ADVERTISEMENT

செந்தில்பாலாஜி கைதுக்கான காரணம் சீலிடப்பட்ட கவரில் உள்ளது: அமலாக்கத்துறை

Published On:

| By Aara

அமைச்சர் செந்தில்பாலாஜி கைது தொடர்பாக அவரது மனைவி தொடுத்த ஹேபியஸ் கார்பஸ் மனு சென்னை உயர் நீதிமன்றத்தில் (ஜூன் 27) இன்று விசாரணைக்கு வந்தபோது செந்தில்பாலாஜி தரப்பில் வழக்கறிஞர் என்.ஆர். இளங்கோ மீண்டும் சில நிமிடங்கள் வாதாடினார்.

அமலாக்கத்துறை தாக்கல் செய்த பதில் மனு மீது தன் வாதங்களை வைத்தார். அதன் பிறகு காணொலி காட்சியில் அமலாக்கத்துறை வழக்கறிஞரான மத்திய அரசின் சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா தனது வாதத்தைத் தொடங்கினர்.

ADVERTISEMENT

”ஒருவர் கைது செய்யப்பட்டு நீதிமன்றக் காவலில் இருக்கும்போது, உயர்நீதிமன்றம் ஹேபியஸ் கார்பஸ் உத்தரவை பிறப்பிக்குமா? செந்தில்பாலாஜி ஜாமீனுக்கு செஷன்ஸ் கோர்ட்டில் விண்ணப்பித்தார். அதிலும் இப்போது ஹேபியஸ் கார்பஸ் மனுவில் குறிப்பிட்ட காரணங்களைக் குறிப்பிட்டார். ஜாமீன் மனு தள்ளுபடி செய்யப்பட்டது.

ஜாமீன் மனு எப்போது தாக்கல் செய்ய முடியும்? சட்ட விரோதக் காவலில் இருப்பதாக நினைக்கும் ஒருவர் எப்படி நீதிமன்றத்தில் ஜாமீன் கோர முடியும்? செந்தில்பாலாஜி ஜாமீன் மனு தாக்கல் செய்ததிலேயே அவர் சட்ட ரீதியான காவலில் இருப்பதை அவரே மறைமுகமாக ஒப்புக் கொண்டிருக்கிறார் என்பதைத்தானே வெளிக்காட்டுகிறது.

ADVERTISEMENT

ஒருவர் சட்டவிரோத காவலில் இருப்பதாக நம்பினால், அவர் ஏன் ஜாமீன் மனு தாக்கல் செய்ய வேண்டும்?” என்று வாதங்களை வைத்த துஷார் மேத்தா தொடர்ந்தார்.

அமலாக்கத்துறை செந்தில்பாலாஜியை கைது செய்த தேதியும் நேரமும் சர்ச்சைக்குரியதாக இல்லை என்பதை மனதில் கொள்ள வேண்டும். ஜூன் 14 ஆம் தேதி அதிகாலை 1:39 மணிக்கு செந்தில்பாலாஜி கைது செய்யப்பட்டார். அவரை நீதிமன்றக் காவலில் வைப்பதற்கான விண்ணப்பம் ஜூன் 14 ஆம் தேதி காலை 11:30 முதல் 12 மணிக்குள் செஷன்ஸ் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது. செந்தில்பாலாஜி கைது செய்யப்பட்ட பத்து மணி நேரத்துக்குள் அவரது கைது பற்றிய தகவலை நீதிமன்றத்துக்குத் தெரிவித்துள்ளோம்.

ADVERTISEMENT

இந்த இடத்தில் சட்ட விரோத பணப் பரிமாற்ற தடைச் சட்டத்தின் பிரிவு 19 ஐ நான் குறிப்பிட விரும்புகிறேன். (அதை படித்துக் காட்டுகிறார்) அதாவது, ‘பிஎம் எல் ஏ சட்டத்தின் கீழ் தண்டிக்கப்படக் கூடிய குற்றத்தில் ஒரு நபர் குற்றவாளி என்று நம்புவதற்கு காரணம் இருந்தால், அவரைக் கைது செய்ய ED அதிகாரிகளுக்கு அதிகாரம் அளிக்கிறது.

கைது செய்யப்பட்டதற்கான காரணங்களை உடனடியாகத் தெரிவிக்காமல், கூடிய விரைவில் தெரிவிக்க வேண்டும்’ என்று அந்த பிரிவு கூறுகிறது.
பிஎம்எல்ஏ பிரிவு 19 என்பது ஒரு நபரைக் கைது செய்யும் போது விசாரணை அதிகாரிக்கு கடுமையான நிபந்தனைகளை விதிக்கின்றது. இதன்படி விசாரணை அலுவலர்( IO) கைது செய்வதற்கான காரணங்கள் இருப்பதைத் திருப்திப்படுத்த ஒரு சீல் வைக்கப்பட்ட கவரில் கைது செய்யப்பட்டதற்கான காரணங்களைச் சமர்ப்பிக்க வேண்டும்” என்று கூறிய சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா தனது வாதங்களைத் தொடர்ந்தார்.

