தமிழகத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்திய கச்சநத்தம் படுகொலை வழக்கில் 27 பேருக்கு ஆயுள் தண்டனை விதித்து சிவகங்கை நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு வழங்கி இருக்கிறது.
சிவகங்கை மாவட்டம், திருப்பாச்சேத்தி அருகேயுள்ள கச்சநத்தம் கிராமத்தில் 2018ஆம் ஆண்டு கோயில் திருவிழா நடந்தது. அப்போது கோயில் மரியாதை செய்வது தொடர்பாக ஏற்பட்ட விரோதத்தில் பட்டியலினத்தைச் சேர்ந்த ஆறுமுகம்(65), சண்முகநாதன்(31), சந்திரசேகர்(34) ஆகிய மூன்று பேர் படுகொலை செய்யப்பட்டனர். இரவு நேரத்தில் ஊருக்குள் புகுந்த கும்பல், பட்டியல் சமூகத்தைச் சேர்ந்தவர்களின் வீடுகளைச் சேதப்படுத்தி, அவர்கள் மீது அரிவாள், கத்தி போன்ற ஆயுதங்களால் கடுமையாகத் தாக்கியது.

பெரும் பதற்றத்தை ஏற்படுத்திய இந்தப் படுகொலைச் சம்பவத்துக்கு நியாயம் கேட்டு பல்வேறு அமைப்புகள் தமிழ்நாடு முழுவதும் போராட்டம் நடத்தின. இந்த படுகொலை வழக்கில் ஆவரங்காடு கிராமத்தை சேர்ந்த சுமன், அருண்குமார், சந்திரக்குமார், அக்னிராஜ், ராஜேஷ் உள்ளிட்ட 33 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இதில் இரண்டு பேர் விசாரணை நடந்த காலகட்டத்தில் உயிரிழந்தனர். கைதானவர்களில் ஒருவர் சிறுவர். ஒருவர் தலைமறைவானார்.

மீதமுள்ள 27 பேர் மீதான வழக்கானது சிவகங்கை ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் உள்ள எஸ்.சி, எஸ்.டி வன்கொடுமை தடுப்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இந்த வழக்கில் கடந்த ஆகஸ்ட் 1 ஆம் தேதி தீர்ப்பு வழங்கிய நீதிபதி முத்துக்குமரன் உள்ளிட்ட 27 பேரும் குற்றவாளிகள் என்று தெரிவித்தனர்.
இந்நிலையில் குற்றவாளிகள் 27 பேருக்குமான தண்டனை விவரம் இன்று அறிவிக்கப்பட்டது. கச்சநத்தம் 3 பேர் படுகொலை வழக்கில் 27 பேருக்கும் ஆயுள் தண்டனை விதித்து நீதிபதி முத்துக்குமரன் இன்று (ஆகஸ்ட் 5) அதிரடி தீர்ப்பளித்தார். இதையடுத்து, அவர்கள் சிறையில் அடைக்கப்பட்டனர்.
கலை.ரா
மத்திய அரசுக்கு எதிராக குரல் : ராகுலைத் தொடர்ந்து பிரியங்காவும் கைது!