பொதுக்கூட்டங்களில் பேசும்போது எடப்பாடி பழனிசாமி பெயரை குறிப்பிடாதது ஏன் என்று செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு, அதிமுக பொதுச்செயலாளர், எதிர்க்கட்சி தலைவர் என்று அழுத்தமாக சொல்கிறேன் என செங்கோட்டையன் இன்று (பிப்ரவரி 14) தெரிவித்துள்ளார். Sengottaiyan says mention Edappadi
கோவையில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கு விவசாய சங்கங்கள் சார்பில் ஏற்பாடு செய்யப்பட்ட பாராட்டு விழாவில், முன்னாள் முதல்வர்கள் எம்ஜிஆர், ஜெயலலிதா ஆகியோரின் புகைப்படங்களை பயன்படுத்தவில்லை என்று கூறி அந்த விழாவை செங்கோட்டையன் புறக்கணித்தார். இதனால் அதிமுகவுக்குள் உட்கட்சி பூசல் வெடித்தது.
மேலும், பிப்ரவரி 12-ஆம் தேதி ஈரோடு கோபியில் நடைபெற்ற எம்ஜிஆர் பிறந்தநாள் விழா பொதுக்கூட்டத்தில் பேசிய செங்கோட்டையன், “அதிமுக ஒன்றாக இருக்க வேண்டும் என்று உழைத்தவன் நான். என்னை சோதிக்காதீர்கள்” என்று பேசினார்.
நேற்று (பிப்ரவரி 13) அந்தியூரில் நடைபெற்ற கூட்டத்தில், கடந்த முறை அதிமுக தேர்தலில் தோல்வியை தழுவ சில துரோகிகளே காரணம் என்று செங்கோட்டையன் பேசியது அரசியல் வட்டாரத்தில் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.
இந்தநிலையில், ஈரோட்டில் இன்று செய்தியாளர்களை சந்தித்த செங்கோட்டையனிடம், ஆர்.பி.உதயகுமார் உங்களை விமர்சித்திருக்கிறாரே என்ற கேள்விக்கு, “என்னைப் பற்றி அவர் பேசவில்லை என்று தெளிவாக விளக்கம் கொடுத்துள்ளார்” என்றார்.
துரோகிகள் என்று யாரை குறிப்பிட்டு நேற்று பேசினீர்கள் என்று செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். இதற்கு பதிலளித்த செங்கோட்டையன், “அந்தியூரில் அதிமுக தொடர்ந்து வெற்றி வாகை சூடியிருக்கிறது. ஆனால், ஒரு சிலரின் துரோகத்தால் இந்த முறை தோல்வியடைந்தோம். நான் பொதுவாக யாரையும் கூறவில்லை, அந்தியூரை மட்டும் தான் குறிப்பிட்டு சொன்னேன்” என்றார்.
இரண்டு நாள் பொதுக்கூட்டத்தில் எடப்பாடி பழனிசாமி பெயரை உச்சரிக்காதது ஏன் என்ற கேள்விக்கு, “கழக பொதுச்செயலாளர், எதிர்க்கட்சி தலைவர் என்று அழுத்தமாக சொல்லியிருக்கிறேன்” என்றார். Sengottaiyan says mention Edappadi