திருப்பரங்குன்றம் விவகாரத்தில் அண்ணாமலையின் விமர்சனத்திற்கு பதில் சொல்ல நேரம் இல்லை என முன்னாள் அமைச்சரும், தவெக நிர்வாக குழு தலைமை ஒருங்கிணைப்பாளருமான செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.
கரூர் பெருந்துயர சம்பவத்திற்கு பிறகு ஈரோட்டில் நடக்கும் தவெகவின் பொதுக்கூட்டத்தில் அக்கட்சித்தலைவர் விஜய் பங்கேற்க உள்ளார். அக்கட்சியின் நிர்வாகிகள் கூட்டத்திற்கான அனைத்து ஏற்பாடுகளையும் செய்து வருகின்றனர். இந்நிலையில் இன்று ( டிசம்பர் 17) அக்கட்சியின் நிர்வாகக் குழு தலைமை ஒருங்கிணைப்பாளர் செங்கோட்டையன் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில், “நான்கே நாட்களில் மிகப்பிரமாண்ட ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.சிறந்த முறையில் எல்லோரும் ஏற்கும் அளவில் நிபந்தனைகள் நிறைவேற்றபட்டுள்ளது. எவ்வளவு அழகாக ஏற்பாடுகள் செய்யபட்டுள்ளது என்பதை மக்களிடம் எடுத்து செல்லலாம்.
என்னென்ன பணிகளை நிறைவேற்ற வேண்டுமோ அவை அனைத்தும் செய்யப்பட்டுள்ளது. அவசர சிகிச்சை மருத்துவ முகாம்கள் அமைக்கப்பட்டுள்ளது.
14 ஆம்புலன்ஸ் 58 மருத்துவர்கள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளனர்,
குடிநீர் கூடுதலாக 10 லாரிகளில் வழங்கப்படுகிறது. மேலும் குடிநீர் தேவை எவ்வளவோ அது செய்யப்படும்.
டிரோன் கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படுகின்றது. 60 இடங்களில் கேமராக்கள் பொருத்தப்படும்.பாதுகாப்பு அரண்கள் அமைக்கப்பட்டுள்ளது என்றார்.
மேலும் தலைவரை பொறுத்த வரை இது போன்ற பாதுகாப்பு மற்ற மாவட்டங்களுக்கு எடுத்துக்காட்டாக அமையும். தனியாக ஊடகங்களுக்கு இடம் வழங்கப்பட்டுள்ளது,
அனைவரும் சிறப்பாக கடமைகளை செய்யலாம்.
பாஸ், கியூ ஆர் கோடு வேண்டுமா என்ற சந்தேகம் மக்களிடம் இருக்கின்றது, அப்படி எதுவும் இல்லை. எவ்வளவு மக்களும் தாங்களாகவே வந்து பார்த்துச் செல்லலாம் என்றார்.
நேரமில்லை
விஜய் உள்ளிட்ட தவெகவினர் திருப்பரங்குன்றம் விவகாரத்தில் கருத்து சொல்லாமல் இருப்பது குறித்து அண்ணாமலையின் விமர்சனம் குறித்த கேள்விக்கு, அண்ணாமலைக்கு பதில் சொல்ல நேரமில்லை, கூட்டத்தை தயார் செய்யும் பணியில், நாளை நடைபெறும் நிகழ்வில் கவனம் செலுத்துகிறோம். காவல் துறை கேட்ட அபிடவிட் பதிவு செய்யப்பட்டது என்றார்.
அதிமுகவில் இருந்து யாராவது வருகின்றனரா என்ற கேள்விக்கு, சொன்னால் பிரேக் பண்ணி விடுவார்கள். ஒருவரை கழகத்தில் இணைக்க முறைகள் உள்ளது. தலைவர் கட்டளைப்படி செயல்படுவோம் என்றார்.
