மூத்த பத்திரிகையாளர் சண்முகநாதன் வயது மூப்பு காரணமாக இன்று (மே 3) காலை 10.30 மணிக்கு காலமானார். அவருக்கு வயது 90.
தினத்தந்தி நாளிதழில் 70-ஆண்டுகளுக்கும் மேலாக பணியாற்றிய சண்முகநாதன், வரலாற்றுச்சுவடுகள், கற்காலம் முதல் கம்ப்யூட்டர் காலம் வரை உள்ளிட்ட நூல்களை எழுதியுள்ளார். 2021-ஆம் ஆண்டுக்கான கலைஞர் எழுதுகோல் விருது அவருக்கு வழங்கப்பட்டது.
சண்முகநாதன் மறைவுக்கு முதல்வர் ஸ்டாலின், திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி உள்ளிட்ட தலைவர்களும் மற்றும் சென்னை பத்திரிகையாளர் மன்றத்தினரும் இரங்கல் தெரிவித்துள்ளனர்.
முதல்வர் ஸ்டாலின்
மூத்த பத்திரிகையாளரும், 2021-ஆம் ஆண்டுக்கான கலைஞர் எழுதுகோல் விருது பெற்றவருமான ஐ.சண்முகநாதன் வயது மூப்பின் காரணமாக மறைந்தார் என்ற செய்தியறிந்து மிகவும் வருந்துகிறேன்.
தினத்தந்தி நாளிதழின் நிறுவனர் சி.பா.ஆதித்தனார் காலத்தில் 1953-ஆம் ஆண்டு அந்நாளேட்டில் உதவி ஆசிரியராகப் பணிக்குச் சேர்ந்த சண்முகநாதன், 2023-ஆம் ஆண்டு இதழியல் துறையில் எழுபதாண்டுகளைக் கடந்த பெருமைக்குரியவர்.
தினத்தந்தி குழுமம் வெளியிட்டு, ஒரு லட்சம் பிரதிகளுக்கு மேல் விற்பனையான “வரலாற்றுச் சுவடுகள்” நூலின் ஆசிரியர். “ஒரு தமிழன் பார்வையில் 20ம் நூற்றாண்டு வரலாறு”, “கற்காலம் முதல் கம்ப்யூட்டர் காலம்” வரை முதலான பல்வேறு நூல்களையும் படைத்துள்ளார்.
நீண்ட நெடிய அனுபவத்துக்கும், எண்ணற்ற பங்களிப்புகளுக்கும் சொந்தக்காரரான சண்முகநாதன் மறைவு தமிழ் இதழியல் உலகுக்குப் பெரும் இழப்பாகும். அன்னாரை இழந்து வாடும் குடும்பத்தினருக்கும், பத்திரிகைத்துறை நண்பர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும் ஆறுதலையும் தெரிவித்துக்கொள்கிறேன் என்று குறிப்பிட்டுள்ளார்.
திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி
“பத்திரிகைத் துறையில் 70 ஆண்டுகள் அனுபவம் பெற்ற ‘தினத்தந்தி’ ஏட்டின் மேனாள் ஆசிரியர் – அமைதியின் திருவுருவம் சண்முகநாதன் இன்று மறைவுற்றார் என்பதை அறிந்து பெரிதும் வருந்துகிறோம்.
அவரின் மறக்க முடியாத, என்றும் நிலைத்து நிற்கும் – ‘தினத்தந்தி’ குழுமத்தினரால் வெளியிடப் பட்ட ‘வரலாற்றுச் சுவடுகள்’ என்ற நூல் ஒரு தகவல் களஞ்சியமாகும்.
2021ஆம் ஆண்டு ‘கலைஞர் எழுதுகோல்’ விருது வழங்கப்பட்டவர்.
பிற்பகல் நேரங்களில் ஓய்வெடுக்க – ‘தினத்தந்தி’க்கு பக்கத்து அலுவலகமான ‘விடுதலை’ வளாகத்தில் தம் காரில் ஓய்வு எடுப்பவர் – அந்த அளவுக்கு நம்மிடம் நேசமும், பாசமும், உறவும் கொண்டவர்.
பழுத்த பத்திரிகைத் துறை அனுபவம் வாய்ந்த அவரின் மறைவு – பத்திரிகையாளர் உலகிற்கு மாபெரும் இழப்பாகும். அவர் பிரிவால் துயருறும் குடும்பத்தாருக்கும், உற்றார், உறவினர்களுக்கும், பத்திரிகையாளர்களுக்கும் திராவிடர் கழகத்தின் சார்பிலும், விடுதலைக் குழுமத்தின் சார்பிலும் ஆழ்ந்த இரங்கலையும், ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறோம்” என்று திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி குறிப்பிட்டுள்ளார்.
சென்னை பத்திரிகையாளர் மன்றம்
“70 ஆண்டுகள் தன்னை இதழியல் பணியில் இணைத்துக் கொண்ட மூத்த பத்திரிகையாளரும், 2021-ஆம் ஆண்டுக்கான கலைஞர் எழுதுகோல் விருது பெற்றவருமான தினத்தந்தி முன்னாள் ஆசிரியர் பெரியவர் ஐ. சண்முகநாதன் இன்று வயது மூப்பின் காரணமாக காலமானார். அவரது மறைவுக்கு சென்னை பத்திரிகையாளர் மன்றம் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறது.
தினத்தந்தி குழுமம் வெளியிட்டு, லட்சம் பிரதிகளுக்கு மேல் விற்பனையான “வரலாற்றுச் சுவடுகள்” நூலின் ஆசிரியர். “ஒரு தமிழன் பார்வையில் 20ம் நூற்றாண்டு வரலாறு”, “கற்காலம் முதல் கம்ப்யூட்டர் காலம்” வரை முதலான பல்வேறு நூல்களையும் படைத்துள்ள பெரியவர் சண்முகநாதன் அவர்களது மறைவு தமிழ் இதழியல் உலகுக்குப் பெரும் இழப்பாகும். அவரை இழந்து வாடும் குடும்பத்தினர்,நண்பர்கள் அனைவருடனும் துயரத்தில் பங்கேற்கிறோம்” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
மறைந்த பத்திரிகையாளர் சண்முகநாதனின் உடல் அஞ்சலிக்காக சென்னை முகப்பேரில் உள்ள அவரது இல்லத்தில் வைக்கப்பட்டுள்ளது. நாளை (மே 4) காலை 9 மணிக்கு வில்லிவாக்கம் சிட்கோ நகர் மின்மயானத்தில் உடல் தகனம் செய்யப்பட உள்ளது என அவரது குடும்பத்தினர் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
செல்வம்
தோனி கொடுத்த கிஃப்ட்: முஸ்தபிசுர் ரஹ்மான் சொன்ன அந்த விஷயம்!
இந்த பதிவெண் கொண்ட வாகனங்களுக்கு இ பாஸ் தேவையில்லை :உதகை ஆர்டிஓ அறிவிப்பு!