எடப்பாடி பழனிசாமி பெரிய தலைவர் இல்லை. அவருக்கு பதில் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை என செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.
கோவையிலிருந்து இன்று ( டிசம்பர் 1) சென்னை கிளம்பிய தமிழக வெற்றிக் கழக நிர்வாக குழு தலைமை ஒருங்கிணைப்பாளர் செங்கோட்டையன் கோவை விமான நிலையம் வந்தார். அங்கு செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது எடப்பாடி பழனிசாமி நேற்று கோபி செட்டிபாளையத்தில் நடந்த மக்களை காப்போம் தமிழகத்தை மீட்போம் பிரச்சார கூட்டத்தில் சுயநலவாதி என கடுமையாக விமர்சனம் செய்திருந்தது குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினார். அதற்கு, ” அவர் பெரிய தலைவர் அல்ல.. அவருக்கு பதில் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை” என தெரிவித்தார்.
அமித்ஷா சொன்னபடி செயல்படுவதாகவும், கட்சி மாறவில்லை.. பிரான்ச் மட்டும் தான் மாறி உள்ளார் என்று துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலினின் விமர்சனம் குறித்த கேள்விக்கு, “யார் வேண்டுமானாலும் எது வேண்டுமானாலும் சொல்லட்டும். என்னைப் பொறுத்தவரை நான் தெளிவாக இருக்கிறேன்” என்றார்.
கோபி செட்டிபாளையத்தில் வெற்றி விழா நடத்துவோம் என எடப்பாடி பேசியது குறித்த கேள்விக்கு, “தேர்தலில் மக்கள் தீர்மானிப்பார்கள் பாருங்கள்” என்றார்.
முன்னதாக நேற்று கோபியில் அதிமுகவின் மக்களை காப்போம்; தமிழகத்தை மீட்போம் பிரச்சார கூட்டத்தில் பேசிய எடப்பாடி பழனிசாமி, அதிமுகவில் நீக்கப்பட்டவரோடு எந்த தொடர்பும் வைத்துக் கொள்ளக் கூடாது என்று பொதுக்குழுவில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டிருக்கிறது. அதற்கு எதிராக நீக்கப்பட்டவர்களோடு சென்றதால் நிர்வாகிகளை அழைத்துப் பேசினோம். அவர் இனி இங்கு தொடர லாயக்கற்றவர் என்பதாலே அடிப்படை உறுப்பினர் பதவியிலிருந்து நீக்கினோம். ஏதோ எடுத்தோம் கவிழ்த்தோம் என்று நடவடிக்கை எடுக்கவில்லை. அவர் திட்டமிட்டு கடந்த இரண்டு, மூன்று ஆண்டுகளாகவே இயக்கத்தில் இருந்துகொண்டே, இயக்கத்துக்கு துரோகம் விளைவித்தார்.
வைத்திலிங்கம், ஓபிஎஸ் கோபியில் கூட்டம் போட்டனர். இப்படி அவர்களே அந்த நபரை அவமரியாதையாகப் பேசுகிறார்கள். ஆனால் இவர் ஒவ்வொரு முறையும் இவர்களையெல்லாம் அழைத்து சட்டமன்றக் கேன்டீனில் வைத்து, இந்த ஆட்சியை ஏதாவது தொந்தரவு கொடுக்க திட்டமிட்டார். அவர்களை விஷமத்தனமாக வெளியேற்றிவிட்டு இவர் இருந்தார், இப்போது என்னவாச்சு? நல்லது செய்தால் நல்லது நடக்கும், கெட்டது செய்தால் கெட்டது. இந்த இயக்கத்துக்கு துரோகம் செய்தவர்களை ஆண்டவன் பார்த்துக்கொள்வான்.
நான் இன்றைக்கும் தொண்டன், ஆயிரக்கணக்கான பேரில் நானும் ஒருவன். இவரைப்போல சுயநலவாதி அல்ல, எந்த இயக்கத்துக்கும் இல்லாத சோதனை. எம்ஜிஆர் காலத்தில் இருந்து சோதனைகள்தான். அவற்றை எல்லாம் வென்று முதல்வரானார், எம்ஜிஆர் மறைவுக்குப் பின்னர் அம்மாவுக்கு சோதனை, அதை வென்று அவர் முதல்வரானார். அதுபோல இப்போது வரும் சோதனையை வென்று அதிமுக ஆட்சி அமைக்கும். 2026 தேர்தலில் பெரும்பான்மை இடங்களில் ஆட்சி அமைத்து முதன்முதலாக கோபியில் வெற்றி விழா கொண்டாடுவோம்” என கடுமையான விமர்சனங்களை முன்வைத்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
