யார் அரசியல் வியாபாரி? – எடப்பாடியை சாடிய செந்தில் பாலாஜி

Published On:

| By Selvam

அமைதிப் படை அமாவாசை படத்தில் வரும் கேரக்டர் தான் எடப்பாடி பழனிசாமி என்று மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி விமர்சித்திருந்தார்.

இதற்கு நேற்று (ஜனவரி 21) பதிலளித்த எடப்பாடி பழனிசாமி, “இது அவருக்குத் தான் பொருத்தமான பெயர். ஐந்து கட்சிகளுக்கு மாறியவர். இப்போது திமுகவில் இருக்கிறார். அடுத்து எந்த கட்சிக்கு போவார் என்று தெரியவில்லை.

ADVERTISEMENT

ஐந்தாண்டுகளில் இரட்டை இலை சின்னத்திலும், உதயசூரியன் சின்னத்திலும் போட்டியிட்டவர். கலைஞரைப் பற்றி செந்தில் பாலாஜியும், சேகர் பாபுவும் பேசியது அவைக்குறிப்பில் இருக்கிறது. அதை யாரும் மாற்ற முடியாது. இருவரும் அரசியல்வாதிகள் அல்ல, அரசியல் வியாபாரிகள்” என்று தெரிவித்தார்.

எடப்பாடி பழனிசாமியின் விமர்சனத்திற்கு தனது எக்ஸ் தளத்தில் பதிலளித்துள்ள செந்தில் பாலாஜி, “தரையே தேயும் அளவுக்கு ஊர்ந்து சென்று காலைப் பிடித்து முதல்வராகி, பதவி சுகம் கண்டவுடன் அந்த கால்களையே வாரிவிட்ட எடப்பாடி பழனிசாமி அரசியல் விசுவாசம் பற்றி வகுப்பெடுக்கிறார்.

ADVERTISEMENT

பழனிசாமி தனிப்பட்ட வகையில் எத்தனை பேருக்கு துரோகம் செய்தார் என்ற கணக்கை கூட விட்டுவிடலாம். தனது பதவி நிலைத்திருக்க வேண்டும் எனும் சுயநலத்திற்காக தமிழ்நாட்டையே பாஜகவிடம் அடமானம் வைத்தார் என்பதை தமிழ்நாட்டு மக்கள் அனைவரும் அறிவர்.

புளிமூட்டையில் ஆரம்பித்து அரசியல் வரை எல்லாவற்றையும் எந்தவொரு அறமும் இன்றி வெறும் வியாபாரமாகவே பார்க்கும் வியாபாரி பழனிசாமி எப்படியான அரசியல் வியாபாரி என்பது அவரைச் சுற்றியுள்ளவர்களுக்கு மிக நன்றாக தெரியும்.

ADVERTISEMENT

அடிமைக் கூட்டத்திற்கு லாவணி பாடாதவர்களுக்கு எல்லாம் ஏதாவதொரு முத்திரை குத்தி அவர்களைக் காலி செய்வதற்காக எந்தவொரு லாபியும் செய்யத் தயங்காத பதவி வியாபாரி பழனிசாமி மற்றவர்களைப் பார்த்து வியாபாரி என்று சொல்வதுதான் நகைமுரண்” என்று தெரிவித்தார்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share