“இப்போது பிஎம்எல்ஏவின் பிரிவு 65 ஐ பாருங்கள். சிஆர்பிசியின் விதிகள் பிஎம்எல்ஏவின் விதிகளுக்கு முரணாக இல்லாததால், கைது செய்வதற்குப் பொருந்தும். மேலும் பிஎம்எல்ஏவின் 71-வது பிரிவையும் படித்துப் பாருங்கள். சிஆர்பிசி விதிகள் பிஎம்எல்ஏ விதிமுறைகளுடன் ஒத்துப் போகின்றன. அதுமட்டுமல்ல… சிஆர்பிசியின் பிரிவு 41 ஏ என்பது மிக மிக அடிப்படையானது மற்றும் குறைந்தபட்சமானது. ஆனால் நாங்கள் (அமலாக்கத் துறை) PMLA சட்டத்தில் மிகவும் கடுமையான விதிகளின் கீழ் செயல்படுகிறோம்.

அந்த அடிப்படையில் செந்தில்பாலாஜியை கைது செய்வதற்கான போதுமான திருப்திகரமான காரணங்கள் இருப்பதை உறுதி செய்து விசாரணை அதிகாரி சீலிடப்பட்ட கவரில் செஷன்ஸ் நீதிமன்றத்தில் சமர்ப்பித்துள்ளார். அந்த கவர் விசாரணையின் போது திறக்கப்படும்” என்று வாதிட்டார் துஷார் மேத்தா.

தொடர்ந்த அவர், “ஜூன் 14 ஆம் தேதி அதிகாலை 1:39 மணிக்கு கைது செய்யப்பட்டபோது, கைது செய்யப்பட்டதற்கான காரணத்தை அவர் பெற மறுத்துவிட்டதாகவும், ஒப்புதலில் கையெழுத்திட மறுத்துவிட்டதாகவும் ED செஷன்ஸ் நீதிமன்றத்தில் தெரிவித்திருப்பதை இங்கே நினைவூட்டுகிறேன்.

ஜூன் 14 ஆம் தேதி காலை 11:30 மணி முதல் 12 மணிக்குள் நீதிமன்றத்தில் ரிமாண்ட் கேட்டு வைக்கப்பட்ட விண்ணப்பத்தின் நகலை அமைச்சருக்கு நகலை வழங்கிய பின்னர்தான் நீதிமன்றத்தில் தாக்கல் செய்தோம். அவரை ரிமாண்ட் செய்வதற்காக செஷன்ஸ் நீதிபதி ஜூன் 14 அன்று மாலை 3:30 மணிக்கு மருத்துவமனைக்கு வந்தார்.
கைது செய்யப்பட்டதற்கான காரணங்களை “கூடிய விரைவில்” மட்டுமே தெரிவிக்க வேண்டும் என்று சட்டம் கூறுகிறது, ஆனால் தற்போதைய வழக்கில், ED அதிகாரிகள் உடனடியாக அமைச்சரிடம் காரணங்களைத் தெரிவித்திருந்தாலும், அவர் அதைப் பெற்று ஒப்புக்கொள்ள மறுத்துவிட்டார்.

கைது செய்யப்பட்டு 24 மணி நேரம் முடிவதற்கு முன்பே, அதாவது ஜூன் 14 அன்று பிற்பகல் 3:30 மணிக்கு மருத்துவமனைக்கு சென்ற செஷன்ஸ் நீதிபதியால் கைது செய்யப்பட்டதற்கான காரணம் அமைச்சரிடம் தெரிவிக்கப்பட்டது. எனவே அமைச்சர் செந்தில்பாலாஜியின் கைது சட்ட விரோதமான கைது அல்ல” என்று வாதிட்டார் துஷார் மேத்தா.

தொடர்ந்து… ஜூன் 14 அன்று பிற்பகல் 3:43 மணிக்கு பிறப்பிக்கப்பட்ட ரிமாண்ட் உத்தரவை வாசித்த துஷார் மேத்தா, பிறகு, ஜூன் 16 அன்று செஷன்ஸ் நீதிபதியால் மருத்துவமனையில் அமைச்சரைக் காவலில் வைக்க அனுமதித்து பிறப்பித்த உத்தரவையும் வாசித்தார்.

“செந்தில் பாலாஜி தரப்பு வழக்கறிஞர் கூறுவது போல இது ஒரு இயந்திர உத்தரவு அல்ல. நியாயமான உத்தரவு” என்றார்.

மேலும், செஷன்ஸ் நீதிபதியின் கஸ்டடி உத்தரவையும் வாசித்துக் காட்டிய சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா, “ செஷன்ஸ் நீதிபதி இருதரப்பு சமர்ப்பிப்புகளையும் பதிவு செய்து விரிவான காரணத்தை அளித்து விசாரணைக்கு அனுமதித்துள்ளார். ஆனால் அந்த கஸ்டடி ஆணையை எதிர்த்து அமைச்சர் இதுவரை ஏன் மனு செய்யவில்லை?” என்று கேட்டார் துஷார் மேத்தா.

அவரது வாதங்கள் தொடர்ந்து வருகின்றன.

வேந்தன்

செந்தில் பாலாஜி கைது: அமலாக்கத்துறையிடம் ஆதாரம் கேட்கும் என்.ஆர்.இளங்கோ

ஞானதிரவியம் எம்.பி மீது வழக்குப்பதிவு!

senthil balaji case tushar mehta argument
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share