மலேசியாவை பொருத்தவரை பிரதமர் , குடியரசுத் தலைவர் மட்டும்தான் ரோட் ஷோ நடத்தியிருப்பார்கள், இந்த முறை விஜய்க்கு அனுமதி வழங்கப்பட்டிருக்கிறது என தவெக நிர்வாக குழு தலைமை ஒருங்கிணைப்பாளர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.
கோவை விமான நிலையத்தில் தமிழக வெற்றிக் கழக நிர்வாக குழு தலைமை ஒருங்கிணைப்பாளர் செங்கோட்டையன் இன்று (டிசம்ப 29) செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது
தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் நேற்று முன்தினம் மலேசியாவில் ஆடியோ ரிலீசுக்காக சென்றிருந்தார் .அந்த கூட்டத்தை பார்க்கின்ற பொழுது அண்டை நாடான மலேசியா வியக்கும் அளவிற்கு அந்த நிகழ்ச்சி இருந்தது. உலக நாடுகள் திரும்பிப் பார்க்கும் அளவிற்கு உருவாக்கப்பட்டுள்ளது.
இதுவரை மலேசியாவை பொருத்தவரை பிரதமர் , குடியரசுத் தலைவர் மட்டும்தான் ரோட் ஷோ நடத்தியிருப்பார்கள். இந்த முறை இவருக்கு அனுமதி வழங்கப்பட்டிருக்கிறது.
தமிழகத்தில் வரலாற்று நாயகனாக விஜய் வலம் வந்து கொண்டிருக்கிறார். எதிர்கால தமிழகத்தை ஆள்வதற்கு அவருடைய தலைமை வேண்டும் என்ற முறையில் பெண்கள் இளைஞர்கள் என 18 முதல் 35 வரை இருப்பவர்கள் ஒரு மனதாக குரல் கொடுத்துக் கொண்டிருப்பதை பார்க்க முடிகிறது.
பல்வேறு நிகழ்ச்சிகளில் ஆர்ப்பரித்து அலை மோதி வருகின்ற கூட்டம் 1972ல் புரட்சித் தலைவருக்கு பார்த்ததை போல, 1988ல் ஜெயலலிதாவிற்கு பார்த்ததை போல ஒரு மாற்றம் உருவாகி உள்ளது. இந்த மாற்றம் தான் தமிழகத்தில் மக்கள் சக்தியோடு விஜய் முதல்வராக அமர்வதை காட்டுகிறது.
காங்கிரஸ் நிர்வாகிகள் தவெகாவுடன் கூட்டணி குறித்து பேசி வருவது குறித்த கேள்விக்கு ,
பல இடங்களில் இந்த கருத்துக்கள் பரிமாறப்பட்டு வருகிறது. ஆனால் இந்த கருத்துக்களை பொருத்தவரை என்னை போன்றவர்களின் கவனத்திற்கு கொண்டுவரப்படவில்லை.
காங்கிரஸ் நிர்வாகிகள் கவனத்திற்கு வந்தால் தான் பதில் அளிக்க முடியும் என்றார்.
ஆர்எஸ்எஸ் பெற்றெடுத்த குழந்தை தவெக என திருமாவளவன் விமர்சித்து இருப்பது குறித்த கேள்விக்கு, ஒவ்வொரு தலைவரும் ஒரு கருத்தை சொல்கிறார்கள். அப்படி நாங்கள் சொல்ல வேண்டும் என்று சொன்னால் இலங்கை தமிழருக்கு குரல் கொடுத்த சீமான் ( திருமாவளவன் என்ற பெயரை மாற்றி தெரிவித்தார்) அங்கு விருந்து சாப்பிட்டுவிட்டு பரிசு வாங்கி வந்த காலமும் இருக்கிறது.
ராமேஸ்வரம் மீனவர்களை இலங்கை கடற்படை கைது செய்வது குறித்து தவெக கருத்து தெரிவிக்காதது குறித்த கேள்விக்கு, ஒரு புதிய இயக்கம் துவங்கியிருக்கிறது,
வரலாறு படைக்கின்ற இயக்கம். மக்கள் கோரிக்கை வைக்கின்ற பொழுது எப்படி நிறைவேற்ற வேண்டும் என்பதை ஆய்ந்து கற்றுக்கொள்ள வேண்டி இருக்கிறது. எங்களைப் பொறுத்தவரை தெளிவாக இருக்கிறோம், விஜய்யை முதல்வராக ஏற்றுக் கொள்பவர்கள் மட்டும்தான் கூட்டணியில் இணைய முடியும் எனவும் தெரிவித்தார்.
பாஜக ஆர்எஸ்எஸ் மீது தவெக விமர்சனம் வைக்காதது ஏன் திருமாவின் விமர்சனம் குறித்த கேள்விக்கு, திருமாவளவன் கருத்து வேறு, அவருடைய கருத்துக்களை கேட்கின்ற பொழுது திமுக வாஜ்பாய் அமைச்சரவையில் இருந்த பொழுது என்ன செய்து கொண்டு இருந்தார் என்பதை அவரிடம் கேட்க வேண்டும் எனவும் தெரிவித்தார்.
கூட்டணியில் எப்பொழுது மற்றவர்கள் இணைவார்கள் என்ற கேள்விக்கு, பொறுத்து இருங்கள். ஜனவரி முதல் வாரத்திற்குள் அனைத்தும் தெரியும்.
100 நாள் வேலை திட்டம் தொடர்பான கேள்விக்கு, எல்லோரும் வாழ வேண்டும். எல்லோருக்கும் வேலை வாய்ப்பு கிடைக்க வேண்டும் என்பதுதான் எங்களது நிலைப்பாடு என்றார்.
மேலும் எங்களைப் பொறுத்தவரை தெளிவாக சொல்லியிருக்கிறோம். ஈரோடு பொதுக்கூட்டத்தில் இரண்டு கருத்துக்கள் பரிமாறப்பட்டது. கொள்கை ரீதியாக யாரை எதிர்க்கிறோம் என்பதற்கு தொண்டர்கள் பதில் சொல்லியிருக்கிறார்கள்.மக்கள் உணர்வை விஜய் பிரதிபலிக்கின்றார் என்றார்.
