‘தீர்வு சொல்ல யாருமே இல்லையே?’ உச்ச நீதிமன்றத்தில் அமலாக்கத் துறை! செந்தில்பாலாஜி வழக்கில் நடந்தது என்ன?

Published On:

| By Kavi

செந்தில் பாலாஜிக்கு எதிராக அமலாக்கத் துறை தொடர்ந்த வழக்கை உச்ச நீதிமன்றம் ஜூலை 4ஆம் தேதிக்கு ஒத்திவைத்துள்ளது.

உச்ச நீதிமன்றத்தில் இன்று (ஜூன் 21) அமைச்சர் செந்தில் பாலாஜி தனியார் மருத்துவமனைக்கு மாற்றப்பட்டதற்கு எதிர்ப்புத் தெரிவித்து அமலாக்கத் துறை தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனு விசாரணைக்கு வந்தது. நீதிபதிகள் சூர்யகாந்த், எம்.எம்.சுந்தரேஷ் மனுவை விசாரித்தனர்.

ADVERTISEMENT

அமலாக்கத் துறை சார்பில் மத்திய சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா ஆஜரானார். செந்தில் பாலாஜி தரப்பில் மூத்த வழக்கறிஞர் நீரஜ் கிஷன் கவுல் ஆஜரானார்.

செந்தில் பாலாஜி மனைவி தாக்கல் செய்த ஆட்கொணர்வு மனு மீது சென்னை உயர் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவுக்கு எதிராக வாதாடிய சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா,

ADVERTISEMENT

“ செந்தில் பாலாஜி அமலாக்கத் துறையால் கைது செய்யப்பட்டுவிட்ட நிலையில், அவர் குறித்த ஆட்கொணர்வு மனு தாக்கல் செய்வது என்பதே சட்டப்படி பொருந்தாது. குற்றவியல் நடைமுறை சட்டப்பிரிவு 41ஏன் படி, நோட்டீஸ் வழங்காமல் கைது செய்யப்பட்டது சட்டவிரோதமானது என்று செந்தில் பாலாஜி தரப்பு சென்னை உயர் நீதிமன்றத்தில் வாதத்தை முன்வைத்தது.

ஆனால் விஜய் மதன்லால் சவுத்ரி வழக்கில் பணமோசடி தடுப்புச் சட்டத்தின் கீழ் நடவடிக்கைகளுக்கு குற்றவியல் நடைமுறை சட்டப்பிரிவு 41 பொருந்தாது என்ற உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பு முன்னுதாரணமாக இருக்கிறது. செந்தில் பாலாஜி மனைவியின் ஆட்கொண்ர்வு மனுவை விசாரணைக்கு ஏற்றுக்கொண்டதே சட்டவிரோதமானது. உயர் நீதிமன்றத்தின் அணுகுமுறை என்பது ‘ராகுல் மோடி’ வழக்கில் உச்ச நீதிமன்ற அளித்த தீர்ப்புக்கு முரண்பாடாக இருக்கிறது ” என்றார்.

ADVERTISEMENT

இதற்கு உச்ச நீதிமன்ற அமர்வு, “மனுவை ஏற்றுகொண்டாலே அவர்களது முழு கோரிக்கையையும் ஏற்றுக்கொண்டதாக அர்த்தமில்லை” என்று தெரிவித்தது.

நீதிபதி சூர்யகாந்த், ”உயர் நீதிமன்றத்தில் வழக்கு இருக்கும் போது நாங்கள் முன்கூட்டியே உத்தரவு பிறப்பிக்க முடியுமா?. நீங்கள் உயர் நீதிமன்றத்தையே அணுகலாம். ஆட்கொணர்வு மனுவை விசாரிக்க முடியாது என்று உயர் நீதிமன்றத்தில் வலியுறுத்த அமலாக்கத் துறைக்கு உரிமை இருக்கிறது. நீங்கள் மேற்கோள் காட்டிய தீர்ப்புகளை உயர் நீதிமன்றம் பரிசீலித்து தகுந்த உத்தரவை வழங்கும் என்பதில் எங்களுக்கு எந்த சந்தேகமும் இல்லை ” என்று கூறினார்.

