நீதிமன்ற காவல் இன்றுடன் (ஆகஸ்ட் 28) முடிவடைந்த நிலையில் சென்னை சிறப்பு நீதிமன்றத்தில் அமைச்சர் செந்தில் பாலாஜி ஆஜர்படுத்தப்பட்டார் .
சட்டவிரோத பண பரிமாற்ற வழக்கில் அமலாக்கத் துறையால் கைது செய்யப்பட்ட செந்தில் பாலாஜியை 5 நாட்கள் கஸ்டடியில் எடுத்து விசாரித்த அமலாக்கத்துறை ஆகஸ்ட் 12 ஆம் தேதி சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தியது.
அப்போது செந்தில் பாலாஜி மீதான 120 பக்க குற்றப்பத்திரிக்கையும், 3 ஆயிரம் பக்கத்திற்கும் அதிகமான ஆவணங்களையும் தாக்கல் செய்தது.
இதனையடுத்து செந்தில் பாலாஜியை மேலும் 5 நாட்கள் விசாரிக்க அவகாசம் வேண்டும் என்ற அமலாக்கத் துறையின் கோரிக்கையை நிராகரித்து முதன்மை நீதிமன்ற நீதிபதி அல்லி செந்தில் பாலாஜியின் நீதிமன்ற காவலை ஆகஸ்ட் 25 ஆம் தேதி வரை நீட்டித்து உத்தரவிட்டார்.
இதனிடையே, செந்தில் பாலாஜி வழக்கை சிறப்பு நீதிமன்றம் விசாரிக்க வேண்டும் என்று ஆகஸ்ட் 12 ஆம் தேதி அமலாக்கத் துறை எம். பி., எம். எல். ஏக்கள் மீதான வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்தில் ஒரு மனுவைத் தாக்கல் செய்தது.
அமலாக்கத் துறையின் மனுவை சிறப்பு நீதிமன்றம் ஏற்றுக் கொண்டதால் செந்தில் பாலாஜி மீதான வழக்கை சிறப்பு நீதிமன்றத்திற்கு மாற்றி முதன்மை அமர்வு நீதிமன்றம் உத்தரவிட்டது.
இதனை தொடர்ந்து ஆகஸ்ட் 25ஆம் தேதியுடன் செந்தில் பாலாஜியின் நீதிமன்ற காவல் முடிவடைந்த நிலையில் ஆகஸ்ட் 28ஆம் தேதி வரை நீதிமன்ற காவலை நீட்டித்து சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டது.
இந்நிலையில் அமைச்சர் செந்தில் பாலாஜி இன்று மதியம் புழல் சிறையில் இருந்து பலத்த போலீஸ் பாதுகாப்புடன் அழைத்து வரப்பட்டு சிறப்பு நீதிமன்றத்தில் நீதிபதி ரவி முன்பு ஆஜர்ப்படுத்தப்பட்டார்.
அப்போது செந்தில் பாலாஜியின் நீதிமன்ற காவலை செப்டம்பர் 15 ஆம் தேதி வரை நீட்டித்து நீதிபதி உத்தரவு பிறப்பித்தார்.
மேலும் செந்தில் பாலாஜியின் ஜாமீன் மனுவை தன்னால் விசாரிக்க முடியாது என்றும் முதன்மை அமர்வு நீதிமன்றத்தை அணுகவும் அறிவுறுத்தினார்.
இந்த வழக்கு விசாரணையின் போது 3000 பக்கங்கள் கொண்ட குற்றப்பத்திரிகையும் செந்தில் பாலாஜி தரப்புக்கு வழங்கப்பட்டது.
அடுத்த விசாரணையின் போது காணொளி காட்சி மூலம் செந்தில் பாலாஜியை ஆஜர்படுத்தினால் போதும் என்று கூறி வழக்கை சிறப்பு நீதிமன்ற நீதிபதி ரவி ஒத்தி வைத்தார்.
மோனிஷா
2 நாட்களுக்கு கனமழை: எந்தெந்த மாவட்டங்களில்!
சிறுவன் உயிரிழந்த விவகாரத்தில் நடவடிக்கை எடுக்கப்படும்: சென்னை துணை மேயர்
மகள் இயக்கும் ’லால் சலாம்’: சம்பளத்தில் கறாராக இருக்கும் ரஜினிகாந்த்