செந்தில் பாலாஜி மனைவி தாக்கல் செய்த ஆட்கொணர்வு மனு விசாரணைக்கு உகந்தது என அவரது தரப்பு வழக்கறிஞர் என்.ஆர்.இளங்கோ பல்வேறு தீர்ப்புகளை முன்னுதாரணமாக காட்டி சென்னை உயர் நீதிமன்றத்தில் வாதத்தை முன்வைத்து வருகிறார்.
அமைச்சர் செந்தில் பாலாஜி மனைவி சென்னை உயர் நீதிமன்றத்தில் கடந்த ஜூன் 14ஆம் தேதி ஆட்கொணர்வு மனு தாக்கல் செய்தார். இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் பரத சக்ரவர்த்தி, நிஷா பானு அமர்வு செந்தில் பாலாஜியை ஓமந்தூரார் மருத்துவமனையில் இருந்து காவேரி மருத்துவமனைக்கு மாற்ற அனுமதி வழங்கியது.
அதன்படி ஜூன் 15ஆம் தேதி இரவு செந்தில் பாலாஜி காவேரி மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார். சென்னை உயர் நீதிமன்றத்தின் இந்த உத்தரவை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் அமலாக்கத் துறை மேல்முறையீடு செய்தது.
இந்த மனுவை நேற்று (ஜூன் 22) விசாரித்த உச்ச நீதிமன்றம் , ‘நீங்கள் சென்னை உயர் நீதிமன்றத்திலேயே முறையிடலாம்’ என்று கூறி வழக்கை ஜூலை 4ஆம் தேதிக்கு ஒத்திவைத்தது.
இந்நிலையில் செந்தில் பாலாஜியின் மனைவி தாக்கல் செய்த மனு மீண்டும் இன்று (ஜூன் 22) சென்னை உயர் நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது.
அப்போது அமலாக்கத் துறை சார்பில் சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா காணொலி காட்சி மூலம் ஆஜரானார். செந்தில் பாலாஜி தரப்பில் மூத்த வழக்கறிஞர் என்.ஆர்.இளங்கோ ஆஜரனார்.
முதலில் இந்த வழக்கு விசாரணைக்கு உகந்ததல்ல என அமலாக்கப் பிரிவு தரப்பில் தான் முதலில் வாதம் முன் வைக்க வேண்டும் என்று அமலாக்கத் துறை தரப்பில் துஷார் மேத்தா தனது வாதத்தை முன் வைத்தார்.
செந்தில் பாலாஜி தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் என்.ஆர். இளங்கோ, உச்ச நீதிமன்றம் நேற்று பிறப்பித்த உத்தரவை படித்து காட்டி வாதத்தை முன்வைத்தார்,
அப்போது அவர், “இந்த ஆட்கொணர்வு மனு விசாரணைக்கு உகந்தது. செந்தில் பாலாஜியின் கைது சட்டத்துக்கு உட்பட்டு இருந்திருந்தால் வழக்கு தொடர்ந்திருக்க மாட்டோம். அடிப்படை உரிமை பாதிக்கப்பட்டு நீதிமன்றத்தை நாடியுள்ளோம். எனவே எங்கள் மனு விசாரணைக்கு உகந்தது என தங்கள் தரப்பில் தான் முதலில் வாதம் முன் வைக்க வேண்டும்” என்று வாதாடினார்.
தொடர்ந்து என்.ஆர்.இளங்கோ வாதத்தை முன் வைக்கலாம் என்று நீதிபதிகள் கூற உச்ச நீதிமன்றத்தின் முந்தைய தீர்ப்புகளை மேற்கோள் காட்டி வாதம் செய்தார் என்.ஆர். இளங்கோ.
1972ல் வெளியான ராமச்சந்திர ராவ் வழக்கின் தீர்ப்பு, சஞ்சய் தத், நக்கீரன் கோபால் ஆகியோரது வழக்குகளில் சென்னை உயர் நீதிமன்றம் வழங்கிய உத்தரவு ஆகிவற்றை என்.ஆர். இளங்கோ மேற்கோள் காட்டி வருகிறார்.
அப்போது வழக்கு விசாரணைக்கு உகந்ததாக இருந்தாலும், அதனை ஏற்றுக்கொள்வது உயர் நீதிமன்றத்தின் அதிகாரம் என்று நீதிபதிகள் கருத்து தெரிவித்தனர்.
தொடர்ந்து வாதங்கள் முன் வைக்கப்பட்டு வருகின்றன.
பிரியா
