செந்தில் பாலாஜி ஜாமீன் வழக்கு: ஆகஸ்ட் 20-க்கு உச்சநீதிமன்றம் ஒத்திவைப்பு!

Published On:

| By Selvam

சட்டவிரோத பணப்பரிவர்த்தனை வழக்கில் அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்ட முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி ஜாமீன் கோரி உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்த வழக்கு, ஆகஸ்ட் 20-ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

தமிழ்நாடு முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி கடந்த 2023-ஆம் ஆண்டு ஜூன் 14ஆம் தேதி சட்டவிரோத பணப்பரிமாற்ற வழக்கில் அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டார்.

ADVERTISEMENT

இந்த வழக்கில் ஜாமீன் கோரி செந்தில் பாலாஜி உச்சநீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தார். இந்த மனு மீதான விசாரணை உச்சநீதிமன்ற நீதிபதிகள் அபய் ஓகா, அகஸ்டின் ஜார்ஜ் ஆகியோர் அடங்கிய அமர்வில் விசாரணை நடைபெற்று வந்தது.

அனைத்து தரப்பு வாதங்களும் நிறைவடைந்து தீர்ப்பு தேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்பட்ட நிலையில், இன்று (ஆகஸ்ட் 14) காலை வழக்கு விசாரணை பட்டியலிடப்பட்டு இருந்தது.

ADVERTISEMENT

சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா வேறு ஒரு வழக்கில் ஆஜராகியிருந்ததால், செந்தில் பாலாஜி வழக்கில் அவர் ஆஜராகவில்லை.

இதனையடுத்து நீதிபதி ஓகா, “இந்த வழக்கின் தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் ஒத்திவைத்துவிட்டோம். ஆனால், வழக்கில் சில விளக்கங்கள் எங்களுக்கு தேவைப்படுகிறது.

ADVERTISEMENT

போக்குவரத்து துறையில் லஞ்சம் பெற்றதாக மத்திய குற்றப்பிரிவு தாக்கல் செய்த மூன்று வழக்குகளையும் தொடர்ந்து அமலாக்கத்துறை விசாரிக்கப்போகிறதா? அல்லது 1000-க்கும் மேற்பட்டோர் குற்றம்சாட்டப்பட்ட  வழக்கை தவிர்த்துவிட்டு செந்தில் பாலாஜி தொடர்புடைய வழக்கை மட்டும் விசாரிக்கப்போகிறீர்களா?” என்று கேள்வி எழுப்பினார்.

இதற்கு அமலாக்கத்துறை தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், “சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா, வழக்கறிஞர் சோகிப் ஹூசைன் ஆகியோர் வேறு நீதிமன்றத்தில் இருப்பதால் வழக்கை ஒத்திவைக்க வேண்டும்” என்று தெரிவித்தார். இதனையடுத்து நீதிபதி ஓகா இந்த வழக்கை சற்று நேரம் ஒத்திவைத்தார்.

பின்னர் வழக்கு மீண்டும் விசாரணைக்கு வந்தபோது,  அமலாக்கத்துறை வழக்கறிஞர் ஆஜராகி, “நீதிபதி எழுப்பிய கேள்விக்கு சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா ஆகஸ்ட் 20-ஆம் தேதி விளக்கமளிப்பார்” என்று தெரிவித்தார். இதனையடுத்து இந்த வழக்கை ஆகஸ்ட் 20-ஆம் தேதிக்கு ஒத்திவைத்து நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

செல்வம்

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

சுதந்திர தினம்: 26 தமிழக காவல்துறை அதிகாரிகளுக்கு குடியரசு தலைவர் விருது!

செந்தில் பாலாஜிக்கு ஜாமீன் கிடைக்குமா? – இன்று மதியம் உச்சநீதிமன்றத்தில் விசாரணை!

Photo of author
Selvam
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share