திமுகவை விமர்சனம் செய்யாமல் அரசியலில் இருக்க முடியாது – செந்தில் பாலாஜி

Published On:

| By Pandeeswari Gurusamy

senthil balaji

தமிழ்நாட்டில் பழைய அரசியல் கட்சிகள் என்றாலும் , புதிய அரசியல் கட்சிகள் என்றாலும், திமுகவை விமர்சனம் செய்யாமல் அரசியலில் இருக்க முடியாது என்ற சூழல் இருக்கிறது என முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி தெரிவித்தார்.

கோவை பீளமேடு பகுதியில் உள்ள தனியார் ஹோட்டலில் ஒருங்கிணைந்த கோவை மாவட்ட திமுக நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் முன்னாள் அமைச்சரும், திமுக மேற்கு மண்டல பொறுப்பாளருமான செந்தில் பாலாஜி கலந்து கொண்டு கட்சியினருக்கு ஆலோசனை வழங்கினார்.

ADVERTISEMENT

இதைத்தொடர்ந்து அவர் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது கோவை மாவட்டத்தில் உள்ள 10 சட்டமன்ற தொகுதிகளில் இருந்து, திருப்பூர் மாவட்டம் பல்லடத்தில் 29 தேதி நடைபெறும் மகளிரணி மாநாட்டில் 50 ஆயிரம் பெண்கள் பங்கேற்கின்றனர் என தெரிவித்தார்.

SIR க்கு பின்பு வரைவு வாக்காளர் பட்டியல் வழங்கப்பட்டுள்ளது, இதை கட்சி நிர்வாகிகளிடம் வழங்கி இருக்கின்றோம் , இந்த பட்டியலைப் பார்த்து தகுதியான வாக்காளர்கள் யாராவது விடுபட்டு இருக்கின்றதா, தகுதியற்ற யாராவது சேர்க்கப்பட்டு இருக்கிறார்களா என்பதை பூத் வாரியாக பார்த்து ஆட்சேபனைகளை தெரிவிக்க வேண்டும் என அறிவுறுத்தி இருக்கிறோம் என்றார்.

ADVERTISEMENT

கோவை மாவட்டத்தில் 6 லட்சத்துக்கும் மேற்பட்ட வாக்காளர்கள் நீக்கப்பட்டு இருப்பது குறித்து கேள்விக்கு, நேற்று தான் பட்டியல் வெளியாகி இருக்கின்றது , இன்னும் முழுமையாக கூட பட்டியல் வரவில்லை என தெரிவித்த அவர் அதை முழுமையாக ஆராய்ந்து பார்த்த பின்னர் தான் எங்களுக்கு தெரியும் எனவும் , பட்டியலை முழுமையாக பார்த்த பின்பு தான் கருத்துக்களை சொல்ல முடியும் என தெரிவித்தார்.

திமுகவின் கள்ள ஓட்டுகள் தான் நீக்கப்பட்டு இருக்கிறது என பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்திருப்பது குறித்த கேள்விக்கு, “நேற்று வெளியிடப்பட்ட பட்டியலில் நீக்கப்பட்டவர்கள் எந்த ஆண்டு சேர்க்கப்பட்டவர்கள் என்பதை பார்க்க வேண்டும். பாஜகவுடன் கூட்டணியில் இருக்கின்ற அதிமுக ஆட்சியில் இருந்த பொழுது , இந்த கள்ள ஓட்டுக்கள் அவர்களின் கண்களுக்கு தெரியவில்லையா? அப்பொழுது நல்ல ஓட்டுக்களாக இருந்தது இப்பொழுது கள்ள ஓட்டுக்கள் ஆகிவிட்டதா? இதெல்லாம் நயினார் நாகேந்திரனுக்கு தெரிந்தும் தான் இப்படி சொல்லி உள்ளார்.

ADVERTISEMENT

விஜய் திமுகவை தீய சக்தி என விமர்சித்தது குறித்த கேள்விக்கு, பழைய அரசியல் கட்சிகள் என்றாலும் , புதிய அரசியல் கட்சிகள் என்றாலும், திமுகவை விமர்சனம் செய்யாமல் அரசியலில் இருக்க முடியாது என்ற சூழல் தமிழ்நாட்டில் உள்ளது. அப்போது தான் அவர்கள் களத்தில் இருக்க முடியும். எனவே திமுகவை

விமர்சித்தே ஆக வேண்டும் என்ற கட்டாயத்திற்கு தள்ளப்பட்டு இருக்கின்றனர். பா.ஜ.க, அதிமுக என எந்த கட்சியாக இருக்கட்டும் திமுகவை மட்டுமே சொல்கின்றன.மக்களிடத்தில்

வலுவான இயக்கமாக , நல் அரசு நடத்தும் இயக்கமாக திமுக இருக்கின்றது. அதனால் யாருடைய விமர்சனங்களையும் காது கொடுத்து கேட்க வேண்டிய அவசியம் இல்லை. அரசுக்கு நல்ல

ஆலோசனை சொல்லும் விமர்சனங்களாக இருந்தால் நிச்சயமாக அதை காது கொடுத்து கேட்டு ஏற்றுக்கொள்வோம். அரசியல் தொடர்பான விமர்சனங்களை , அவர்களுடைய கருத்துக்களாக எடுத்துக் கொள்ள வேண்டும் எனவும் தெரிவித்தார்.

அதிமுகவும் சரி, புதிதாக வந்த கட்சிகளும் சரி, எங்களுக்கும் திமுகவுக்கும் தான் போட்டி என சொல்கின்றனர். மக்களிடம் ஆதரவை பெற்ற இயக்கம் திமுக. 2026 சட்டமன்றத் தேர்தலில் திமுக கூட்டணி மகத்தான வெற்றியடையும். நாங்கள் யாரையும் போட்டியாளராக பார்க்கவில்லை. அதேசமயம் யாரையும் குறைத்தும் மதிப்பிடவில்லை” என்றார்.

கோவை தொகுதியில் போட்டியிடப் போவதாக பரவும் தகவல் கேள்விக்கு, “சமூக வலைதளங்களில் கோவையில் போட்டியிட போவதாக வந்துள்ளதை நானும் பார்த்தேன் என தெரிவித்த அவர், நானும் அதில் தான் தெரிந்து கொண்டேன். கரூர் மக்கள் என்னை 5 முறை ஜெயிக்க வைத்திருக்கின்றனர். சமூக வலைதளங்களில் வரும் கருத்துகளுக்கு மதிப்பளிக்க தேவையில்லை. கரூர் மக்கள் தொடர்ந்து ஆதரவளித்துக் கொண்டு இருப்பதால் அப்படிப்பட்ட சந்தேகம் தேவையில்லை.கோவையைப் பொறுத்தவரை எங்களது இலக்கு 10 தொகுதிகளிலும் வெற்றி பெற வேண்டும் என்பதுதான் எனவும் தெரிவித்தார்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share