2011-15-ஆம் ஆண்டு காலகட்டத்தில் போக்குவரத்துறை அமைச்சராக இருந்த செந்தில் பாலாஜி, போக்குவரத்து துறையில் ஆள் சேர்க்கை மற்றும் முறைகேடான பணிமாற்றம் தொடர்பான வழக்கில் அமலாக்கத்துறையால் கடந்த ஆண்டு ஜூன் 14-ஆம் தேதி கைது செய்யப்பட்டு 200 நாட்கள் கடந்துவிட்டன.
இந்த வழக்கில் ஜாமீன் கோரி செந்தில் பாலாஜி தாக்கல் செய்த மனுவை சென்னை உயர்நீதிமன்றம் மற்றும் முதன்மை அமர்வு நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. இதனையடுத்து செந்தில் பாலாஜி சென்னை உயர்நீதிமன்றத்தில் மீண்டும் ஜாமீன் கோரி மனுத்தாக்கல் செய்துள்ளார்.
இந்தநிலையில், கரூரில் உள்ள ராமேஸ்வரப்பட்டியில் அமைச்சர் செந்தில் பாலாஜி வீட்டில் 5-க்கும் மேற்பட்ட அமலாக்கத்துறை அதிகாரிகள் மீண்டும் இன்று (பிப்ரவரி 8) காலை சிஆர்பிஎஃப் அதிகாரிகள் பாதுகாப்புடன் சோதனை நடத்தி வருகின்றனர்.
செந்தில் பாலாஜி மீதான கிரிமினல் வழக்கு சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வருவதால் விசாரணையை தள்ளிவைக்கக் கோரியும், குற்றப்பத்திரிகை நகல் கேட்டும் செந்தில் பாலாஜி தரப்பில் வழக்கறிஞரும், இந்திய பார் கவுன்சில் உறுப்பினருமான எஸ்.பிரபாகரன், சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் (CRL.MP 2136/2024) செய்திருந்தார்.
இந்த மனு மீதான விசாரணை நேற்று (பிப்ரவரி 7) சென்னை முதன்மை அமர்வு நீதிமன்ற நீதிபதி எஸ்.அல்லி முன்பாக விசாரணைக்கு வந்தது.
அப்போது செந்தில் பாலாஜி தரப்பு வழக்கறிஞர் எஸ்.பிரபாகரன் வாதத்தையும், அமலாக்கத்துறை தரப்பு வழக்கறிஞர் என்.ரமேஷ் வாதத்தையும் கேட்ட நீதிபதி, வழக்கின் தீர்ப்பை பிப்ரவரி 15-ஆம் தேதிக்கு தள்ளிவைத்துள்ளார்.
அமலாக்கத்துறை விசாரணையை தள்ளிவைக்கோரி செந்தில் பாலாஜி தாக்கல் செய்துள்ள வழக்கில் பிப்ரவரி 15-ஆம் தேதி தீர்ப்பு வெளியாக உள்ள நிலையில், செந்தில் பாலாஜிக்கு ஆதரவாக தீர்ப்பு வந்துவிடக்கூடாது என்பதற்காகவே அமலாக்கத்துறை இந்த திடீர் சோதனையில் ஈடுபட்டிருப்பதாக சொல்கிறார்கள் சட்டம் அறிந்தவர்கள்.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
கிளாம்பாக்கம் பஸ் நிலையத்தின் நோக்கமே அடிப்பட்டு விடும் : அன்சூல் மிஸ்ரா
பேட்டில் தோனி ஒட்டிய ‘ஸ்டிக்கர்’ செம வைரல்… சென்டிமெண்ட் காரணமா?