சென்னை விமான நிலையம் வந்தடைந்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் காலில் விழுந்து வணங்கி ஆசி பெற்றார் செந்தில்பாலாஜி.
அதிமுக ஆட்சியில் போக்குவரத்துத் துறை அமைச்சராக பதவி வகித்த போது அரசு வேலை வாங்கித் தருவதாக பணம் பெற்று ஏமாற்றியதாக செந்தில் பாலாஜி மீது புகார் எழுந்தது. அதன்பேரில் சட்டவிரோத பணப்பரிமாற்ற தடை சட்ட வழக்கில் செந்தில் பாலாஜியை கடந்தாண்டு அமலாக்கத்துறை கைது செய்தது.
இந்த நிலையில் நேற்று உச்சநீதிமன்றம் நிபந்தனை ஜாமீன் வழங்கிய நிலையில், 471 நாள்களுக்கு பிறகு நேற்று இரவு தான் புழல் சிறையிலிருந்து வெளியே வந்தார் செந்தில்பாலாஜி. அவருக்கு திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி உட்பட நூற்றுக்கும் மேற்பட்ட திமுகவினர் சிறை வாசலிலேயே உற்சாக வரவேற்பு அளித்தனர்.
அங்கிருந்து கலைஞர் நினைவிடத்துக்கு செந்தில் பாலாஜி சென்ற நிலையில் அங்கு அவரை வரவேற்ற அமைச்சர் பொன்முடி வாழ்த்து தெரிவித்தார்.
இன்று காலை அவர் தங்கியிருந்த தனியார் ஹோட்டலில் திமுக அமைச்சர்கள் கே.என்.நேரு, மா.சுப்பிரமணியன், நிர்வாகிகள், கூட்டணிக் கட்சியைச் சேர்ந்தவர்கள் என பல்வேறு தரப்பினரும் செந்தில் பாலாஜியை சந்தித்து வாழ்த்து தெரிவித்தனர். தொடர்ந்து உச்சநீதிமன்ற உத்தரவுபடி, அமலாக்கத்துறை அலுவலகத்துக்கு செந்தில் பாலாஜி சென்று கையெழுத்திட்டு வந்தார்.
தொடர்ந்து இன்று மாலை அமைச்சர் உதயநிதி ஸ்டாலினை அவரது அலுவலகத்திற்கு நேரில் சென்று செந்தில் பாலாஜி சந்தித்து பேசினார். பின்னர் அங்கிருந்து புறப்பட்டு பிரதமர் மோடியை சந்தித்துவிட்டு இரவு சென்னை திரும்பும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை வரவேற்க மீனம்பாக்கம் விமான நிலையத்திற்கு காரில் புறப்பட்டார்.
அதன்படி விமான நிலையத்தில் முதல்வர் ஸ்டாலின் வந்து இறங்கியதும் முதல் ஆளாக செந்தில் பாலாஜி அவரது காலில் விழுந்து ஆசிபெற்றார். பின்னர் இருவரும் புகைப்படம் எடுத்துக்கொண்டனர்.
தொடர்ந்து அமைச்சர்கள் பொன்முடி, மா.சுப்பிரமணியன் உள்ளிட்டோர் ஸ்டாலினை வரவேற்றனர்.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
கிறிஸ்டோபர் ஜெமா
டிஜிட்டல் திண்ணை: செந்தில்பாலாஜி மாரிஸ் ஹோட்டலில் தங்கும் மர்மம்!
கங்கணாவின் எமர்ஜென்சி… நீடிக்கும் சிக்கல் : சென்சார் போர்டு முடிவு என்ன?