தொடர்ந்து செந்தில் பாலாஜியை தனியார் மருத்துவமனைக்கு மாற்றப்பட்டதற்கு எதிர்ப்புத் தெரிவித்து வாதிட்ட சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா, “இந்த இடைக்கால உத்தரவால் செந்தில் பாலாஜியை அமலாக்கத் துறை காவலில் எடுத்ததற்கே அர்த்தமில்லாமல் இருக்கிறது.

கைது செய்யப்பட்ட முதல் 15 நாள் என்பது மிக முக்கியமானது. அதுபோன்று கைது செய்யப்பட்ட 15 நாட்களுக்கு மேல் போலீஸ் காவலில் வைக்க முடியாது என்று அனுபம் ஜே. குல்கர்னி வழக்கில் உச்ச நீதிமன்றம் கூறியுள்ளது. எனவே செந்தில் பாலாஜி மருத்துவமனையில் சிகிச்சையில் செலவழித்த நாட்கள், முதல் 15 நாட்களில் கணக்கிடப்படாது என்பதை நீதிபதிகள் தெளிவுபடுத்த வேண்டும்” என்று கோரிக்கை வைத்தார்.

இதை விசாரித்த நீதிபதிகள், “இந்த வழக்கு உயர் நீதிமன்றத்தில் இருக்கிறது. உயர் நீதிமன்றம் நீதித்துறை கொள்கைகளை நிச்சயம் பின்பற்றும். உயர் நீதிமன்ற உத்தரவில் தவறு இருந்தால் அதை கண்காணித்து நாங்கள் சுட்டிக்காட்டுவோம். குற்றம் சாட்டப்பட்ட செந்தில் பாலாஜியின் உடல்நிலையை கண்காணித்து தீர்மானிக்க சிறப்பு நிபுணர் குழுவை அமைத்துக்கொள்ள அமலாக்கத் துறைக்கு உயர் நீதிமன்றம் அனுமதி வழங்கியிருக்கிறது.

செந்தில் பாலாஜி மருத்துவமனையில் சிகிச்சை பெறும் காலம் முடியும் வரை, காவலில் இருக்கும் காலத்தை ஒத்திவைக்க வேண்டுமென சிறப்பு நீதிமன்றத்திடம் அமலாக்கத் துறை கோரலாம்” என்று நீதிபதிகள் சுட்டிக்காட்டினர்.

இதற்கு துஷார் மேத்தா, “விசாரணை நீதிமன்றத்துக்கு போனால் வழக்கு உயர் நீதிமன்றத்தில் இருக்கிறது என்கிறார்கள். இங்கு உச்ச நீதிமன்றத்துக்கு வந்தாலும் வழக்கு உயர் நீதிமன்றத்தில் இருக்கிறது என்று அதையே சொல்கிறீர்கள். நாங்கள் என்னதான் செய்வது. தீர்வற்றவர்களாக இருக்கிறோம்” என்று குறிப்பிட்டார்.

அமாலாக்கத் துறையை தொடர்ந்து செந்தில் பாலாஜி தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் நீரஜ் கிஷன் கவுல், “செந்தில் பாலாஜிக்கு இதயத்தில் 4 அடைப்புகள் இருந்தது. அதற்கான மருத்துவ ஆவணங்கள் அமலாக்கத்துறையிடம் அளிக்கப்பட்டுள்ளன. இன்று காலையில்தான் அறுவை சிகிச்சை முடிந்திருக்கிறது” என்று குறிப்பிட்டார்.

இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள், “இந்த வழக்கில் உயர் நீதிமன்ற விசாரணையில் உத்தரவு என்ன என்பதை பார்த்துவிட்டு பிறகு விசாரிப்போம். அதுவரை இடைக்கால உத்தரவு பிறப்பிக்க முடியாது” என்று கூறி வழக்கை ஜூலை 4ஆம் தேதிக்கு ஒத்திவைனர்.

மேலும், உச்ச நீதிமன்றத்தில் வழக்கு இருக்கிறது என்று காரணம் காட்டி வழக்கை ஒத்தி வைக்கக் கூடாது என்றும் உயர் நீதிமன்றத்துக்கு உச்ச நீதிமன்ற நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

பிரியா

விஜய் சேதுபதி எனக்கு பிடித்த நடிகர்: ஷாருக்கான்

செந்தில் பாலாஜிக்கு எப்போது சுயநினைவு திரும்பும்? : அமைச்சர் மா.சுப்பிரமணியன்

senthil balaji case supreme court postponed
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share