்பது செந்தில் பாலாஜிக்கு பாதுகாப்பு கவசமாக உள்ளது.

கடந்த அதிமுக ஆட்சி காலத்தில் செந்தில் பாலாஜி அமைச்சராக இருந்தபோது போக்குவரத்து துறையில் பணம் பெற்றுக்கொண்டு வேலை வாங்கி தந்ததாக புகார் வந்தது.

ADVERTISEMENT

அப்போது அவர் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. அதிமுகவில் இருந்து அமமுக கட்சிக்கு சென்றவுடன் அவர் மீதான விசாரணை நடைபெறுகிறது.

திமுகவில் சேர்ந்து அமைச்சரான பிறகு விசாரணை சரியாக நடைபெறவில்லை என்று உச்சநீதிமன்றமே தெரிவித்துள்ளது.

ADVERTISEMENT

உச்சநீதிமன்ற விமர்சனங்களை கருத்தில் கொண்டு தான் செந்தில் பாலாஜியை அமைச்சரவையிருந்து நீக்குகிறேன்.

திமுக ஆட்சியில் செந்தில் பாலாஜி அமைச்சராகிவிட்டதால் புகார் கொடுத்த மனுதாரர்கள் சமரசம் செய்து கொண்டிருப்பார்களா என்ற சந்தேகம் எழுவதாக உச்சநீதிமன்றம் கேள்வி எழுப்புகிறது.

உச்சநீதிமன்ற உத்தரவின்படி மே 31-ஆம் தேதி செந்தில் பாலாஜியை அமைச்சரவையிலிருந்து நீக்க முதல்வருக்கு பரிந்துரை கடிதம் எழுதினேன். அதனை முதல்வர் ஏற்கவில்லை.

செந்தில் பாலாஜி இலாகா மாற்றப்பட்டபோது அவர் அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டார் என்ற தகவலை என்னிடம் தெரிவிக்கவில்லை. இதனால் செந்தில் பாலாஜி இலாகா இல்லாத அமைச்சராக தொடர்வது தவறானது என்று கடிதம் எழுதினேன்.

இரண்டு முறை வலியுறுத்தியும் செந்தில் பாலாஜியை அமைச்சரவையிலிருந்து நீக்க முதல்வர் மறுத்துவிட்டார். அமைச்சரவையில் செந்தில் பாலாஜி இருந்தால் கூடுதலாக அவருக்கு தைரியம் வரும்.

உதாரணத்திற்கு செந்தில் பாலாஜிக்கு தொடர்புடைய இடங்களில் வருமான வரித்துறை சோதனை நடைபெற்ற போது அதிகாரிகள் தாக்கப்பட்டனர். இதுபோன்ற சம்பவங்களால் நியாயமான விசாரணை நடைபெறாது.

செந்தில் பாலாஜி மீது நியாயமான விசாரணை நடத்தவில்லை என்றால் அரசியலமைப்பின் செயல்பாடு கேள்விக்குள்ளாகும். ஆகையால் அவர் அமைச்சரவையில் நீடிக்கக்கூடாது.

சாதாரண காலங்களில் அமைச்சரவை அறிவுறுத்தலின்படி தான் நான் செயல்படுவேன். ஆனால் இந்த விவகாரத்தில் நான் பல முறை செந்தில் பாலாஜியை நீக்க முதல்வரை அறிவுறுத்தியும் நடவடிக்கை எடுக்காததால் அவர் பாரபட்சமாக செயல்படுகிறார் என்பதையே காட்டுகிறது.

ஆகவே அரசியலமைப்பு சட்டம் 154, 163,164 ஆகிய சட்டப்பிரிவுகளின் அடிப்படையில் செந்தில் பாலாஜியை நீக்குகிறேன்” என்று தெரிவித்துள்ளார்.

செந்தில் பாலாஜியை நீக்கி ஆளுநர் ஆர்.என்.ரவி உத்தரவு பிறப்பித்த சில மணி நேரங்களில் மத்திய உள்துறை அமைச்சகத்தின் உத்தரவின் படி அமைச்சர் பதவி நீக்கம் நிறுத்தி வைத்துள்ளதாகவும் மத்திய அரசின் தலைமை வழக்கறிஞரிடம் ஆளுநர் கருத்து கேட்க முடிவு செய்திருப்பதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

செல்வம்

சென்னை காவல் ஆணையராக சந்தீப் ராய் ரத்தோர் இன்று பதவியேற்பு!

அமைச்சரவையிலிருந்து செந்தில் பாலாஜி நீக்க உத்தரவை கவர்னர் நிறுத்தி வைத்த பின்னணி!

அலர்ஜிக்கு நாய்க்கடி ஊசி…செவிலியர் சஸ்பெண்ட்: நடந்தது என்ன?

governor ravi writes letter to cm
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share