நீதிமன்ற நடவடிக்கைகளால் அமலாக்கத்துறை கடமையை நிறைவேற்ற முடியவில்லை என்று உச்சநீதிமன்றத்தில் சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா தெரிவித்துள்ளார்.
ஆட்கொணர்வு வழக்கில் சென்னை உயர்நீதிமன்ற தீர்ப்பை எதிர்த்து செந்தில் பாலாஜி மனைவி மேகலா உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தார். இந்த வழக்கில் அமலாக்கத்துறை தரப்பில் சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா இன்று (ஆகஸ்ட் 2) ஆஜராகி தங்களது தரப்பு வாதங்களை முன்வைத்து வருகிறார்.
சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா, ” ரிமாண்ட் உத்தரவு பிறப்பிக்கப்பட்ட பிறகு ஆட்கொணர்வு மனு ஏற்கத்தக்கதல்ல. கஸ்டடியில் எடுத்து விசாரிப்பது என்பது தடுப்பு காவல் இல்லை. மருத்துவர் ஒப்புதல் அளித்தால் செந்தில் பாலாஜியிடம் விசாரணை நடத்த எங்களுக்கு அனுமதி உண்டு. செந்தில் பாலாஜியை மருத்துவமனையில் இருந்து அழைத்து செல்லாமல் விசாரணை நடத்த வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றம் தெரிவித்தது. ஆனால் அதுவும் மறுக்கப்பட்டது.
செந்தில் பாலாஜியை விசாரணைக்காக காவலில் எடுக்கிறோமே தவிர காவலில் வைப்பதற்காக அல்ல. மருத்துவ காரணங்களால் அவரை விசாரிக்க முடியவில்லை. குற்றம் சாட்டப்பட்டவர்களை காவலில் எடுத்து விசாரிக்க அமலாக்கத்துறைக்கு உரிமையுள்ளது.
காவலில் வைத்து விசாரணை செய்ய வேண்டும் என்பது புலனாய்வு அமைப்புகளின் முக்கியமான உரிமையாகும். இதனை தான் சென்னை உயர்நீதிமன்ற இரு நீதிபதிகள் உறுதி செய்துள்ளனர். உண்மையை எடுத்துரைப்பது எங்கள் உரிமை மட்டுமல்ல, பாதிக்கப்பட்டவர்களுக்கு செய்ய வேண்டிய கடமையும் கூட. நீதிமன்ற நடவடிக்கைகளால் கடமையை செய்ய முடியவில்லை” என்று வாதம் செய்தார்.
மதியம் 2 மணிக்கு பிறகு தொடர்ந்து துஷார் மேத்தா வாதம் செய்ய உள்ளார்.
செல்வம்
மணிப்பூர் விவகாரம்: குடியரசுத்தலைவரிடம் நாங்கள் வைத்த கோரிக்கை!
காவல்துறை பாதுகாப்புடன் பட்டியலினத்தவர்கள் கோவிலில் சாமி தரிசனம்!