senthil balaji bail case order
முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி ஜாமீன் கோரிய வழக்கில் நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் தீர்ப்பை ஒத்தி வைத்துள்ளார்.
அமலாக்கத் துறையால் கைதாகி 8 மாதங்களாக சிறையில் அடைக்கப்பட்டிருக்கும் முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி ஜாமீன் கேட்டு இரண்டாவது முறையாக சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார்.
இந்த மனு கடந்த பிப்ரவரி 14ஆம் தேதி நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது செந்தில் பாலாஜி தரப்பில், ‘அமலாக்கத் துறை டிஜிட்டல் ஆவணங்களை திருத்தியுள்ளது’ என வாதிடப்பட்டது.
அடுத்தநாள் பிப்ரவரி 15ஆம் தேதி அமலாக்கத் துறை சார்பில் வாதங்கள் முன்வைக்கப்பட்டன.
“டிஜிட்டல் ஆவணங்கள் திருத்தப்பட்டதாக செந்தில் பாலாஜி தரப்பு கூறும் குற்றச்சாட்டு தவறானது. அவர் அமைச்சர் பதவியை ராஜினாமா செய்தாலும், இன்னும் செல்வாக்கு மிக்கவராகவே இருக்கிறார்.
அதனால், ஜாமீனில் வெளியே வரும் பட்சத்தில் சாட்சிகளை கலைக்கக் கூடும். அதனால் அவருக்கு ஜாமீன் கொடுக்க கூடாது.
அமைச்சர் பதவியை ராஜினாமா செய்துள்ளாரே தவிர, வேறு எந்த மாற்றமும் ஏற்படவில்லை” என்று அமலாக்கத் துறை தரப்பில் கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் ஏ.ஆர்.எல் சுந்தரேசன் வாதாடினார்.
தொடர்ந்து செந்தில் பாலாஜி தரப்பு வாதத்துக்காக பிப்ரவரி 19ஆம் தேதிக்கு வழக்கை நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் ஒத்தி வைத்தார்.
ஆனால் பிப்ரவரி 19ஆம் தேதி தன்னால் ஆஜராக இயலாது என்பதால் வழக்கை ஒத்திவைக்க வேண்டும் என்ற செந்தில் பாலாஜி தரப்பு வழக்கறிஞர் ஆர்யமா சுந்தரத்தின் கோரிக்கையை ஏற்று ஜாமீன் மனு மீதான விசாரணையை பிப்ரவரி 21ஆம் தேதிக்கு நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் தள்ளி வைத்தார்.
அதன்படி செந்தில் பாலாஜியின் ஜாமீன் மனு இன்று (பிப்ரவரி 21) மதியம் விசாரணைக்கு வந்தது.
அப்போது செந்தில் பாலாஜி தரப்பில், “நேரடியாக செந்தில் பாலாஜி மீதான குற்றச்சாட்டுக்கு ஆதாரம் இல்லை. முறைகேடுகளுக்கு எந்த முகாந்திரமும் இல்லை. அமலாக்கத்துறை ஆவணங்களை திருத்தியுள்ளது.
நிபந்தனை விதித்தால் அதற்கு கட்டுப்பட தயார்” என வாதங்கள் முன்வைக்கப்பட்டன.
அமலாக்கத் துறை தரப்பில், “பென்டிரைவில் இருந்த ஆவணங்களில் 284 கோப்புகளை முதலில் தடயவியல் துறை ஆய்வுக்கு எடுத்தது. இதையடுத்து மொத்தமாக 487 கோப்புகளை தடயவியல் துறை ஆய்வுக்கு எடுத்தது.
அமலாக்கத்துறை எந்த தலையீடும் செய்யவில்லை. சுமார் 2,900 பேருக்கு வேலை வாங்கி தருவதாக கூறி பணம் சேகரித்ததற்கான ஆதாரங்கள் உள்ளன” என வாதங்கள் எடுத்துவைக்கப்பட்டன.
இரு தரப்பு வாதங்களும் நிறைவடைந்ததால் தீர்ப்பை நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் ஒத்திவைத்துள்ளார்.
பிரியா
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
இந்த இடங்களுக்கு ‘மழை’ உண்டு: வானிலை மையம்
இரட்டை இலை சின்னத்தை முடக்க முடியாது: எடப்பாடி பழனிசாமி
senthil balaji bail case order