டாஸ்மாக்கில் ரூ.1000 கோடி ஊழலா? – செந்தில் பாலாஜி பதில்!

Published On:

| By Selvam

டாஸ்மாக்கில் ரூ.1000 கோடி முறைகேடு என்ற அமலாக்கத் துறையின் குற்றச்சாட்டில் எந்தவிதமான முகாந்திரமும் இல்லை என்று மின்சாரம் மற்றும் மதுவிலக்கு ஆயத்தீர்வைத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி இன்று (மார்ச் 14) தெரிவித்துள்ளார். Senthil Balaji clarifies Tasmac 1000 crore

தமிழக சட்டமன்றத்தில் 2025-26ஆம் ஆண்டுக்கான பட்ஜெட் இன்று (மார்ச் 14) தாக்கல் செய்யப்பட்டது. அப்போது டாஸ்மாக் ஊழல் தொடர்பாக அமளியில் ஈடுபட்ட அதிமுக, பாஜக எம்.எல்.ஏ.க்கள் வெளிநடப்பு செய்தனர்.

இந்தநிலையில் பட்ஜெட் உரைக்கு பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த அமைச்சர் செந்தில் பாலாஜி, “மும்மொழிக் கொள்கை, தொகுதி மறுவரையறை விவகாரங்களில் மத்திய அரசின் முகமூடிகளை தோலுரித்துக் காட்டும் வகையில் முதல்வர் எடுத்திருக்கும் தீவிர நடவடிக்கையை பொறுத்துக் கொள்ள முடியாத மத்திய அரசு அமலாக்கத் துறையை ஏவி தமிழ்நாடு டாஸ்மாக் தலைமை அலுவலகத்தில் சோதனை நடத்தியிருக்கிறது.

அமலாக்கத்துறை வெளியிட்ட அறிக்கையில், பல்வேறு பிரிவுகளில் பதியப்பட்ட முதல் தகவல் அறிக்கையின் அடிப்படையில் சோதனை நடத்தப்பட்டது என்கிறார்கள். ஆனால், எந்த முதல் தகவல் அறிக்கை? எந்த ஆண்டில் பதிவு செய்யப்பட்டது? என்ற விவரங்கள் இல்லை. டாஸ்மாக் பணியிட மாற்றங்களில் எந்தவிதமான தவறுகளும் இல்லை. அதேபோல டிரான்ஸ்போர்ட் டெண்டர் மிகவும் வெளிப்படத்தன்மையுடன் நடைபெற்றது. அதிலும் எந்தவிதமான முறைகேடுகளும் நடைபெறவில்லை.

மதுபான உற்பத்தி ஆலைகளுக்கும் பாட்டில் கொள்முதலுக்கும் இடையில் நடைபெறக்கூடிய அவர்களுடைய வணிகம் சம்பந்தப்பட்ட எங்களுடைய நிறுவனத்திற்கு வெளியில் நடைபெறுகிறது. ஒரு நிறுவனம் பல்வேறு அரசு அலுவலகங்களில் டெண்டர் எடுக்கலாம். ஆனால், அந்த நிறுவனங்கள் வெளியில் அவர்களுக்குள் வரவு செலவு கணக்குகளை ஏதோ டாஸ்மாக் நிறுவனத்தின் மூலமாக வரப்பெற்ற பணத்தின் மூலமாக கூடுதலான கொள்முதல் ஆணைகளை பெற்றதை போல ஒரு தோற்றத்தை உருவாக்குகிறார்கள்.

இந்த நான்கு ஆண்டுகளில் டாஸ்மாக் நிறுவனத்தை பொறுத்தவரை பார் டெண்டர்கள் முழுவதுமாக ஆன்லைன் டெண்டராக மாற்றப்பட்டுள்ளது. எனவே, பொதுவாக அமலாக்கத்துறை சொல்லியிருக்கக்கூடிய ரூ.1000 கோடி முறைகேடு என்பது எந்தவித முகாந்திரமும் இல்லாமல் பொத்தம் பொதுவாக சொல்லியிருக்கிறார்கள்.

‘ஆயிரம் கோடி’ ஊழல் என்று முன்னர் ஒருவர் சொல்லுகிறார். அவர் யார் என்று உங்களுக்கு தெரியும். அதன்பிறகு அமலாக்கத்துறை ரூ.1000 கோடி முறைகேடு என்கிறது. அதில் ஆயிரம் அர்த்தங்கள் அடங்கியிருக்கிறது.

அமலாக்கத்துறையின் சோதனையை பொறுத்தவரையில் சட்டரீதியாக எதிர்கொள்வோம். வெளிப்படைத்தன்மையுடன் இந்த நிறுவனம் செயல்பட்டுக் கொண்டிருக்கிறது.

சட்டமன்றத்தில் இன்று பேசிய எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி ஒரு நேரத்தில் டாஸ்மாக்கில் 40 ஆயிரம் கோடி ஊழல் என்றார். இப்போது 1000 கோடி என்கிறார். சினிமா பஞ்ச் டயலாக் போல பேசி வருகிறார்.

டாஸ்மாக் கொள்முதலில் யாருக்கும் சலுகைகள் காட்டப்படுவதில்லை. டாஸ்மாக் நிறுவனத்தில் புதிய கொள்கை முடிவுகள் எதுவும் மேற்கொள்ளப்படவில்லை.

தமிழக முதல்வர் இன்று பட்ஜெட்டில் பல மக்கள் நலத்திட்டங்களை அறிவித்திருக்கும் நிலையில், அதை மக்களிடம் கொண்டு சேர்க்கக்கூடாது என்பதற்காக நேற்று அவசர அவசரமாக இந்த அறிக்கை வெளியிடப்பட்டிருக்கிறது” என்று தெரிவித்துள்ளார்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share