தமிழக அரசின் நலத்திட்டங்கள் முறையாக செயல்படுத்தப்படுகிறதா என்பதைக் கண்காணிக்க முதல்வர் ஸ்டாலின் இன்று (நவம்பர் 5) முதல் தமிழகம் முழுவதும் மாவட்டம் வாரியாக ஆய்வு பணிகளில் ஈடுபட்டுள்ளார்.
அந்தவகையில், முதலாவதாக தனது கள ஆய்வு பணியை கோவை மாவட்டத்தில் இருந்து இன்று தொடங்கியுள்ளார். சென்னையில் இருந்து விமானம் மூலம் புறப்பட்டு இன்று காலை 10 மணியளவில் கோவை விமான நிலையம் வந்தடைந்தார் முதல்வர் ஸ்டாலின்.
விமான நிலையத்தில் கோவை மாவட்ட பொறுப்பு அமைச்சரும், மின்சாரத்துறை அமைச்சருமான செந்தில் பாலாஜி தலைமையில் முதல்வருக்கு தடபுடலாக வரவேற்பு அளிக்கப்பட்டது.
ஏர்போர்ட்டில் இருந்து வேன் மூலமாக விளாங்குறிச்சியில் கட்டப்பட்டுள்ள தகவல் தொழில்நுட்ப பூங்கா கட்டிடத்தை திறந்து வைப்பதற்காக ஸ்டாலின் புறப்பட்டார்.
சாலையில் இருபுறங்களில் முதல்வரை காண்பதற்காக மக்கள் கூட்டம் கூட்டமாக திரண்டிருந்தனர். அதிகளவில் மக்கள் கூட்டம் இருந்ததால், பேரிகார்டுகள் அமைக்கப்பட்டிருந்தது. வேனில் மெதுவாக மக்களை நோக்கி கையசைத்தபடி சென்றார் ஸ்டாலின்.
பேரிகார்டு அருகே வேன் சென்றபோது, தொண்டர்கள் சிலர் ஸ்டாலினுக்கு கைகொடுத்தனர். மேலும், பறை இசை, பரதநாட்டியம், ஒயிலாட்டம் போன்ற கலைஞர்களும் உற்சாகமாக நடனமாடி ஸ்டாலினுக்கு வரவேற்பு அளித்தனர்.
ஏர்போர்ட் டூ எல்காட் பூங்கா வரையிலான நான்கு கிலோ மீட்டர் தூரத்தை கடப்பதற்கு அதிகபட்சம் 10 நிமிடங்கள் ஆகும். ஆனால், தொண்டர்களின் கட்டுக்கடங்காத அன்பால் அந்த தொலைவை கடப்பதற்கு ஒரு மணி நேரத்திற்கும் மேலானது. கோவை மக்கள் காட்டிய அன்பால் ஸ்டாலின் திக்குமுக்காடிப்போனார்.
தொடர்ந்து புதிய தகவல் தொழில் நுட்ப பூங்கா கட்டிடத்தை திறந்து வைத்த ஸ்டாலின், இன்று மாலை கோவை மாவட்ட நிர்வாகிகளுடன் ஆலோசனை மேற்கொள்கிறார்.
கோவை அரசு விருந்தினர் மாளிகையில் இன்று இரவு தங்கும் ஸ்டாலின், நாளை (நவம்பர் 6) காலை கோவை சிறைச்சாலை வளாகத்தில் நடைபெற்று வரும் செம்மொழி பூங்கா கட்டுமானப் பணிகளை ஆய்வு செய்ய உள்ளார்.
கோவை மாவட்ட பொறுப்பு அமைச்சராக இருந்த செந்தில் பாலாஜி கடந்த 2023-ஆம் ஆண்டு அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். இதனையடுத்து கோவை மாவட்ட பொறுப்பு அமைச்சராக வீட்டுவசதித்துறை அமைச்சர் முத்துசாமி நியமிக்கப்பட்டார்.
இந்தநிலையில், கடந்த செப்டம்பர் மாதம் செந்தில் பாலாஜிக்கு உச்சநீதிமன்றம் பிணை வழங்கியது. இதனையடுத்து சிறையில் இருந்து வெளியே வந்த செந்தில் பாலாஜி மீண்டும் அமைச்சராக்கப்பட்டார்.
மேலும், கோவை மாவட்ட பொறுப்பு அமைச்சராகவும் நியமிக்கப்பட்டார். இதனை தொடர்ந்து கோவை மாவட்ட பணிகளில் பிஸியாக இருந்து வந்த செந்தில் பாலாஜி, முதல்வர் ஸ்டாலின் வருகையை ஒட்டி பிரம்மாண்டமான வரவேற்பு கொடுக்க திட்டமிட்டிருந்தார்.
அதன்படி, கோவை மாவட்ட திமுகவினர் முதல்வருக்கு கொடுத்த வரவேற்பால் ஸ்டாலின் மிகுந்த மகிழ்ச்சியில் திளைத்தார்.
செல்வம்
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
தவறான தகவல்கள்… விக்கிபீடியாவுக்கு மத்திய அரசு நோட்டீஸ்!
கஸ்தூரி பேசுவதை அரசு வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்காது… ஆ.ராசா பதிலடி!