செந்தில் பாலாஜிக்கு எதிரான ED வழக்கு: தீர்ப்பு எப்போது?

Published On:

| By Selvam

அமலாக்கத்துறை வழக்கில் இருந்து விடுவிக்கக்கோரி முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி தாக்கல் செய்த வழக்கில், ஏப்ரல் 30-ஆம் தேதி சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் தீர்ப்பளிக்கிறது.

சட்டவிரோத பணப்பரிமாற்ற தடைச் சட்டத்தின் கீழ் அமலாக்கத்துறை பதிவு செய்த வழக்கில் இருந்து தன்னை விடுவிக்கக்கோரி முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.

ADVERTISEMENT

இந்த வழக்கின் விசாரணை நீதிபதி அல்லி முன்பாக நடைபெற்றது. வழக்கின் வாதங்கள் நிறைவடைந்த நிலையில், தேதி குறிப்பிடாமல் தீர்ப்பு ஒத்திவைக்கப்பட்டது.

இந்தநிலையில், அமலாக்கத்துறை வழக்கில் இருந்து விடுவிக்கக்கோரிய மனு மீது தங்கள் தரப்பில் மீண்டும் வாதிட அனுமதிக்க வேண்டும் என செந்தில் பாலாஜி தரப்பில் ஒரு புதிய மனு தாக்கல் செய்யப்பட்டது.

ADVERTISEMENT

அதில், “இந்த வழக்கு விசாரணையின் போது சில ஆவணங்களை வழங்க வேண்டும் என்று நீதிமன்றம் வங்கிக்கு உத்தரவிட்டது. ஆனால், அந்த ஆவணங்கள் எங்களுக்கு கிடைக்கவில்லை. எனவே, ஆவணங்கள் எங்களுக்கு கிடைத்த பிறகு அதன் அடிப்படையில் மீண்டும் வாதிட அனுமதிக்க வேண்டும்” என்று கோரிக்கை வைக்கப்பட்டது.

இதனையடுத்து கடந்த ஏப்ரல் 22-ஆம் தேதி வங்கி தொடர்பான ஆவணங்கள் செந்தில் பாலாஜியை நீதிமன்றத்தில் நேரில் வரவைத்து அவரிடம் கொடுக்கப்பட்டது. அதன்பிறகு இந்த வழக்கின் விசாரணை இன்று மீண்டும் நடைபெற்றது.

ADVERTISEMENT

அப்போது செந்தில் பாலாஜி தரப்பில், “தங்களுக்கு வழங்கப்பட்ட ஆவணத்திற்கும் நீதிமன்றத்தில் அமலாக்கத்துறை தாக்கல் செய்த ஆவணத்திற்கும் பல்வேறு முரண்பாடுகள் உள்ளது.

காசோலை, செலான் உள்ளிட்ட வங்கி ஆவணங்களில் தேதி, மாதம் உள்ளிட்டவை திருத்தப்பட்டுள்ளது. ஆவணத்தின் உண்மை தன்மையை உறுதி செய்ய நிபுணர் குழுவின் ஆய்வுக்கோ அல்லது தடயவியல் துறை ஆய்வுக்கோ உட்படுத்த வேண்டும்” என்ற வாதம் முன்வைக்கப்பட்டது.

அமலாக்கத்துறை தரப்பில், “ஆவணங்களில் எந்த வேறுபாடுகளும் இல்லை. அதனை திருத்தவும் இல்லை. குறிப்பாக, அசல் ஆவணங்கள் மஞ்சள் நிறத்திலும், செந்தில் பாலாஜியிடம் வழங்கப்பட்ட ஆவணம் நகல் எடுக்கப்பட்டதால் கருப்பு, வெள்ளை நிறத்திலும் உள்ளது. இதை தவிர்த்து எந்த குற்றச்சாட்டுக்களையும் அமலாக்கத்துறை மீது சுமத்த முடியாது” என்று தெரிவிக்கப்பட்டது.

அனைத்து தரப்பு வாதங்களும் நிறைவடைந்த நிலையில், இந்த வழக்கில் ஏப்ரல் 30-ஆம் தேதி தீர்ப்பளிக்கப்படும் என்று நீதிபதி அல்லி உத்தரவிட்டார்.

இதேவேளையில், செந்தில் பாலாஜியின் நீதிமன்ற காவலை 35-வது முறையாக ஏப்ரல் 30-ஆம் தேதி வரை நீட்டித்து நீதிபதி அல்லி உத்தரவிட்டார்.

செல்வம்

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

மன்சூரை சேர்த்துக்கொள்ள தயங்கும் காங்கிரஸ் : ஏன்?

ரீ ரிலீஸ்… கில்லி வழியில் பில்லா

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share