செங்கோட்டையனுக்கு என்ன பொறுப்புகள்? விஜய் பரபரப்பு அறிக்கை!

Published On:

| By Mathi

Vijay Statement on Sengottaiyan

தவெகவில் இணைந்த செங்கோட்டையனுக்கு 2 பொறுப்புகளை வழங்கி அறிவிப்பு வெளியிட்டுள்ளார் அக்கட்சித் தலைவர் விஜய்.

தவெக தலைவர் விஜய் வெளியிட்ட அறிக்கை:

ADVERTISEMENT

தமிழ்நாட்டின் இருபெரும் தலைவர்களோடு பயணித்தவர். தாம் சார்ந்திருந்த கழகத்தின் வளர்ச்சியில் முக்கியப் பங்காற்றியவர். அனைவரிடத்திலும் எளிமையோடும், அன்போடும் பண்போடும் பழகி நன்மதிப்பைப் பெற்றவர்; மூத்த அரசியல் தலைவர், முன்னாள் அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் இன்று முதல் நம் தமிழக வெற்றிக் கழகத்தில் இணைந்து, மக்களுக்கான அரசியலில் நம்மோடு பயணிக்க இருக்கிறார். அவரை வாழ்த்தி வரவேற்பதில் பெருமகிழ்ச்சி அடைகிறேன்.

தவெக நிர்வாக குழு தலைமை ஒருங்கிணைப்பாளர்

ADVERTISEMENT

அண்ணன் செங்கோட்டையன், ஏற்கனவே அறிவிக்கப்பட்ட 28 பேர் கொண்ட எனது கண்காணிப்பில் இயங்கும் கழக உயர்மட்ட மாநில நிர்வாகக் குழுவின் தலைமை ஒருங்கிணைப்பாளராக (Chief Coordinator) நியமிக்கப்படுகிறார். இவர் இக்குழுவை வழிநடத்தி. தவெகவின் அரசியல் செயல்பாடுகளை முன்னெடுக்க எனக்கு உறுதுணையாகச் செயல்படுவார்.

கோவை, நீலகிரி, ஈரோடு, திருப்பூர் மாவட்டங்களின் அமைப்பு செயலாளர்

ADVERTISEMENT

மேலும் கூடுதலாக, ஈரோடு, கோயம்புத்தூர், திருப்பூர், நீலகிரி ஆகிய மாவட்டங்களுக்கு அமைப்புச் செயலாளராகவும் நியமிக்கப்படுகிறார். என்னோடும், தவெக பொதுச் செயலாளர் என்.ஆனந்துடனும் கலந்தாலோசித்து தவெக பணிகளை மேற்கண்ட இம்மாவட்டங்களில் மேற்கொள்வார்.

மேலும், அவருடன் தமிழக வெற்றிக் கழகத்தில் தங்களை இணைத்துக் கொண்ட நாடாளுமன்ற முன்னாள் உறுப்பினர் சத்தியபாமா, சட்டமன்ற முன்னாள் உறுப்பினர்கள் வெங்கடாசலம், முத்துக்கிருஷ்ணன் மற்றும் பிற புதிய உறுப்பினர்களையும் வாழ்த்தி வரவேற்பதில் பெருமகிழ்ச்சி அடைகிறேன்.

தவெக தோழர்களும் நிர்வாகிகளும் புதிய உறுப்பினர்களுக்கு முழு ஒத்துழைப்பு நல்கிட வேண்டும் எனக் கேட்டுக்கொள்கிறேன். இவ்வாறு விஜய் தெரிவித்துள்ளார்.

புதுவை மாநில பாஜக முன்னாள் தலைவர் சாமிநாதன்

விஜய் வெளியிட்ட மற்றொரு அறிக்கையில், புதுச்சேரி மாநிலத்தில் சட்டமன்ற உறுப்பினர்களாகச் சிறப்பாகப் பணியாற்றி அனைவரிடத்தில் நன்மதிப்பைப் பெற்ற V.சாமிநாதன், KAU அசனா ஆகியோர் இன்று தமிழக வெற்றிக் கழகத்தில் தங்களை இணைத்துக் கொண்டு மக்களுக்கான அரசியலில் நம்மோடு பயணிக்க இருக்கிறார்கள். அவர்களை வாழ்த்தி வரவேற்பதில் பெருமகிழ்ச்சி அடைகிறேன். தவெக தோழர்களும் நிர்வாகிகளும் இவர்களுக்கு முழு ஒத்துழைப்பு நல்கிட, மக்கள் பணியாற்றிட வேண்டும் எனக் கேட்டுக்கொள்கிறேன் என தெரிவித்துள்ளார். புதுச்சேரி பாஜக முன்னாள் தலைவர் சாமிநாதன் என்பது குறிப்பிடத்தக்கது.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share