விஜய் நடித்த ‘ஜனநாயகன்’ திரைப்படம் வெளியாவதில் தடைகள் ஏற்படுத்தப்பட்டால், அது தடையை உருவாக்குபவர்களுக்கே வலு சேர்க்காது; மாறாக பாதகமாக அமையும் என தமிழக வெற்றிக் கழக நிர்வாகக் குழு தலைமை ஒருங்கிணைப்பாளர் செங்கோட்டையன் தெரிவித்தார்.
கோவை விமான நிலையத்தில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர், விஜய் நடித்த ‘ஜனநாயகன்’ திரைப்படம் வெளியாவதில் உள்ள சிக்கல்கள் குறித்து எழுப்பப்பட்ட கேள்விக்கு பதிலளிக்கையில், “வளர்ந்து வரும், எதிர்காலத்தில் தமிழ்நாட்டை ஆளப்போகின்ற தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் நடித்த திரைப்படம் தமிழ்நாட்டில் எப்போது வெளியாகும் என மக்கள் ஆவலுடன் காத்திருக்கின்றனர். இப்படிப்பட்ட நிலையில் தடைகள் ஏற்படுத்தப்பட்டால், அது தடையை ஏற்படுத்துபவர்களுக்கு வலு சேர்க்காது. எங்கு இப்படிப்பட்ட சூழல் ஏற்பட்டாலும் அது வேதனைக்குரியதாகவே இருக்கும்” என்றார்.
மேலும், “உண்மையிலேயே வளர்ந்து வரும், வெற்றி பெறுகின்ற நாளைய முதல்வராக உருவாகப் போகின்ற ஒருவரின் திரைப்படத்தைத் தடுப்பது சரியானது அல்ல. அப்படி யாராவது எண்ணினால், அது அவர்களுக்கே பாதகமாக முடியும்” எனவும் அவர் தெரிவித்தார்.
தணிக்கைச் சான்றிதழ் தொடர்பாக கேட்கப்பட்ட கேள்விக்கு, “யார் தணிக்கைச் சான்றிதழ் வழங்காமல் இருக்கிறார்கள் என்பது உங்களுக்கே தெரியும்” என அவர் கூறினார்.
இதற்கு எதிராக வழக்குகள் தொடரும் திட்டம் குறித்து, “அது தொடர்பான எந்த தகவலும் தற்போது என் கவனத்திற்கு வரவில்லை” என்றார்.
ஈரோடு கூட்டத்தில் பெரியாரை நீக்க வேண்டும் என பாஜக கூட்டத்தில் பேசியதாக கூறப்படுவது குறித்து கேள்வி எழுப்பப்பட்டபோது, “ஒவ்வொருவரும் தங்களது கருத்துகளை தெரிவிக்கிறார்கள். எங்களது கொள்கை தலைவர்களில் பெரியாரும் ஒருவர். எங்களின் ஆறு தலைவர்களில் கொள்கைத் தலைவராக பெரியாரை ஏற்றுக் கொண்டிருக்கிறோம். அவர்களது கருத்து குறித்து தற்போது எதுவும் சொல்ல விரும்பவில்லை. காலம் வரும்; மக்களே அதற்கு பதில் சொல்வார்கள்” என்றார்.
தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சி அமைக்கும் என மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தெரிவித்துள்ள கருத்து குறித்த கேள்விக்கு, “ஒவ்வொருவரின் கருத்தும் ஒவ்வொன்றாக இருக்கிறது. இது குறித்து அந்தக் கூட்டணியிலேயே கேட்க வேண்டும்” என பதிலளித்தார்.
தமிழக அரசு மாணவர்களுக்கு மடிக்கணினி வழங்குவது குறித்து கேள்வி எழுப்பப்பட்டபோது,
“ஐந்து ஆண்டுகளுக்கு முன்னரே மடிக்கணினிகள் வழங்கப்பட்டிருக்க வேண்டும். ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு படித்த மாணவர்களின் நிலை என்ன என்பதை கல்வியாளர்கள் அனைவரும் புரிந்து கொள்வார்கள். இப்போது கொடுப்பதை விட, தேவையான நேரத்தில் கொடுத்திருக்க வேண்டும். குழந்தைகள் வளரும்போது பாலூட்ட வேண்டும்; வளர்ந்த பின்னர் பாலூட்டத் தேவையில்லை” என செங்கோட்டையன் தெரிவித்தார்.
